[X] Close

'இந்த வயதிலும் பள்ளிக்குச் செல்லும் நான்' - நாணயக் காதலர் ரகுராமன்


coin-collector-raguraman

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:28 am
  • அ+ அ-

நாணயங்களைச் சேகரிப்பது சிலருக்கு பொழுதுபோக்கு. ஒரு சிலருக்கு, அது பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம்! ஆனால், மதுரையைச் சேர்ந்த டி.ஜி.ரகுராமன், தான் சேகரித்து வைத்திருக்கும் பல்வேறு நாடுகளின் பழைய நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் பள்ளிகளில் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தி வருகிறார்.

ரகுராமன் ஆரம்பத்தில் மதுரை ‘மதுரா கோட்ஸ்’ மில்லில் மேலாளராக பணிபுரிந்தவர். 1977-ல் இங்கிருந்து கென்யாவுக்கு இடம்பெயர்ந்த இவர், அங்கும் டெக்ஸ்டைல் மில் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்தார். கென்யாவில் ரகுராமனுக்கு ஓய்வு நேரம் நிறையக் கிடைத்தது. அப்போதுதான் இந்த சேகரிப்பு ஆர்வம் தனக்குள் துளிர்விட்டது என்கிறார்.

ஆப்பிரிக்க நாணயங்கள்

கென்ய பழங்குடியினர் மரக்கட்டைகளைக் கொண்டு அவர்களே உருவாக்கி பயன்படுத்தும் பொருட்களை பார்த்து பிரமித்தவர், அவற்றைச் சேகரிக்கவும் ஆரம்பித்தார். அப்போது இவரது கவனம் நாணயங்கள் பக்கமும் திரும்பியது. தொடக்கத்தில், ஆப்பிரிக்க நாடுகளின் நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் சேகரிக்கத் தொடங்கியவர், தொடர்ந்து மற்ற நாடுகளின் நாணயங்களையும் தேட ஆரம் பித்தார். தற்போது, கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பழைய நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் இவரிடம் உள்ளன.

1835-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான உலக நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் ரகுராமனின் சேகரிப்பில் பார்க்க முடிகிறது. இவரிடம் உள்ள, பழங்குடி மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பார்த்தாலே பழங்குடி களின் வாழ்க்கை முறையையும், கலாச்சாரத்தையும் நொடியில் தெரிந்து கொள்ளலாம்.

 

பழசுக்கு மவுசு அதிகம்

ரகுராமனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம். ”என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் உலகின் பல நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள், ஊருக்கு வரும்போது, என்னவேண்டுமென்று கேட்பார்கள். நானோ, அந்த நாட்டின் பழங்கால, புதிய ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் கேட்பேன். அப்படித்தான் இத்தனையும் சேகரித்தேன். பழசுக்கு எப்போதுமே மவுசு அதிகம். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்போது அது நமக்குத் தெரியாது. பின்பு, அவை ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கும்; பார்த்து ரசிப்போம். அதற்கு விலைமதிக்க முடியாது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே பள்ளிகளுக்குச் சென்று கண்காட்சி நடத்துகிறேன்.

பழங்குடிகளின் வாழ்க்கை முறையை பள்ளிப் பிள்ளைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும் எனது ஆசை. அதனால், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறேன். கென் யாவில் பணிபுரிந்தபோது, மசாய் பழங்குடி மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். தமிழர்களின் பல கலாச்சார அடையாளங்கள் அந்த மக்களிடமும் வெளிப்படுகிறது.

மாடுகளை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்லும்போது தற்காப்புக்காக மசாய் என்ற குச்சியையும் ஸ்டூல் போன்ற இருக்கையையும் அவர்கள் கையில் வைத்திருப்பார்கள். மசாய் குச்சியால் நெற்றியில் அடித்தால் எத்தகைய மிருகமும் ஒரே அடியில் சுருண்டுவிடும். இப்படி, அவர்கள் பயன்படுத்தும் பல பொருட்களைச் சேகரித்து வீட்டில் வைத்துள்ளேன்.” என்கிறார் ரகுராமன்.

கண்காட்சிகள் ஒருபுறமிருந்தாலும் இன்னமும் தனது சேகரிப்பு முயற்சியை விடாமல் தொடர்கிறார் இந்த 77 வயது இளைஞர்!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close