[X] Close
 

ராமநாதபுரம் பால் கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பு மனு தாக்கலின்போது அதிமுக, டிடிவி தரப்பினரிடையே தள்ளுமுள்ளு; மோதல்


ramanathapuram-ttv-admk

கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 27 Mar, 2018 20:42 pm
  • அ+ அ-

பால் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின்போது அதிமுக-டிடிவி தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல் சிவகாசியிலும் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ள முதற்கட்டத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது.

ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் ராமநாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது.

11 இயக்குநர்களுக்கான தேர்தலுக்கு அதிமுக தரப்பில் அமைச்சர் எம்.மணிகண்டனின் ஆதரவாளர்கள் தஞ்சி சுரேஷ் தலைமையில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் நேற்று பகல் 12.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றனர். அவர்கள் தேர்தல் அலுவலரின் அறையை பூட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதனால் அங்கு கூடியிருந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களான ஒன்றியச் செயலாளர் முக்தீஸ்வரன், நகர் செயலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் டிடிவி அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது, அவர்களை உள்ளேவிடாமல் போலீஸார் தடுத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் மட்டும் மனு தாக்கல் செய்தார்.

அதையடுத்து பகல் 2 மணிக்கு மேல் அதிமுக நகர் செயலாளரும், பால் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அங்குச்சாமி தலைமையில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றனர். போலீஸார் அவர்களை உள்ளேவிடாமல் தடுத்தனர். வாக்குவாதத்திற்கு பின் உள்ளே சென்ற அவர்கள், தேர்தல் அலுவலரிடம் மனுவைக் கொடுத்தனர். அவர்கள் மனுவை தேர்தல் அலுவலர் வாங்கவில்லை.

அங்குச்சாமி அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக செயல்படுவதால் அவரையும், அவரது தரப்பினரையும் வேட்பு மனு தாக்கல் செய்ய விடவில்லை என கூறப்படுகிறது.

அதிமுக நகர் செயலாளர் அங்குச்சாமி கூறியதாவது:

தேர்தல் அலுவலர் அரசு, அமைச்சர் மணிகண்டன் தரப்பினரிடம் பணம் பெற்றுக்கொண்டு எங்களது வேட்பு மனுவை ஏற்கவில்லை. ராமநாதபுரம் டிஎஸ்பி நடராஜன், எங்களை உள்ளேவிடாமல் தடுத்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்களிடமே, அமைச்சர் உத்தரவால் தேர்தல் அலுவலரும், போலீஸாரும் அராஜகமாக செயல்பட்டு வேட்பு மனுவை பெறாமல் செய்துவிட்டனர் என்றார்.

இது குறித்து தேர்தல் அலுவலர் அரசுவிடம் கேட்டபோது, மொத்தம் 13 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்ய வந்த எல்லோரிடமும் மனுக்களை பெற்றோம் என்றார்.

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டி தொடக்க வேளான் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

அவர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் அதிமுகவினர் தடுத்தனர். இதனால் இரு கட்சியினரிடையே லேசான மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, இருதரப்பினரையும் போலீஸார் விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி முருகன் தேதி குறிப்பிடாமல் வேட்பு மனு தாக்கலை ஒத்தி வைத்தார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close