[X] Close

‘மரக்கன்னு வேலுச்சாமி’: அம்மாபாளையத்தின் அபூர்வ மனிதர்!


story-of-marakkannu-velusamy

  • Team
  • Posted: 01 Mar, 2018 11:52 am
  • அ+ அ-

‘மரக்கன்னு வேலுச்சாமி’ - எண்பது வயதைக் கடக்கும் அந்தப் பெரியவரை திருப்பூர் அம்மாபாளையத்து மக்கள் இப்படித்தான் செல்லப் பெயர் கொண்டு அழைக் கிறார்கள்!

கோவை மாவட்டம் செரயாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இயற்கை விவசாயத்தை சுவாசமாகக் கொண்டவர். சொந்த ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால், 50 வருடங்களுக்கு முன்பே கர்நாடகாவுக்கு பிழைக்கப் போனவர். அங்கே விவசாயக் கூலி வேலை பார்த்துச் சேமித்த பணத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கி கரும்பு விவசாயம் பார்த்தார். முதல் அறுவடையே அமோகமாய் இருந்ததால் வேலுச்சாமியின் பொருளாதாரமும் ஏறுமுகம் கண்டது.

கெழவனுக்கு வேற வேலை இல்லை

இப்படியே அங்கு 19 ஆண்டுகள் கடந்த நிலையில், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடந்தபோது வேலுச்சாமியும் பாதிக்கப்பட்டார். அத்துடன் கர்நாடகத்துக்கு குட்பை சொல்லிவிட்டு தமிழகம் திரும்பினார். அப்புறம் நடந்தவைகளை அவரே விவரிக்கிறார்.

“கர்நாடக கலவரத்தில் வீட்டை மட்டும் அங்கிருந்து காலி செய்தோம். எங்களது மூத்த மகன் கணேசமூர்த்தி இன்னமும் அங்கே விவசாயம் பார்க்கிறான். நானும் என் மனைவியும் அம்மாபாளையம் வந்து வருசம் 17 ஆச்சு. மூணு வீடு கட்டி வாடகைக்கு விட்டுருக்கதால எனக்கு வருமானத்துக்குப் பிரச்சினை இல்லை. அதனால, நம்மாள முடிஞ்ச வரைக்கும் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாப்போமேன்னு கிளம்பிட்டேன். என்னை வேடிக்கையா பார்க்கிற சிலபேரு, ‘கெழவனுக்கு வேற வேலை இல்லை’ன்னு சொல்றாங்க. அதுவும் உண்மைதான். இப்ப எனக்கு இதவிட்டா வேற வேலை இல்லை தான்!

மூவாயிரம் மரக் கன்றுகள்

இயற்கையும் சுற்றுச் சூழலும் நமக்கு ரொம்ப முக்கியம். அது கெட்டுப் போனதாலதான் என்னென்னமோ வியாதி எல்லாம் வந்துட்டு இருக்கு. பூமியும் மலடாகிட்டே வருது. என் ஒருவனால இதையெல்லாம் திருத்திவிட முடியாது. ஆனா, என்னைப் போல ஒவ்வொருத்தரும் நினைச்சா, எல்லாத்தையும் மாத்திடலாம். அப்படி நம்பிக்கை வெச்சுத்தான் மரக் கன்றுகளை நடுறேன். இதுவரை, அரசுப் பள்ளிகள், சாலை ஓரங்கள், பேருந்து நிறுத்தம், தெருக்கள், வீடுகள், கோயில்கள் என சுமாரா மூவாயிரம் மரக் கன்றுகளையாச்சும் நட்டிருப்பேன்” என்கிறார் வேலுச்சாமி.

குடியிருக்கும் வீட்டைச் சுற்றி வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல், மருதம், கீழாநெல்லி, சிரியான் குட்டை, முருங்கை, மல்லி, கீரைகள், அரிய மூலிகைகள், நாட்டு மாதுளை, சிவப்பு அத்தி என ஒரு சிறு மூலிகை வனத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் வேலுச்சாமி.

கணவர் பற்றிப் பேசும் வேலுச்சாமியின் மனைவி சுந்தராம்பாள், “ஒருநாள் கூட வீட்டுல சும்மா இருக்க மாட்டார்; சைக்கிள்ல சுத்திக்கிட்டே இருப்பார். யாரு வீட்டுக்கு முன்னாடியாச்சும் கொஞ்சூண்டு இடமிருக்குன்னு தெரிஞ்சா, அவங்கட்ட கேட்டுட்டு அந்த இடத்துல ஒரு மரக் கன்றை நட்டு வெச்சிட்டு வந்துருவாரு. அமாவாசை நாட்கள்ல ஏதாச்சும் ஒரு கோயில்ல மரம் நடப் போயிருவாரு. வெறுமனே நட்டு வைக்கிறதோட இல்லாம அதுகள பராமரிக்கிறதுலயும் கவனமா இருப்பாரு” என்கிறார்.

மரக் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, இயற்கை உரமிடுவது, களைகள் அகற்றுவது, கீரைகளின் நன்மைகள், இயற்கை விவசாயத்தின் தேவைகள் குறித்து விவாதிப்பது என தனது வீட்டை ஒட்டியிருக்கும் மூலிகை வனத்தை பலருக்கும் பாடம் சொல்லித் தரும் குருகுலமாகவே வைத்திருக்கும் வேலுச்சாமி, “மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பதை நாம் வாழும் பூமிக்கும் அடுத்த தலைமுறைக்கும் நான் செய்யும் சேவையாய் கருதுகிறேன். இதில் சலிப்போ, அலுப்போ ஏற்பட்டால் அது தற்கொலைக்கு சமம்” என்று சொல்லிவிட்டு அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் நடுவதற்காக வைத்திருந்த மரக்கன்றுகளை எடுத்துக் கொண்டு சைக்கிளை மிதித்தார்!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close