[X] Close

வெல்டன் என்.ஐ.ஏ!- கணினி தகவல் இடைமறித்தலை நியாயப்படுத்தும் ஜேட்லி


arun-jaitley-defends-big-brother-order-as-he-praises-nia-s-terror-arrests

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Dec, 2018 16:18 pm
  • அ+ அ-

ஐஎஸ். தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, நாட்டில் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்த 10 பேர் தேசிய புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் கணினி தகவலை இடைமறித்ததாலேயே இது சாத்தியமாகியதாகக் கூறி மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் அருண் ஜேட்லி.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அனுமதியளித்தது.

இந்நிலையில்,  ஐஎஸ். தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, நாட்டில் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்த 10 பேர் தேசிய புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதற்கு என்ஐஏ புலனாய்வு அமைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமைச்சர் அருண் ஜேட்லி. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்களில், "தீவிரவாத குழுக்களை கண்டறிந்த என்ஐஏ அமைப்பினருக்கு பாராட்டுகள். கணினி வழி தகவல்களை இடைமறிக்காவிட்டால் இத்தகைய கைது நடவடிக்கைகள் சாத்தியமாகியிருக்குமா?

தேசத்தின் பாதுகாப்பும் இறையான்மையும்தான் பிரதானம். தனிநபர் சுதந்திரமும் வாழ்க்கையும் வலுவான ஜனநாயக நாட்டில்தான் தழைத்தோங்க முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.

கணினி தகவல் இடைமறித்தலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் ட்வீட் செய்த ராகுல் காந்தி, "மத்திய அரசின் இந்த நடவடிக்கை 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு அரசு எவ்வளவு பெரிய சர்வாதிகாரியாக செயல்படுகிறது என்பதையே உணர்த்தும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் ஜேட்லி, இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு இதனாலேயே பெரும் சதி வேலை முறியடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close