[X] Close

ஒரே தொகுதியில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினரா?- பாட்டி கதை சொல்கிறார் பழனிசாமி: ராமதாஸ் கிண்டல்


ramadoss-slams-edapadi-in-twitter

எடப்பாடி, ராமதாஸ் - கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 18:34 pm
  • அ+ அ-

ஒரே தொகுதியில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததாக பத்திரிகையாளர்களிடம் பாட்டி கதை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி என ராமதாஸ் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் போய்ச் சேராத நிலையில் அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் இரண்டு நாள் கழித்து ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார். அதிலும் வானிலை மோசம் என பாதியில் திரும்பினார்.

தரையில் சென்று மக்களோடு மக்களாக பிரச்சினைகளைப் பாருங்கள். அவர்கள் துயரம் தெரியும் என கமல் போன்றோர் இதை விமர்சனம் செய்தனர். மறுநாளே நிவாரண நிதி கேட்டு டெல்லிக்கு முதல்வர் பழனிசாமி சென்றார்.

ஹெலிகாப்டரில் சென்றே கணக்கெடுத்துவிட்டதாக முதல்வர் விஞ்ஞானப்பூர்வமான கருத்தைக் கூறியிருக்கிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்று பிரதமரைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி 16,341  கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளதாகவும் உடனடியாக ரூ.1500 கோடி இடைக்கால நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பிரதமர் மோடி பதில் எதுவும் அளிக்காத நிலையில் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி தாம் ஒரே தொகுதியில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளதாக பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தனியார் ஊடகம் அளித்த விருதினைப் பெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார்.

இவை இரண்டையும் ராமதாஸ் ஒருசேர தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கிண்டலடித்துள்ளார். 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தது 4 முறை தோற்றதையும் சேர்த்தா? என்று கிண்டலடித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவுகள்:

“ஒரே தொகுதியில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன்: எடப்பாடி - அப்படியா... எம்.பி.க்கும், எம்.எல்.ஏவுக்கும் சேர்த்து போட்டியிட்டதே 9 முறை தானே? அதில் 4 தோல்வியும் அடங்குமே? விடுங்க... பிள்ளைகளுக்கு பாட்டி கதை சொல்வது போல டெல்லி பத்திரிகையாளர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார்.”எனக் கிண்டலடித்துள்ள அவர் விருது வாங்கியதை குறிப்பிட்டு நிதி வாங்கப் போனவர் கிடைக்காததால் விருதை வாங்கி வந்தார்.

“டெல்லியில் ‘இந்தியா டுடே’ விழாவில் தமிழகத்திற்கு 4 விருதுகள். எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்: செய்தி - டெல்லிக்கு புயல் நிவாரணம் வாங்கச் சென்றார்... அது கிடைக்காத நிலையில் விருது வாங்கி வந்தார். முதல்வரின் திறமை வியக்கவைக்கிறது.” என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close