[X] Close

‘நான் தோல்வியின் மனிதன் அல்ல’; சேதி சொல்லும் சேவியர் விர்ஜின்ஸ்!


im-not-a-loser-says-xavier

  • Team
  • Posted: 01 Mar, 2018 12:09 pm
  • அ+ அ-

‘சார்.. எங்க ஸ்கூல்ல சேவியர் விர்ஜின்ஸ் என்ற மாணவன் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறான். அவன் பதினோராம் வகுப்புப் படிக்கிறப்பவே, ‘நான் தோல்வியின் மனிதன் அல்ல’ன்னு தன்னம்பிக்கை தரும் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறான்’- நாகர்கோவில் சால்வேசன் ஆர்மி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஆல்வின் ராஜகுமார், ‘தி இந்து இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படியொரு தகவலை பதிவு செய்திருந்தார்.

இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் புத்தகம் எழுதுவது சகஜமான விஷயம்தான். ஆனால், சேவியர் விர்ஜின்ஸ் புத்தகம் எழுத வந்த சூழல் சற்றே புதுமையானது. இதற்கு முன்பு, இன்னொரு பள்ளியில் படித்த இவர், அங்கே பதினோராம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தார். அந்தத் தோல்வி தந்த அனுபவத்தையே புத்தகமாக எழுதியிருக்கிறார் விர்ஜின்ஸ்.

பதினோராம் வகுப்பில் தோல்வி

அதுகுறித்து நம்மோடு பேசிய விர்ஜின்ஸ், “சின்ன வயசுலருந்தே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கலை - இலக்கியப் போட்டிகள்னு ஆர்வமா இருப் பேன். எங்க குடும்பம் ஆன்மிக ஈடுபாடுள்ள குடும்பம் என்பதால் இளம்குரு மாணவனுக்கும் தேர்வாகி படிச்சுட்டு இருந்தேன். இளம் குரு மாணவனுக்கு படிப்பவர்களை ஆயர் தேர்வு செய்வார். அவர்கள் 11, 12-ம் வகுப்புகளை வீட்டிலிருந்தே படிக்கலாம். அதன் பின்னர் பிஷப் ஹவுஸில் தங்கி படிக்க வேண்டும்.

சின்ன வயசுலருந்தே எனக்கு புத்தக வாசிப்பிலும் ஆர்வம் அதிகம். எதைப் படிச்சாலும் குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். ஆனால், பள்ளிப் படிப்பில் நான் சராசரி மாணவன் தான். அதனால் தானோ என்னவோ பதினோராம் வகுப்பில் தோல்வியடைந்து விட்டேன். அதில் விரக்தியடைந்த நான், தோல்வி பயத்தால் வீட்டை விட்டு வெளியில்கூட செல்ல முடியாமல் முடங்கிக் கிடந்தேன்.

அப்போது தான், ஏற்கெனவே நான் பல புத்தகங்களில் படித்து எழுதி வைத்திருந்த குறிப்புகள் எனக்குள் ஒரு உத்வேகத்தை தந்தது. அதில், வெவ்வேறு சூழலில் முயன்று தோற்று, தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற மனிதர்களின் முக்கிய தருணங்களை தொகுத்து, என் வயதினருக்கு ஏற்ற வகையில் 40 பக்கத்தில் புத்தகமாகப் போட்டேன். இதில் ஆப்ரகாம் லிங்கன் தொடங்கி அப்துல் கலாம் வரை, சாதித்த 10 தலைவர்களின் வாழ்வில் நடந்தவற்றைத் தொகுத் துள்ளேன். அத்துடன் மேலும் 6 தலைப்புகளில் எனது கருத்துக்களையும் சேர்த்துள்ளேன்” என்றார்.

 

பரீட்சையில் தோற்றால் திட்டாதீர்கள்

தொடர்ந்து பேசிய அவரது தந்தை சகாய ஞான திரவியம், “விர்ஜின்ஸ் பதினோராம் வகுப்பில் ஃபெயில் என்றதும், கோபப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், என் மனைவி அந்தோனியம்மாள்தான் ‘குழந்தையை திட்டாதீங்க.. யாருக்கும் தோல்வி நிரந்தரம் இல்லை’ என்று சொல்லி என்னைத் தேற்றினாள். அவள் சொன்னது தான் இப்போது நடந்திருக்கிறது. பள்ளித் தேர்வில் தோற்றுப் போன இவன், அந்தத் தோல்வியையே கருவாக வைத்து, இளமையில் தோற்றவர்கள் பின்பு எப்படி எல்லாம் ஜெயித்தார்கள் என்பது குறித்து தன்னம்பிக்கையூட்டும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறான். அதுபற்றி பேட்டி எடுக்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். இது சாதனை இல்லையா? ஆகவே பெற்றோர்களே.. பிள்ளைகள் பரீட்சையில் தோற்றுப் போனால் அவர்களைத் திட்டாதீர்கள். அவர்களுக்குள் இன்னொரு திறமை ஒளிந்திருக்கும் அதை தேடிக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வாருங்கள்” என்றார்.

உண்மைதான் பெற்றோரே!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close