[X] Close

திரிசங்கு நிலையில் அதிமுக: கூட்டணிக்கு இழுக்கும் பாஜக: மக்களவைத் தேர்தலில் கைகோர்க்குமா?


aiadmk-in-a-dilemma-over-alliance-with-bjp

  • போத்திராஜ்
  • Posted: 30 Dec, 2018 12:31 pm
  • அ+ அ-

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிலாமா அல்லது தனித்து நிற்கலாமா என்ற குழப்பமான நிலையில் அதிமுக இருந்து வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அதிமுக சந்தித்தது. அப்போது ஜெயலலிதா மேற்கொண்ட வலுவான தேர்தல் பிரச்சாரம், மோடியா அல்லது இந்த லேடியா பார்த்துவிடலாம் என்று மக்கள் மனதில் நிற்கும் பிரச்சார யுத்தி ஆகியவற்றால், 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக அபாரமாக வென்றது. ஒரு தொகுதியில் பாஜகவும், பாமகவும் வென்றது.

2014-ம் ஆண்டில் மோடியை முன்னிறுத்தி பாஜக மேற்கொண்ட பிரச்சாரமும்தமிழகத்தில் எடுபடவில்லை. அதேசமயம், தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தபோதும் இரு இடங்களில் மட்டுமே வென்றன. ஆனால், தேர்தலுக்குப் பின் அந்தக் கூட்டணி கானல் நீராகிப்போனது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, பிரச்சினைகள், திமுக தலைவர் கருணாநிதி மறைவு ஆகியவற்றால், தமிழக்தில் உருவான மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ள பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

ஒருநேரத்தில் திமுகவுடனும் பாஜக நெருக்கம் காட்டி கூட்டணிக்காக முயற்சித்ததாகப் பேசப்பட்டது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவோடு இருந்தபோது பிரதமர் மோடி நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றார். இதனால், தமிழக அரசியலில் புதியதொரு கூட்டணிக்கு பாஜக முயல்கிறதா என்றும் பேசப்பட்டது.

ஏனென்றால் பாஜகவுடன் ஏற்கனவே கருணாநிதி கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்று இருந்ததால், அதற்கான சாத்தியம் இருக்கும் என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், காவிரி விவகாரத்தில், கஜா புயல் போன்றவற்றில் மத்திய அரசு தமிழகம் மீது காட்டிய பாராமுகத்தை திமுக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி அனைவரின் கருத்தையும் திமுக மாற்றியது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எதிர்கால பிரதமர் வேட்பாளராக அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடன் தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டது. மேலும், கடந்த 2014-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, மதிமுகவும் எதிராகத் திரும்பிவிட்டனர். மதிமுக திமுக கட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால், பாஜக மாநிலத்தில் தனித்து நிற்பதைக் காட்டிலும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுவதே பாதுகாப்பானது என்று நம்புகிறது. அதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையாகவே, கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “ பாஜக எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. 40 தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கேட்குகிறது. அதில் புதுச்சேரியும் அடங்கும். மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுகவும் மற்ற கட்சிகளும் போட்டியிடலாம் என்றும் கூறுகிறார்கள்” எனத் தெரிவிக்கின்றனர்.

இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கைகோர்க்கலாமா அல்லது தனித்து நின்று போட்டியிடலாமா என்ற குழப்பமான நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பலை அதிகரிக்கத் தொடங்கி இருப்பதன் விளைவு, சமீபத்தில் 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தால், தங்களுக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்கும் என்றும் அதிமுகவினர் யோசிக்கிறார்கள்.

குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும் தேர்தலில் இரு கட்சிகளின் கொள்கையும் மாறுபட்டு இருக்கிறது. இருகட்சிகளும் நட்புறவோடு இருந்தாலும்கூட, முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஏனென்றால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் உருவாக்கி வைத்துள்ள முஸ்லிம் நம்பிக்கையைக் கட்சி இழந்துவிடக்கூடாது என்ற அச்சம் காரணமாக அந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கவில்லை.

அதேசமயம், தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடது சாரிகள் போன்றவை ஒரு அணியில் வலுவான கூட்டணியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கட்சியினர் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவ்வாறு கூட்டணி அமைந்தால், அதை எதிர்க்க தங்களுக்கும் வலுவான கூட்டணி வேண்டும் என்றும் அதிமுகவினரில் ஒருதரப்பினர் விரும்புகின்றனர்.

அதேசமயம், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வைக்க வேண்டாம், தேர்தலுக்கு பின்பு தேவைப்பட்டால் கூட்டணி அமைக்கலாம் என்றும் பாஜகவினரிடம் அதிமுக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதைக் காட்டிலும் தனித்து நின்று போட்டியிடுவதுதான் தங்களுக்குச் சிறப்பாக இருக்கும் என்று அதிமுக விரும்புகிறது.

ஆனால், தமிழக அமைச்சர்களில் சிலர் வருமானவரித்துறை சோதனை, சிபிஐ விசாரணை ஆகியவற்றில் சிக்கி இருப்பதால், அதைப்பயன்படுத்தி கூட்டணிக்குள் அதிமுகவை இழுக்கவும் பாஜக முயற்சிக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், மக்களவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்துச் சந்திப்பதா, அல்லது தனித்து நின்று சந்திப்பதா என்ற குழப்பமான நிலையில் அதிமுக இருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close