[X] Close

தொகுதி மாறுகிறார் பிரதமர் மோடி; புரி தொகுதியில் போட்டி?


modi

  • நெல்லை ஜெனா
  • Posted: 03 Jan, 2019 12:13 pm
  • அ+ அ-

புவனேஸ்வர்

மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலம் புரி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கு 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரதீப் புரோஹித் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்றாலும் கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட்டு எம்.பி.யானார். குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். எனினும் பின்னர் எந்த தொகுதியின் எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்கள் தவிர மாநில மொழி பேசும் மாநிலங்களிலும் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு உதவிடும் வகையில் ஒடிசா மாநிலம் புரி தொகுதியில் நரேந்திர மோடி வேட்பாளராக களம் இறங்குவார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஒடிசா மாநில எம்எல்ஏவும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரதீப் புரோஹித் இதனை உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி கடந்த முறை காசி விஸ்வநாதர் அருளுடன் வாரணாசியில் போட்டியிட்டு பிரதமரானார். இந்தமுறை  ஜெகநாதர் ஆசியுடன் புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார். அவர் புரி தொகுதியில் போட்டியிடுவதற்கு 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன’’ எனக் கூறினார். ஒடிசா மாநில பாஜக துணைத் தலைவர் சமீர் மஹாந்தே கூறுகையில் ‘‘ஒடிசாவில் இருந்து பிரதமர் மோடி போட்டியிட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி. இதன் மூலம் பாஜக பெரும் ஆதரவை பெறும்’’ எனக் கூறினார்.

புரி தொகுதியில் தற்போது பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த பிங்கி மிஸ்ரா எம்.பி.யாக உள்ளார். அவர் கடந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கு கூடுதலாக வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். புரி மக்களவை தொகுதிக்குட்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போது 6 தொகுதிகள் பிஜூ ஜனதாதளம் வசம் உள்ளன. ஒரே ஒரு தொகுதி மட்டுமே பாஜக வசம் உள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close