[X] Close

அன்னமிட்ட கை: வீட்டு உணவுக்காக ஏங்கும் முதியவர்களுக்காகவே ஒரு நிறுவனம்


chennais-elderly-get-healthy-home-cooked-meals-at-home

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 May, 2018 12:20 pm
  • அ+ அ-

கொடியது இளமையில் வறுமை மட்டுமல்ல.. முதுமையில் தனிமையும்கூடத்தான். பணம் ஈட்ட பிள்ளைகள் வெளிநாடு சென்றுவிட வீடுகளில் தனியாக வசிக்கும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இத்தகையோரின் எண்ணிக்கை ஏராளம். இவர்களைக் குறிவைத்து சுற்றும் கொள்ளைக் கும்பலும் ஏராளம். இதன் காரணமாகவே பாதுகாப்பு கருதி கையில் காசு இருந்தாலும்கூட சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளாமல் வெளியில் இருந்து உணவு வாங்கி உண்கின்றனர் முதியவர்கள் பலர். ஆனால், காசு கொடுத்தாலும் தினமும் ஓட்டல் உணவு என்பது முதியவர்களுக்கு உடல் உபாதையை ஏற்படுத்திவிடுகிறது.
இதனாலேயே பலரும் ஏதாவது பதப்படுத்தப்பட்ட உணவை உண்டும் உண்ணாமலும் உடல் நலக்குறைபாடுகளுக்கு உள்ளாகிறார்கள்.

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு வரும் முதியவர்களில் 70% பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. 

இப்படி நல்ல ஆரோக்கியமான சுத்தமான வீட்டு உணவுக்காக ஏங்கும் முதியவர்களுக்காக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த விஜயலட்சுமி உலகநாதன் உருவாக்கியதுதான் சென்னை ஜீரியாட்ரிக்ஸ் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் (Chennai Geriatric Catering Services). இதை நடத்துபவர் விஜயலக்ஷ்மி உலகநாதன் (53). இவருக்கு உத்வேகமாக, உறுதுணையாக இருப்பவர் இவரது கணவர் உலகநாதன்.

விஜயலஷ்மி நம்மிடம் பேசியதில் இருந்து..

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
என் பெயர் விஜயலஷ்மி. 53 வயதாகிறது. நான் ஒரு தனியார் மருத்துவமனையில் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் பணியாற்றினேன். பணிபுரியும் போதே பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சியை மேற்கொண்டேன். அப்போது இருந்தே ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆனால், அதே வேளையில் அந்தத் தொழில் சேவையுள்ளத்தோடு மேற்கொள்ளக்கூடிய தொழிலாகவும் புன்னியம் தேடித்தரும் தொழிலாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் சென்னை ஜீரியாட்ரிக்ஸ் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம்.

முதியவர்களுக்காக உணவு சமைத்து தரும் தொழிலைத் தொடங்கும் யோசனை எங்கிருந்து பிறந்தது?
பணி ஓய்வுக்குப் பின் தொழில் தொடங்குவது தொடர்பாக நான் யோசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது வயதானவர்களுக்காக ஒரு ஹோம் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே, பத்மஸ்ரீ விருது பெற்றவரும் வயதானவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற முன்னோடியுமான டாக்டர் வி.எஸ்.நடராஜனை சந்தித்தேன். அவரிடம் எனது எண்ணத்தைத் தெரிவித்து ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் கூறிய யோசனைதான் 'மீல்ஸ் ஆன் வீல்ஸ்' ஐடியா. கையில் பணமிருந்தும் நல்ல உணவு உண்ண முடியாமல் ஊட்டச்சத்து குறைபாடால் ஏராளமான முதியவர்கள் வாடுவதாகவும் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் தொழிலை செய்யலாம் என்றும் மருத்துவமர் ஆலோசனை கூறினார். எனக்கு அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக அதை செயல்படுத்தினேன்.

எங்கு, எப்படி உணவு சமைக்கிறீர்கள்?
எனது வீடு அண்ணாநகரில்தான் இருக்கிறது. எனது வீட்டில் வேலையாட்கள் உதவியுடன் தினமும் மூன்று வேலைக்கும் 25 பேருக்கு சமைக்கிறோம். நான் நேரடியாக சமையலில் ஈடுபடுவதில்லை. ஆனால், உணவின் தரம் குறித்து அவர்களும் அறிவுறுத்துவேன். தேர்ந்த மருத்துவரிடம் பெற்ற டயட் சார்ட் எங்களிடம் இருக்கிறது. அதற்கேற்ப குறைவான எண்ணெய், குறைவான அளவு உப்பு, குறைவான அளவில் சர்க்கரை என சரிவிகித கலோரி அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்த உணவை பாத்திரங்களில் பேக் செய்து டெலிவரி பாய்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் சேர்த்துவிடுகிறோம். ஒரு மாதத்துக்கு ரூ.9000 வரை வசூலிக்கிறோம். எங்களைப் பற்றித் தெரிந்து நிறைய பேர் தொடர்பு கொள்கின்றனர்.

அப்படியென்றால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யலாமே?
இல்லை. நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல நான் செய்யும் தொழிலில் சேவை நோக்கமும் இருக்க வேண்டும். எனக்கு வாடிக்கையாளர்களாக இருப்பவர்களின் பிள்ளைகள் வெளிநாடு, வெளியூர்களில் சம்பாதித்து பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவர்களாக இருக்கின்றனர். அதனாலேயே நான் வசூலிக்கும் ரூ.9000 பணத்தை அவர்களால் கொடுக்க முடிகிறது. பணம் கொடுக்க முடிகிறது என்பதால் இதுபோன்ற நிறைய பேரிடம் நான் பணத்தை வாங்கிவிட்டு சமைக்க ஆரம்பித்தால் அதை ஒரு கமர்ஷியல் நிறுவனமாகவே நடத்த முடியும். மேலும், இப்போது 25 பேருக்கு சமைக்கும் பக்குவத்தை அதிக நபர்களுக்கு சமைக்கும்போது என்னால் கொடுக்க முடியாமல் போகலாம். எனவேதான் நான் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பவில்லை.
ஆனால், இதேபோன்ற தொழிலை ஒவ்வொரு ஏரியாவிலும் யாரேனும் ஏற்று நடத்த வேண்டும். இந்தத் தொழில் லாபகரமானதே. நிறைய பேருக்கு இத்தொழிலைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம். சேவை உள்ளத்தோடு இத்தொழிலை மேற்கொள்ள விரும்பவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் தொழில் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு எப்படி?
இந்தத் தொழிலை நான் செய்ய எனக்குப் பெருந்துணையாக இருப்பவர் எனது கணவர். அவரது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் என்னால் இவ்வளவு தூரம் சாதித்திருக்க முடியாது. எனது கணவர் வீட்டார் பலரும் மருத்துவர்களாக சேவை செய்கின்றனர். எனது கணவர் வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஏழை மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனையை வழங்குகிறார். நான் பிறந்த வீடு, புகுந்த வீடு, நண்பர்கள் என எல்லா பக்கமும் எனக்கு நிறைவான ஆதரவு இருக்கிறது.

என்னதான் லாபகரமான தொழிலாக இருந்தாலும்கூட அதை விரிவுபடுத்தி தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பால் ஒத்த எண்ணமுடைய பிற தொழில் முனைவோர்க்கு இலவச ஆலோசனை வழங்க காத்திருக்கும் விஜயலக்ஷ்மியின் சேவையைப் பாராட்டுவோம்.

விஜயலஷ்மியைத் தொடர்பு கொள்ள:  9444422890 / 9444983296

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close