[X] Close

ராகுலின் கரங்களுக்கு வலு சேர்க்க ஸ்டாலினைப் போல் மற்ற தலைவர்களும் தயாரா?


rahul-as-pm-candidate-how-does-parties-see-stalins-call

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Dec, 2018 11:05 am
  • அ+ அ-

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், நாட்டைப் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து ராகுலின் கரங்களுக்கு வலு சேர்ப்போம் எனப் பேசினார்.

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முனைப்பில் பல பிராந்தியக் கட்சிகளும் கைகோத்து வரும் நிலையில் ஸ்டாலின் தனது தனிப்பட்ட விருப்பத்தை பொது மேடையில் கூறியது மற்ற தலைவர்களை அவ்வளவு திருப்தி படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி எதிர்கொள்ளும் முதல் சவாலாகவே இது பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பு சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம் போன்ற கட்சிகளை அவ்வளவோ ஈர்க்கவில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சியின் ஞ்யான்ஷ்யாம் திவாரி, "பாஜகவுக்கு எதிராக திரளும் அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் விவாதத்தில் இருக்கும் விஷயம். 2019 தேர்தல் முடிவுகளே மத்தியில் யார் தலைமையில் ஆட்சி என்பதை தீர்மானிக்கும். இப்போதைக்கு தேர்தலை எதிர்கொள்ள தலைமையை முன்வைப்பதைவிட கொள்கையை முன்வைப்பதே சரியாக இருக்கும்" என்றார்.

தெலுங்கு தேச கட்சியின் தினகர் கூறும்போது, "2019 தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் இந்த கூட்டணியின் பிரதான கட்சி என்பதாலும் வழிநடத்தும் இடத்தில் உள்ளதால் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை முதன்மை தேர்வாகக் கருதுவது இயல்பே" என்றார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிட்ச் கட்சியின் டி.ராஜா, "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். ஆனால், இது குறித்து இடது சாரிகளும், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளும் அலசி ஆராயவேண்டியுள்ளது. இனிவரும் நாட்களில் எல்லாம் எப்படி நகர்கின்றன என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், இன்று மூன்று மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு மாயாவதி ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close