[X] Close

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூக முன்னேற்றத்தில் பெரும் தடை ஏற்படும்: கனிமொழி எம்.பி. கருத்து 


kanimozhi-about-bjp

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:59 am
  • அ+ அ-

திருநெல்வேலி 

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் தடை ஏற்படும்’ என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

பெரியாரின் 140-வது ஆண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மக்கள் கலைவிழாவில் அவர் பேசியதாவது:

பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்ற பெரியாரின் கருத்துக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கருணாநிதி. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்துத்துவா அமைப்புகள் ஆதிக்க மனப்பான்மையை ஒவ்வொருவருக்குள்ளும் திணிக்கும் செயல்களை செய்து வருகின்றன.

கேள்வி கேட்கக் கூடாது, எதிர்க் கருத்துகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு இந்துத்துவாவில் உள்ளது. ஆனால், அனைத்துத் தரப்பினருக்கும் கருத்துச் சுதந்திரம் அளிப்பதே பெரியாரியம்.

மத்திய பாஜக அரசு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் உள்ளது. ஜாதி, மத மோதல்களைத் தூண்டி விடும் செயல்களில் ஈடுபடுகிறது. இது தவறானது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆனால், முத்தலாக் உள்ளிட்ட மக்கள் எதிர்க்கும் மசோதாக்களை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் தடை ஏற்படும். அதற்கு இடம் கொடுக்காமல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “அனைத்துத் தரப்பு மக்களும் ஜனநாயகத்தை நுகரவும், உரிமைகளைப் பெறவும் அரசியலமைப்புச் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால், அதனை மாற்றி அமைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகிறது. பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி சிந்தனையாளர்கள் மதச்சார்பின்மையை பாதுகாக்க ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மூடப் பழக்கவழக்கங்கள் தூள் தூளாக்கப்பட்டு வருகின்றன.

சிந்தனைத் தெளிவை ஏற்படுத்த பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

விழாக்குழு செயலாளர் சூர்யா சேவியர், திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரன், திரைப்பட எடிட்டர் லெனின், எஸ்டிபிஐ கட்சி தெஹ்லான் பாகவி , பாலபிரஜாபதி அடிகள், வழக்கறிஞர் அருள்மொழி, கோவை ராமகிருஷ்ணன் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close