[X] Close

தலைமைச் செயலக நாற்காலிகளும் தங்கராஜும்!


mending-the-seats-of-power-at-the-secretariat

படம்: பி.ஜோதிராமலிங்கம்

  • kamadenu
  • Posted: 21 Jul, 2018 13:01 pm
  • அ+ அ-

டெனிஸ் எஸ்.ஜேசுதாசன்

சென்னை தலைமைச் செயலகத்தில்தான் தங்கராஜுக்கு வேலை. 15 வருடங்களாக அங்குதன் வேலை செய்கிறார். தலைமைச் செயலகத்தில் இருக்கும் அத்தனை துறை அதிகாரிகளுக்கும் தங்கராஜைத் தெரியும். தாழ்வாரத்தில் நடந்து போகும்போதே அதிகாரிகள் பலர் தங்கராஜைப் பார்த்து புன்னகைப் பூக்காமல் செல்வதில்லை. அந்த அளவுக்கு அவர் அங்கு அறியப்பட்டவர்.

அட தங்கராஜ் ஏதோ அமைச்சரின் வலது கை, பெரிய அதிகாரியின் காரியதரிசி என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். தங்கராஜ், தலைமைச் செயலகத்தில் உள்ள வயர் நாற்காலிகளை பழுதுபார்க்கும் ஊழியர்.

இவருடைய வேலை தலைமைச் செயலகத்தில் பழுதடைந்த நாற்காலிகளை சரி செய்து தருவதே. தலைமைச் செயலகத்தின் ஓ.பி. (Office Procedure) அலுவல் நடைமுறைத் துறையிலிருந்து தங்கராஜுக்கு ஆர்டர்கள் வரும். அதைப் பொருத்து எந்த துறை நாற்காலிகளைச் சரி செய்ய வேண்டுமோ அந்தத் துறைக்குச் சென்றுவிடுவார். அங்கு வாசலில் ஒயர் சேர்களை வைத்து தனது பணியைத் தொடங்கிவிடுவார். சில நேரங்களில் இத்தனை நாட்களுக்குள் நாற்காலி தயார் நிலையில் வேண்டும் என்ற உத்தரவும் வருமாம். தங்கராஜும் குறித்த நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்துவிடுவார் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

தலைமைச் செயலகத்தில் 15 ஆண்டு காலம் குறித்து தங்கராஜிடம் கேட்டபோது, "எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்ட புதுவயல். 9-வது படித்தவுடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். சென்னை வந்தபோது கிண்டியில் எனக்கு ஒருவர் இந்தத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். பின்னர், நண்பர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் இந்தப் பணியை செய்தார். அவருடன் நானும் இங்கு வந்தேன். இப்போது அவர் வாட்ச்மேன் வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால், நான் இன்னமும் இங்கேயே இருக்கிறேன்.

எனக்கு வயர் நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் இந்த வேலை மட்டும்தான் தெரியும். எனது வேலை சுத்தமாக இருப்பதாக இங்குள்ள அதிகாரிகள் பலரும் பாராட்டியிருக்கின்றனர். அண்மையில் அமைச்சர் ஒருவரது வீட்டில் வயர் நாற்காலிகளை சீரமைக்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. எனது வேலை நேர்த்தியாக இருப்பதற்குக் கிடைத்த பரிசு அது.

தலைமைச் செயலகத்தில் வயர் நாற்காலிகள் பயன்படுத்தப்படும்வரை நானும் இங்கேதான் வேலை செய்வேன்" என்று எளிமையாகக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close