[X] Close

அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


kanimozhi-accuses-ruling-party

கடையநல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 11:47 am
  • அ+ அ-

அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று திமுக மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தார்.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், கடையநல்லூர் நகராட்சி முன்னாள் தலைவருமான சைபுன்னிஸா தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி. பேசியதாவது:

அண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்றது. தமிழகத்தை தற்போது ஆளும் அதிமுக அரசு பின்னோக்கி செல்ல வைத்திருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தின் அவல நிலையை சரிசெய்ய இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆகும் என மறைந்த கருணாநிதி ஒருமுறை என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் கூறியதை நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

ஊழல் பெருகி விட்டது

கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டதை மக்கள் அறிவர். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஒரு தொழிற்சாலைகள் கூட இங்குவரவில்லை. சாலை விரிவாக்கப் பணிகளில்கூட முதல்வரின் உறவினருக்குத்தான் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

கொல்லம்- திருமங்க லம் நான்கு வழிச்சாலைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் குஜராத்தில் பட்டேல் சிலையை நிறுவியுள்ளது. ஆனால், தமிழகத்தில் புயல் பாதிப்பால் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு ரூ.350 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

கடந்த 2008-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் 2 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அரசாணை வெளியிட்டார். ஆனால், 2018 வரை சுமார் 5,000 மாற்றுத் திறனாளிகள் நிரந்தர அரசு வேலையின்றி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதியோர் உதவித் தொகை தற்போது பலருக்கும் சென்றடையவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் பொ.சிவபத்மநாதன், அப்துல் வகாப், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நகர திமுக செயலாளர் மு.க.சேகனா வரவேற்றார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close