[X] Close

ரூ.10-க்கு சாப்பாடு!- மதுரை ராமு தாத்தாவின் மகத்தான சேவை


a-meal-for-rs-10

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jul, 2018 15:28 pm
  • அ+ அ-

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர் வள்ளலார். அந்த வள்ளலார் அருள்பாலிக்கும் வடலூருக்குச் சென்றுவந்த பிறகு ராமு தாத்தாவின் வாழ்க்கையே மாறியிருக்கிறது. வடலூர் அன்னதானங்களால் ஈர்க்கப்பட்டு அன்று அன்னமிடத் தொடங்கிய கைகள் இன்றும் தொடர்ந்து சேவை செய்து வருகின்றன. 
மதுரை அண்ணா பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு சிறிய கடை இருக்கிறது. கடையின் பெயர் வள்ளி டிபன் சென்டர். பெயரல்ல இந்தக் கடையின் சிறப்பம்சம். சேவை அதுதான் இந்தக் கடையின் அடையாளர்.
1967-ல் ஆரம்பிக்கப்பட்ட கடை 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது இந்தக் கடையில் ஒரு சாப்பாடு எவ்வளவு தெரியுமா ரூ.10!-

பத்து ரூபாய்க்கு அளவு சாப்பாடு அதுவும் நல்ல அரிசியில் பொங்கப்பட்டிருக்கிறது. சாம்பார், ரசம், மோர் ஒரு கூட்டும் கொடுக்கிறார்கள். காலையில் இட்லி, தோசை, பொங்கல், வடை கிடைக்கிறது.
அதுவும் 10 ரூபாய்தான். 4 இட்லி ரூ.10/-, 2 தோசை ரூ.10/- பொங்கல் ரூ.10/- வடை ரூ.5/-. இதுதான் விலைப்பட்டியல்.
அன்றாடம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து செல்வோரும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களும்தான் இவரது பெரும்பாலான வாடிக்கையாளர்கள்.
மதிய வேளையில் நாமும் அங்கு சென்றிருந்தோம். ஒரு பை நிறைய பூந்தி அதில் ஒரு கரண்டியைப் போட்டுக் கொண்டு கல்லா அருகே வருபவர் யாராக இருந்தாலும் கை நிறைய பூந்தி தந்துகொண்டிருந்தார்.
வணக்கம் என்றவுடன் தலை நிமிரவில்லை. முதலில் பூந்தியை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டவுடன் முகம் பார்த்து வணக்கம் சொன்னார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 

"உட்காருங்க. நிறைய பேர் பேட்டி எடுத்திருக்காங்க. நீங்க எந்த பத்திரிகை"ன்னு மீண்டும் கேட்டுக்கொண்டார்.
அதற்குள் கடைக்குள் கூட்டம் நிரம்பியிருந்தது. 6 பேர் அமர்ந்து சாப்பிடலாம். அதுதவிர பார்சலுக்காக நிறைய பேர் காத்திருந்தனர். அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை கேட்டு கடையில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு "வாங்க.. வீடு பக்கத்துலதான் இருக்கு" என்று அழைத்துச் சென்றார்.

கடையிலிருந்து 1 நிமிட நடையில் வீடு. அந்தக்காலத்து வீடு. ராமுதாத்தா கதவைப் பூட்டவேயில்லை. கேட்டால்... யாரும் வீட்டுக்குள் அத்துமீறி வரமாட்டார்கள் என்கிறார்.

வீட்டுக்குள் இருந்த பீரோவை ஆர்வமுடன் திறந்து தன்னை கவுரவிக்க அளிக்கப்பட்ட கோப்பைகளை ஒரு குழந்தையைப் போல் துள்ளலுடன் காண்பித்தார். தன்னைப் பற்றிய செய்திகள் வந்த செய்தித்தாள்களை எல்லாம் சேகரித்து வைத்திருந்தார்.

ஐயா உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
என் பெயர் ராமு சேர்வை. எனக்கு சொந்த ஊர் திருமங்கலம் கல்லிக்குடியில் இருக்கும் வில்லூர். அப்பா, அம்மா, அண்ணன், நான் என்று வசதியாகத்தான் இருந்தோம். அம்மா இறந்தபிறகு எல்லாமே மாறிவிட்டது. அப்பாவின் ஊதாரித்தனத்தால் செல்வத்தை இழந்தோம். நான் வீட்டைவிட்டே வெளியேறினேன். எங்கெங்கோ சுற்றித்திரிந்தேன் கிடைத்த வேலையைச் செய்தேன். ஓட்டல் வேலைகளில் அனுபவம் அதிகமானது. 1952-ல் மதுரை வந்தேன். அப்போதும் ஒரு ஓட்டலில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். 5 வருடங்கள் கழித்து என்னை எனது மாமா ஒருவர் பார்த்துவிட்டார். அவர் என்னை அடையாளம் கண்டு அவரது மகளை எனக்குத் திருமணம் செய்துவைத்தார். 7 பிள்ளைகள் பிறந்தனர். 4 மகன்கள், 3 மகள்கள். 2 மகன்கள் இறந்துவிட்டனர். 

உணவகம் நடத்த வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது?
எனக்கு எல்லாமே என் மனைவி பூரணத்தம்மாள் தான். நான் வேலை பார்த்த கடையில எனக்கு அப்ப சம்பளம் ரொம்ப கம்மி. அதைவச்சிக்கிட்டு குடும்பத்த நகர்த்த சிரமமா இருந்துச்சு. அப்போதுத்தான் ஒரு உணவகத்தை ஆரம்பிக்கலாம்னு பூர்ணத்தம்மாள் சொன்னார். பூர்ணம் கைப்பக்குவமே தனி. அதனால 1967-ல் இந்தக் கடையைத் திறதோம். ரூ.1,25-க்கு அப்போ சாப்பாடு போட்டோம். சாதம், சாம்பார், ரசம், மோர், இரண்டு காய்கறிகள் என்று வழங்கினோம். விலைவாசி ஜிவ்வுனு ஏறிச்சி. 19971-ல் ரூ.5 என்று விலை உயர்த்தினேன். அப்புறம் 2001-ல் ரூ.6 என்று விலை உயர்த்தப்பட்டது. இப்ப கடந்த வருசம் 2017 முதல் ரூ.10-க்கு சாப்பாடு விக்கிறேன்.

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு எவ்வளவு தூரம் உதவியாக இருக்கிறார்கள்?
எனது மூத்த மகன்கள் இருவரும் இறந்துவிட்டனர். அவர்கள் இருக்கும்போது எனக்குக் கடையில் உதவியாக இருப்பார்கள். என்னை பெருமையாக நினைத்தார்கள். ஆனால், மற்ற பிள்ளைகளுக்கு என் மீது வருத்தம்தான். போடுற சாப்பாட்ட கொஞ்சம் விலையேற்றி விற்பனை செய்தால் லாபம் சம்பாதிக்கலாமே என்பார்கள். ஆனால் என் மனைவி பூரணத்தம்மாளுக்கு லாப நோக்கமே இல்லை. நாம ரொம்ப கஷ்டப்பட்டோம் அதனால ஏழைகளுக்கு மலிவா உணவு விற்பனை செய்வோம் என்றார். அவர் இறப்பதற்கு முன்னால் சத்தியம் வாங்கிட்டுத்தான் போனார். எந்த காரணத்தாலும் கடையை மூடிவிடக்கூடாது. என் மறைவுக்குப் பின்னாலும் கடையை நடத்தணும்னு சத்தியம் வாங்கியிருக்கிறார். என் மூச்சுள்ளவரை இந்தக் கடை இருக்கும் என்று குறைந்த பற்களுடன் நிறைவான புன்னகை பூக்கிறார் ராமு சேர்வை. அதேவேளையில் என் காலத்துக்குப் பின் என் பிள்ளைகள் இதை நடத்துவார்களா என்பது எனக்குத் தெரியாது எனக்கூறும்போதே அவர் முகத்தில் சோகம் தொற்றிக் கொள்கிறது.

இப்போ உங்களுக்கு சமையலில் உதவி செய்வது யார்?
பூரணம் இருந்தபோது சமையல் வேலையை அவரே செய்தார். சில வருஷத்துக்கு அப்புறம் எங்கள் சொந்தக்காரர் ஈஸ்வரன் எங்களுடன் வந்து சேர்ந்தார். அவர்தான் இப்ப வரைக்கும் சமைக்கிறார். 30 வருஷமா எங்களோடு இருக்கிறார்.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள்?
மதியம் மட்டும் குறைந்தது பார்சலையும் சேர்த்து 300 பேர் சாப்பிடுகின்றனர். மதியத்துக்கு 30 கிலோ அரிசி பொங்குகிறோம். இட்லி, தோசைக்கு 7 படி அரசியில் மாவு அரைக்கிறோம். விலைவாசி ஏறும் இறங்கும் ஆனால் தரத்துல குறை வைக்கிறதில்ல. கிலோ ரூ.48/-க்கு அரிசி வாங்குகிறேன். பொன்னி அரிசிதான் மற்ற பொருட்களிலும் சமரசம் இல்லை. இத்தனை வருஷத்துல யாருமே ஏன் சாப்பாட்ட சாப்பிட்டுட்டு உடம்புக்கு சரியில்லாமல் போயிடுச்சு என்று குறை கூறியதே இல்லை.
ராமு தாத்தாவின் சமையலறையும் சுத்தமாக இருக்கிறது. அதிலிருந்தே அவர் தரத்தில் சமரசம் செய்வதில்லை என்பது தெரிகிறது.

எத்தனையோ பேர் உங்களைப் பாராட்டியிருப்பார்கள் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு ஏதாவது?
இருக்கு. ஒரு முறை ஸ்விட்சர்லாந்திலிருந்து ஒரு தம்பதி வந்தாங்க. டிவியில் என்னைப் பார்த்திருக்காங்க. இந்தியா வரும்போது நிச்சயம் என்னைப் பார்க்கணும்னு முடிவு செஞ்சு வந்து பார்த்தாங்க. என்னைப் பற்றி பெருமையாக பேசினார்கள். எனக்கு அதை மறக்கவே முடியாது.

இந்தக் கடை தோற்றம் இப்படியேதான் இருக்கா?
இல்ல.. கொஞ்ச வருஷம் முன்னாடி மேற்கூரை இடிந்து விழுந்திடுச்சு. அப்ப ஒரு பெண்மணி மேற்கூரையை ரூ.50,000/- செலவில் மராமத்து செய்து கொடுத்தார். இப்பவும் அவ்வப்போது என்னைப் பற்றி தெரிஞ்சவங்க ஏதாவது நன்கொடை தருவாங்க. அதையெல்லாம் நான் சொந்த செலவுக்கு வச்சிக்க மாட்டேன். கூடுதலாக உணவு சமைத்து அருகிலுள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று அங்கு பசியுடன் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்து விடுவேன்.

ஏழைகளுக்கு உதவ எத்தனையோ வழி இருந்தும் ஏன் உணவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
ஒருமுறை வடலூர் சென்றேன். வடலூர் அன்னதானம் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. என் மனைவிக்கும் தானம் தர்மம் மீது அவ்வளவு ஆர்வம். அதனால் இருவரும் சேர்ந்து உணவகம் ஆரம்பிச்சோம். எங்கள் பசியும் தீர்ந்துச்சு எங்களத் தேடிவந்தவங்க பசியும் தீர்ந்துச்சு.

உங்க கடைக்கு பக்கத்துலேயே நிறைய ஓட்டல்கள் இருக்கின்றன. அவுங்க எல்லாம் உங்களப் பத்தி என்ன சொல்றாங்க?

எல்லாருக்குமே என் மீது மரியாதை இருக்கு. இவ்வளவு விலைவாசி ஏறின பிறகும்கூட இவ்வளவு குறைந்த விலையில் சாப்பாடு தருகிறீர்களே என ஆச்சரியமாக கேட்பார்கள்.

சரி கடை இவ்வளவு பரபரப்பா இருக்கே நீங்க எப்ப சாப்பிடுவீங்க?
இதற்கு அருகில் இருந்த பெண். தாத்தா எப்பம்மா சாப்பிட்டாரு. நான் இந்தக் கடைக்கு பத்து வருஷமா வந்து சாப்பிடுறேன். 4 மணிக்கு கொஞ்சம் ரசத்த ஊத்தி கரைத்துக் குடிப்பார் என்றார்.

ஏன் தாத்தா எல்லோர் பசியையும் போக்குறீங்க நேரத்துக்கு சாப்பிட்டால்தான் என்ன?
இத்தனை பேருக்கு சாப்பாடு போடுவதால்தான் இத்தனை வருஷமாகியும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்ற அந்தப் புன்னகை "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதற்கு சாட்சி.

இவரை அம்மா உணவகத்தின் முன்னோடி என்றுகூட சொல்லலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close