[X] Close

அடேங்கப்பா ‘அவேர்னஸ் அப்பா’- சிலிர்க்க வைக்கும் சிவசுப்பிரமணியம்!


awareness-appa-story

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:17 am
  • அ+ அ-

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில், மக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி அவர் தென்படுவார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு, புதுச் சேரியின் பிற முக்கிய நகரங்களிலும் அநேகம் பேர் இந்த ‘அவேர்னஸ் அப்பா’வை பார்த்திருக்கலாம். அண்மையில் ஒருநாள் நாமும் அப்படித்தான் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் அவரைப் பார்த்தோம்.

அவரது மொபெட் முழுக்க, ’கண் தானம் செய்யுங்கள்.. ரத்த தானம் செய்வோம்.. புற்றுநோய்க்கு உதவ முடி தானம் செய்வீர்..’ என ஏகத்துக்கும் விழிப்புணர்வு வாசகங்கள். அவரது சட்டை, பேன்ட், தொப்பி அனைத்திலும் இதே போன்ற வாசகங்கள் இருக்கவும் நாம் அவரைச் சற்றே வித்தியாசமாகப் பார்த்தோம்.

எதுவும் எனதில்லை

அவ்வளவுதான்.. சம்மனே இல்லாமல் அவரே ஆஜரானார். ”என்ன சார் ஒரு மாதிரியா பாக்கறீங்க, அது ஒண்ணுமில்லீங்க.. ‘கண் தானம், உடல் தானம், கூந்தல் தானம், உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய் யுங்க’ன்னு ஆளாளுக்கு எப்படியெப்படியோ பிரச்சாரம் செய்வாங்க. அதையேதான் நான் இப்படி என்னோட நடை, உடை, வாகனம் என அனைத்திலும் வித்தியாசமான முறையில பிரச்சாரம் செஞ்சுட்டுத் திரியறேன்!” என்று கடகடத்தவர், தொடர்ந்தும் தானே பேசினார்.

”இப்படி வாசகங்கள் பிரின்ட் செஞ்ச சட்டை பேன்ட் மட்டும் எங்கிட்ட 10 செட் இருக்கு. அதோட, நான் சாப்பிடுற தட்டு, தண்ணி டம்ளர், போர்வை, விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்கள், உடல் உறுப்பு தானம் செய்யுறதுக்கான விண்ணப்பங்கள் எல்லாமே இந்தப் பெட்டிக்குள்ளதான் இருக்கு. இப்போதைக்கு எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்தப் பெட்டி மட்டும்தான். இந்தப் பெட்டி, இதுக்குள்ள இருக்கும் பொருட்கள், இந்த மொபெட், அட, இந்த செல்போன்கூட நான் வாங்கினது இல்லீங்க; எல்லாமே என்னோட பிரச்சாரத்தை பார்த்துட்டு மத்தவங்களா வாங்கித் தந்தது.

அவேர்னஸ் அப்பா

இதா.. இந்த நேரச் சாப்பாட்டையே எடுத்துக்குங்க. இப்ப நீங்க சாப்பாடு வாங்கிக் குடுத்தா எனக்கு உணவு வழங்கியவங்க லிஸ்ட்ல நீங்க 1,261-வது நபரா வருவீங்க. அத அப்படியே ‘வாட்ஸ் அப்’லயும் போட்டுருவேன். பெட்ரோல் பங்க்ல இலவசமா பெட்ரோல் அடிச்சா, அவங்க பேரையும் ‘வாட்ஸ் அப்’ல போட்டுருவேன்.” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிவசுப்பிரமணியம் என்ற இந்த அவேர்னஸ் அப்பா !

‘அவேர்னஸ் அப்பா’ என்று கொங்கு இளைஞர்களால் கொண்டாடப்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், சிறுவயதிலேயே பிழைப்புக்காக திருப்பூர் வந்தவர். தொடக்கத்தில், திருப்பூரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர், பிறகு 20 ஆண்டுகள் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதால் இயலாதவர்களுக்கு உதவும் சுபாவம் இவருக்குள் இயல்பாகவே இருந்தது.

2007-ல் புறப்பட்டோம்

கடந்த 20 ஆண்டுகளில் 27 முறை ரத்த தானம் செய்திருக்கும் 58 வயது சிவசுப்பிரமணியம் தன்னைப் பற்றிப் பேசுகையில், “என்னோட மூன்று பெண் பிள்ளைகளையும் கட்டிக்குடுத்து 4 பேத்திகளும் வந்தாச்சு. இப்படியே இருந்து என்ன செய்ய.. நானும் என் மனைவியும் ராணுவ வீரர்களுக்காக உடல் உறுப்பு தானம் செய்தவங்க. அதையே பிரச்சாரம் பண்ணி மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்னுதான் 2007-ல் நானும் அவளும் புறப்பட்டோம்.

அந்த சமயத்துல, ஒருத்தர் எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்தார். டெய்லர் ஒருத்தர் இந்த மாதிரி டிரெஸ் தைச்சுக் கொடுத்தார். பனியன் பிரிண்டிங் வெச்சிருக்கிறவர், இந்த வாசகங்களை டிரெஸ்ஸில் பிரிண்ட் பண் ணிக் கொடுத்தார். நாங்க பிரச்சாரத்தை ஆரம்பிச்சோம். இடையில், நுரையீரல் புற்று நோயால பாதிக்கப்பட்ட எம் மனைவி ஜானகி 3 வருஷம் முன்னே என்ன விட்டுப் போயிட்டா. அவளோட கண்களை மட்டும்தான் தானமா கொடுக்க முடிஞ்சுது” என்று வேதனையை வெளிப்படுத்தியவர், தற்போதைய தனது பிரச்சார பயணம் குறித்தும் பேசினார்.

 

வண்டி போன போக்குல..

“வண்டி போன போக்குல ஊர், ஊரா போறேன். போலியோ பாதிப்பு, மது அருந்துவதால், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பத்தியெல்லாம் விழிப்புணர்வு நோட்டீஸ் களைக் கொடுக்கிறேன். கண் தான, உடல் தான, உடல் உறுப்பு தான விண்ணப்பங்களையும் கேக்குறவங்களுக்குக் கொடுப்பேன். அனைவரும் ஏன் உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம் செய்யவேண்டும் என்பது குறித்தும் பிரச்சாரம் செய்வேன்.

முன்பு, நடந்தே செல்வேன். அப்புறம் சைக்கிள் கிடைச்சுது. ஒரு வருஷமாத்தான் இதோ இந்த மொபெட்ல போறேன். தமிழகம், புதுச்சேரியில் என்னோட வண்டி போகாத மாவட்டமே இருக்காது. போற இடங்கள்ல, ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் பார்ப்பேன். பல இடங்கள்ல அவங்களே என்னோட பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி வழியனுப்பியும் வெச்சிருக்காங்க.

பயணத்துல பெருசா திட்டமிடலெல்லாம் இருக்காது. கிடைக்கிற இடத்துல தங்கிக்குவேன். பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருந்தா அங்கேயும் அனுமதி கேட்டுப் படுத்துக்குவேன். எதுவும் கிடைக்கலியா.. இருக்கவே இருக்கு பிளாட்பாரம்!” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினார் சிவசுப்பிரமணியம். அவரிடம் ஒரு வேளை சாப்பாட்டுக்கான ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு நாமும் நகர்ந்தோம்.

அடுத்த சில நிமிடங்களில், ‘இன்று மதிய உணவு அளித்தவர்’ என நமது பெயரைக் குறிப்பிட்டு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ் செய்தியை தட்டி விட்டிருந்தார் வித்தியாசமான இந்த அவேர்னஸ் அப்பா!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close