[X] Close

சவால்களைக் கடந்து சாதிக்கத் துடிக்கும் ஜஸ்டின்


justin-the-swimmer

  • Team
  • Posted: 01 Mar, 2018 12:12 pm
  • அ+ அ-

சென்னையைச் சேர்ந்த ஜஸ்டின் 90 சதவீதத்துக்கும் மேல் உடல் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி இளைஞர். ஆனாலும், 2018-ல் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டின் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் எடுக்கும் தாகத்தில் இருக்கிறார் இவர்!

ஜஸ்டின் 29 வயது வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். 2009-ல் நடந்த எதிர்பாராத ஒரு விபத்து இவரது கனவுகளைத் தகர்த்தது. முதுகுத் தண்டில் ஏற்பட்ட பலத்த அடியால் கழுத்துக்குக் கீழுள்ள உறுப் புகள் செயலற்றுப் போயின. முகத்திலும் தோள்பட்டையிலும் மட்டும் முழுமையான இயக்கம். கைகளில் பகுதியளவுக்கே இயக்கம். இதைத் தவிர, ஜஸ்டினின் உடம்பில் வேறெந்த பாகமும் இப்போது இயங்காது.

உடல் ரீதியாக சவால்கள்

இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்தும் திறன்கூட இவரது தசைகளுக்கு இல்லை. வியர்வை சுரப்பிகள் சரியாக வேலை செய்யாது என்பதால் அதிக நேரம் வெயிலில் இருந்தால் இவர் மயக்கமாகிவிடுவார். தொடர்ந்து அரை மணி நேரம் உடம்பின் ஒரே இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அந்த இடத்தில் தோல் பிய்ந்துவிடும். உடம்பில் ஏதாவது காயம் பட்டாலும் இவரால் உணர முடியாது; ரத்தம் வரு வதைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

உடல் ரீதியாக இத்தனை சவால்களை வைத்துக் கொண்டுதான், தன் தாய் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதற்காக தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நீச்சல் பயிற்சி எடுக்கிறார் ஜஸ்டின்.

அதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “நடந்ததையே நினைச்சுட்டு இருக்கிறதுல அர்த்தமில்லை. அதனால, எனது உடம்பில் செயல்படும் நிலையில இருக்கிற உறுப்புகளை இன்னும் வலுப்படுத்துறது எப்படின்ன்னு யோசிச்சேன். அதுக்கான நான் எடுத்த மறுவாழ்வு சிகிச்சைகள் ஓரளவுக்கு பலனைக் குடுத்துச்சு.

நானே கற்றுக் கொண்டேன்

விபத்துக்கு முன்பு, கூடைப்பந்து விளையாடுவேன். இப்ப அது சாத்தியமில்லை என்பதால் நீச்சல் கத்துக்க முடிவெடுத்தேன். இந்த உடம்போட நீச்சல் கத்துக்கிறது சாத்தியமில்லைன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்காக துவண்டுடாம, ‘யூ டியூப்’ பார்த்து நானே நீச்சல் அடிக்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

வேளச்சேரியில் இருக்கிற நீச்சல் குளத்துல லைஃப் கார்டு சப்போர்ட்டோட நீச்சல் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் தோளுக்கும் முழங்கைக்கும் குடுத்து நீந்தினேன். ஆரம் பத்துல, கஷ்டமாத்தான் இருந்துச்சு. போகப் போக பழகிருச்சு; நானும் நீச்சலைக் கத்துக்கிட்டேன்” என்று உற்சாகம் மேலிடச் சொன்னார்.

நீச்சல் கற்றுக்கொண்ட சில மாதங்களிலேயே 2014 ஜூலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார் ஜஸ்டின்.

அடுத்த நான்கு மாதத்தில் மத்தியபிரதேசத்தில் நடந்த போட்டிகளில் மூன்று தங்கத்தை தட்டி வந்த இவர், தொடர் வெற்றிகள் தந்த தன்னம்பிக்கையில், 2015-ல் கனடாவில் நடந்த சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு மூன்று தங்கம் வென்று சாதித்தார்.

இந்தியாவுக்கே பெருமை சேர்த்த கனடா வெற்றி, மறக்கமுடியாத ஒன்று என்று சொல்லும் ஜஸ்டின், “அதைத் தொடர்ந்தும் பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகிறேன். எனது அடுத்த லட்சியம், அடுத்த ஆண்டு நடக்கும் ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக தங்கம் வெல்வதுதான்” என்கிறார்.

எதிர்பார்ப்பைப் கூட்டுங்க

நீச்சல் மட்டுமின்றி மாநில, தேசிய அளவிலான தூப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார் இவர். மென்பொருள் நிறு வனம் ஒன்றின் டி.ஜி.எம் ஆக இருக்கும் ஜஸ்டின், “மாற்றுத்திறனாளிகள் சின்னதா ஒரு சாதனை செஞ்சாலே அதை பெருசா தூக்கிப்பிடிச்சு அவங்கள முடக்கீடாதீங்க. இன்னும் நிறையச் சாதிக்கணும்னு எதிர்பார்ப்பைக் கூட்டுங்க. அதுதான் எங்களுக்கு இன்னும் சாதிக்கணும்கிற உத்வேகத்தைக் கூட்டும்” என்கிறார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close