[X] Close

குரங்கணியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து முதலில் மலையேறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்


kurangani-accident-ambulance

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஜெகதீசன் (கண்ணாடி அணிந்தவர்) மற்றும் செல்வத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சால்வை அணிவித்து பாராட்டினார் மாநிலச் சுகாதாரச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 15:31 pm
  • அ+ அ-

தேனி மாவட்டம், குரங்கணியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற முதலில் மலையேறிச் சென்று சம்பவத்தின் விபரீதத்தை தெரியப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை சுகாதாரச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

குரங்கணியில் இருந்து மலையில் ‘ட்ரக்கிங்’ செல்ல இரு வழி உண்டு. வனத்துறை அனுமதியுடன் டாப் ஸ்டேஷனுக்கு மலையேறலாம். குரங்கணி - கொழுக்கு மலைக்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால், இந்த வழியில் தான் 36 பேரும் சென்றிருந்தனர். மலையேற்றம் முடிந்து, மார்ச் 10 -ம் தேதி மாலை தரையிறங்கும் வழியில் கொழுக்குமலை அருகிலுள்ள ஒத்தமரம் பள்ளத்தாக்கில் அவர்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துள்ளனர். மீண்டும் பயணத்தை தொடங்கும்போதுதான் காட்டுத்தீ சுற்றி வளைத்துள்ளது. இதனால் அவர்கள் உயிர் தப்பிக்க, சிதறி ஓடினர். இதில் 10 பேர் தப்பினர். எஞ்சியவர்கள் தீயில் சிக்கினர்.

‘டிரக்கிங்’ குழுவை ஒருங்கிணைத்தவர்களில் நிவேதா என்பவரும் ஒருவர். இவர் லேசான காயத்துடன் தப்பினார். காட்டுத்தீ பற்றி இவரும், முத்துலட்சுமியும்தான் முதலில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின், சென்னை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் தேனி காவல் நிலையம் அருகிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஜெகதீசன், செல்வம் ஆகியோருக்கு மாலை 3.15 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. இருவரும் ஆம்புலன்ஸில் 1 மணி நேரத்தில் குரங்கணி சென்றனர். பின்னர் வாகனத்தை குரங்கணியில் நிறுத்திவிட்டு தண்ணீர், முதலுதவிக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு மலை மீது ஏறி, சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள விபரீத சூழலை தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கு தெரிவித்து மீட்பு நடவடிக்கைக்கு உதவி உள்ளனர். இதற்காக ஜெகதீசன், செல்வத்தை மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

சம்பவம் பற்றி ஜெகதீசன், செல்வம் ஆகியோர் கூறியதாவது: சனிக்கிழமை பணியில் இருந்தபோது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பவம் பற்றிய தகவலைக் கூறிய நிவேதா என்பவரின் மொபைல் எண்ணை கொடுத்தனர். பின்னர் துரிதமாக குரங்கணி சென்றோம். மலைக்கு வாகனத்தில் செல்ல முடியாததால் சாக்கில் மருந்துகளை கட்டிக்கொண்டு மலையேறினோம். 2 கி.மீ. சென்றதும் போன் இணைப்பு கிடைக்கவில்லை. அருகில் வனத்துறை அலுவலக வீட்டில் இருந்த தொலைபேசி மூலம் நிவேதாவை தொடர்பு கொண்டபோது நிலைமை மோசமாக இருப்பதை அறிந்தோம். அவரது தகவலின்பேரில் சுமார் 10 கி.மீ. தூரம் சென்றபின் சம்பவ இடத்தை கண்டறிந்தோம். அங்கு பாறை இடுக்குகளில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பார்த்து அதிர்ந்தோம். உடலில் துணிகள் இல்லாததால் எங்களது சட்டைகளை கொடுத்தோம். காப்பாற்றுங்கள், தண்ணீர் கொடுங்கள் என கதறினர். நாங்கள் கொண்டு சென்ற மருந்து பொருட்கள் மூலம் அவர்களுக்கு முதலுதவி செய்தோம். அதன்பின், அங்குள்ள நிலைமையை தேனி ஆட்சியர், போலீஸாருக்கு தெரிவித்தோம்.

செல்போனில் சில காட்சிகளை படமெடுத்து ‘வாட்ஸ் ஆப்’ மூலம் அனுப்பினோம். அங்கிருந்த சூழலை பார்த்தபோது, தீ சுற்றி வளைத்ததால் அவர்களால் தப்பிக்க வழியில்லாமல் போனது.

செங்குத்தான மலையில் ஏற முடியாமல் சிலர் பள்ளத்தாக்கில் குதித்துள்ளனர். இதில் 10 பேர் மட்டும் காயமின்றி தப்பினர். மற்றவர்கள் பாறை இடுக்குகளில் பதுங்கினர். முதலில் சென்று பதுங்கிய ஓரிருவர் லேசான காயத்துடன் தப்பினர். ‘கூடு’ போன்று ஒருவர் மீது, ஒருவர் பதுங்கியபோது, விளிம்பில் இருந்தவர்களுக்கு கடும் தீக்காயம் ஏற்பட்டது. குழுவாக பதுங்கிய போது, உள் பகுதியில் இருந்து தப்பியவர்கள்தான் நிவேதா, முத்துலட்சுமி. இவர்கள்தான் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இவர்கள் மூலமே மற்றவர்களை பற்றிய விவரம் தெரிந்தது. காட்டுத் தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற ஒருவிதமான ஓலியை எழுப்பி மலை கிராமத்தினரை வரவழைத்தோம். மலைக் கிராமத்தினர் அவர்களை மீட்க பெரிதும் உதவினர். இரவு முழுவதும் காட்டுக்குள் இருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், சிலரை காப்பாற்ற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இந்த சம்பவத்தின் துயரத்தை மறக்கவே முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- என். சன்னாசி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close