[X] Close

‘‘பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி’’ - ஸ்டாலின் திட்டத்தை ஏற்கத் தயங்கும் கூட்டணிக் கட்சிகள்


no-takers-for-stalin-s-proposal-to-project-rahul-gandhi-as-pm

  • நெல்லை ஜெனா
  • Posted: 18 Dec, 2018 16:29 pm
  • அ+ அ-

புதுடெல்லி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கருணாநிதி, சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தோழமை கட்சிகள் பல பாராட்டு தெரிவித்துள்ளன.

எனினும் தேசிய அளவில் காங்கிரஸூடன் நட்பு பாராட்டும் பல கட்சிகளும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயக்கம் காட்டி வருகின்றன.

இதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் மாநிலங்களவை கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில் ‘‘பிரதமர் பதவியை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு பிறகு அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும்’’ எனக்கூறினார்.

இதுகுறித்து தெலுங்குதேச கட்சியின் மாநிலங்களவை எம்.பி ரமேஷ் கூறுகையில் ‘‘திமுகவை பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது. இதனால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அந்தக் கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் அதே நிலைமை எங்களுக்கு இல்லை. எங்களை பொறுத்தவரை பிரதமர் பதவி குறித்து தேர்தலுக்கு பின்பே முடிவு செய்வோம்’’ எனக் கூறினார்.

இதுபோலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை கூற முழு உரிமை உள்ளது. 1998-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபோதும் சரி, 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோதும் சரி, தேர்தலுக்கு பின்பே பிரதமர் பற்றிய முடிவெடுக்கப்பட்டது.

அதுவே நமது நாட்டிற்கு வழக்கமானது. ஜனநாயகத்துக்கும் வலு சேர்க்கும். தேசிய அளவில் கூட்டணி என்பது தேர்தலுக்கு பிறகு தான். அதுவரை மாநில அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பணியாற்றுவது தான் நடைமுறை சாத்தியம்’’ எனக் கூறினார்.

3 மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் முக்கிய தோழமைக் கட்சித் தலைவர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close