[X] Close

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் வின்சென்ட்


vincent-teaching-poor-kids

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:43 am
  • அ+ அ-

காட்டுமன்னார்குடியில் உள்ள மேரிமாதா டைல்ஸ் கடை. மாலை 5 மணியளவில் இந்தக் கடையைக் கடப்பவர்கள் சற்றே நிதானித்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள். பகலில், ஊருக்குள் குப்பை பொறுக்கித் திரியும் சிறுவர்களில் சிலர், அங்கே அழகாய் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதே அந்த ஆச்சரியத்துக்குக் காரணம்!

தனது வர்த்தக பரபரப்புகளுக்கு மத்தியில், பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய நரிக்குறவர் சமூகத்துப் பிள்ளைகள் சிலருக்கு முறையாக எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து வருகிறார் இந்தக் கடையின் உரிமையாளர் வி.வின்சென்ட் அமலபிரேம்குமார். இவரிடம் இலவசமாகப் பாடம் படிக்கும் நரிக்குறவர் குழந்தைகள் மாலை 5 மணிக்கெல்லாம், ‘அண்ணா.. எழுதிப் படிக்கலாமா?’ என்றபடியே கடைவாசலுக்கு வந்துவிடுகிறார்கள். வியாபாரத்தில் பிஸியாக இருந்தால் வின்சென்ட்டுக்கு தொந்தரவு கொடுக்காமல், நோட்டில் அவர் எழுதிவைத்திருப்பதைப் பார்த்து அப்படியே எழுதிப் பழகுகிறார்கள். வின்சென்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும், அவரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவாகிறார்கள். அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாகவும் சளைக்காமலும் பதில் சொல்கிறார் வின்சென்ட்.

மழைக்கு ஒதுங்கினார்கள்

“எங்க கடைக்கு அருகில் இருக்கிற காலி இடத்தில் சில குடும்பங்கள் தங்கி, குப்பைகளை பொறுக்கி விற்றுப் பிழைப்போட்டுறாங்க. அவங்க வீட்டுச் சிறுவர்கள் சிலர் கடந்த மழை வெள்ளத்தின்போது, எங்கள் கடையில் வந்து ஒதுங்கினார்கள். அப்போதுதான், இவர்களை எழுதப் படிக்க வெச்சா என்ன என்று எனக்குள் உதித்தது. இதை அவங்கட்ட சொன்னதுமே சந்தோசமாகிட்டாங்க. உடனே, மாலை நேர வகுப்பைத் தொடங்கியாச்சு.

ஆரம்பத்துல மூணு பேர் மட்டும் வந்தாங்க. இப்ப எட்டுப் பேர் வர்றாங்க. எல்லாரும் மொத்தமா வரமாட்டாங்க. ஆனா, தினமும் நாலு பேராச்சும் வந்து படிச்சுட்டுப் போவாங்க.” என்று படிப்பிக்கும் கதையை வின்சென்ட் நம்மிடம் விவரித்துக் கொண்டிருக்கும்போதே, தயங்கியபடியே வந்து நின்ற சிறுவன் சிவாஜி, ‘ஜப்பான்’ என தான் எழுதியதை வின்சென்ட்டிடம் காட்டுகிறான். ‘அதென்னப்பா ஜப்பான்?’ என அவர் கேட்க, ‘எங்க அப்பா பேரு சார்’ என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து ஓடுகிறான் சிவாஜி.

பகலில் பிழைப்பு; மாலையில் படிப்பு

மூன்றாம் வகுப்புப் படித்த ரேணுகா, பெற்றோர் நிர்பந்தத்தால் படிப்பைவிட்டு பேப்பர் பொறுக்கும் தொழிலுக்கு போகிறாள். ஆறாம் வகுப்பு படித்த ராதிகா, ஐந்தாம் வகுப்பு படித்த சாரதி இவர்களுக்கும் இப்போதே குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய கட்டாயம். இதனால், தொடர்ந்து பள்ளிக்குப் போகமுடியவில்லை. இவர்களைப் போலவே வின்சென்ட்டிடம் படிக்க வரும் காயத்ரி, ஜீவா, சிவாஜி, சந்திரலேகா, அந்தோணியும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இடைநின்றவர்களே!

இவர்கள் அத்தனை பேருமே பகலில் பிளாஸ்டிக், தகரம், இரும்பு, தலைமுடி என எது கிடைத்தாலும் பொறுக்குகிறார்கள். இதன் மூலம் தினமும் குறைந்தது, நூறு ரூபாயாவது சம்பாதிக்கிறார்கள். ஆனால், இப்படி பொருளீட்டும் வேலையெல்லாம் மதியம் மூன்று மணி வரைதான். அதன் பிறகு, உணவருந்தி சற்றே ஓய்வெடுத்துவிட்டு மாலையானதும் டைல்ஸ் கடைக்கு படிக்க வந்துவிடுகிறார்கள்.

‘அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றான் பாரதி. வின்சென்ட் அமல பிரேம்குமார் - ஏழைகளுக்கு எழுத்தறிவித்துக்கொண்டிருக்கிறார்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close