[X] Close

5 மாநிலத் தேர்தலில் பலித்ததா யோகி ஆதித்யநாத் பிரசாரம்?


yogi-factor-played

  • நெல்லை ஜெனா
  • Posted: 12 Dec, 2018 17:39 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் இதுவரை இல்லாத அளவு பிரதமர் மோடி, அமித் ஷாவை விடவும் அதிகமான இடங்களில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். ஆனால் அவர் செய்த பிரசாரத்துக்கு உரிய வெற்றி கிடைத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.   

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆட்சி நடத்திய சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸிடம் வெற்றியை பறிகொடுத்தது பாஜக.

இந்த 5 மாநில தேர்தலையொட்டி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பல நாட்களாக சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரித்தனர். காங்கிரஸில் உள்ளூர் தலைவர்கள் பலர் இருந்தபோதிலும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். காங்கிரஸை பொறுத்தவரை ராகுல் காந்தியே நட்சத்திர பேச்சாளராக இருந்தார்.

அதேசமயம் பாஜகவில் பிரதமர் மோடி, அக்கட்சித் தலைவர் அமித் ஷா, மாநில முதல்வர்கள் என பட்டாளமே தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியது. பாஜகவில் பலர் பிரசாரம் செய்தாலும் நட்சத்திர பேச்சாளராக பிரதமர் மோடியை ஜொலிப்பது வழக்கம்.

ஆனால் 5 மாநில தேர்தல்களில் பிரதமர் மோடி, அமித் ஷாவை விடவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகமான தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் 10, ராஜஸ்தானில் 12, தெலங்கானாவில் 5, சத்தீஸ்கரில் 4 என மொத்தம் 31 பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

அமித் ஷா, மத்திய பிரதேசத்தில் 23, ராஜஸ்தானில் 15, தெலங்கானாவில் 10, சத்தீஸ்கரில் 8 என மொத்தம் 56 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். அதேசமயம் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேசத்தில் 17, ராஜஸ்தானில் 26, தெலங்கானாவில் 8, சத்தீஸ்கரில் 23 என மொத்தம் 74 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி யோகி ஆதித்யநாத் பிரசாரம் பெரிய அளவில் பரபரப்பாக இருந்தது. ஹைதராபாத்தில் பேசிய ஆதித்யநாத், நிஜாம் மன்னர்களையும், அந்த தொகுதி எம்.பி ஓவைசியையும் கடுமையாக விமர்சித்து  பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதுபோலவே ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆதித்யநாத், ஹனுமன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடியை விடவும் கூடுதலாக பொதுக்கூட்டங்களில் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். எனினும் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. தெலங்கானா மற்றும் மிசோரமிலும் பெரிய சாதனை எதையும் நிகழ்த்தவில்லை.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் ‘‘யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்த இடங்களில் 74கில், 45 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் பிரச்சாரம் செய்த 23 இடங்களில் 7 இடங்களில் பாஜக வென்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த 17 இடங்களில் 14 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் பிரசாரம் செய்த 26 இடங்களில் 13 இடங்களில் பாஜக வென்றுள்ளது. தெலங்கானாவில் பிரசாரம் செய்த 8 இடங்களில் ஒன்றில் பாஜக வென்றுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close