[X] Close

மாத்தி யோசி.. மாற்றம் நிச்சயம்.. பொள்ளாச்சி இளைஞரின் அனுபவப் பாடம்


pollachi-youth-share-his-experience

  • Team
  • Posted: 01 Mar, 2018 11:44 am
  • அ+ அ-

திறமையும் கலை ஆர்வமும் இருந்தால் சாதாரண கல்லையும் சிலையாக்கலாம்; சாதாரண மரத் துண்டையும் மதிப்பாக்கலாம். இதற்கு நல்லதொரு உதாரணம் பொள்ளாச்சி குருபிரசாத்.

மாத்தி யோசி.. மாற்றம் நிச்சயம்..! இது ஏதோ பட்டிமன்றத்தில் பேசிய பேச்சு அல்ல.. துண்டு விழும் மரக் கட்டைகளை அழகிய கலைப் பொருட்களாக மாற்றும் 24 வயது இளைஞர் குருபிரசாத்தின் அனுப வப் பாடம்! பொள்ளாச்சியில், தச்சுத் தொழிலைப் பின்புலமாகக் கொண்ட குடும்பத்தின் பிள்ளை குருபிரசாத். இவர், துண்டு விழும் மரங்களைக் கொண்டு நடை வண்டி தொடங்கி ரயில் வண்டி வரைக்கும் அழகிய கலைப் பொருட்களைச் செய்து அசத்துகிறார். தேக்கு மரத்தில் 3 அடி உயரம், 65 கிலோ எடையில் இவர் உருவாக்கிய பழைய ராஜ்தூத் பைக் இவரது கைத்திறமையின் உச்சம்!

கலைந்து போன கல்லூரிக் கனவு

இவருக்குள் இந்தத் திறமை எப்படி வந்தது? தான் புதிதாக செய்து முடித்திருந்த ரயில் பெட்டிக்கு தனது தம்பி ஐசக்ராஜின் உதவியுடன் பாலீஷ் போட்டுக் கொண்டே நம்மிடம் பேசினார் குருபிரசாத்.

”என்னோட அப்பா கூலி அடிப்படையில் கதவு, நிலவு, ஜன்னல்களை செய்து குடுத்துட்டு வந்தார். எனக்கு நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது ஆசை. ஆனால், 12-ம் வகுப்புக்கு மேல் படிக்க எனது குடும்ப வறுமை இடம் தரவில்லை. அதனால, என்னோட கல்லூரி கனவு கலைந்து போனது. வேறு வழியில்லாம, எங்க அப்பா பார்த்த தச்சுத் தொழிலையே நானும் பார்க்க ஆரம்பிச்சேன்.

 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு..

தச்சுத் தொழிலில் எங்க, அப்பா தாத்தாக்கள் செய்தது மாதிரி, நிலவு.. கதவு..ன்னு மட்டும் யோசிக்காம புதுசா ஏதாச்சும் செஞ்சு சாதிக்கணும்னு நினைச்சேன். அதை சாதித்தும் காட்டினேன். சாதாரண மர வேலை செய்யுறதுல கிடைக்கிற வருமானத்தைவிட இதுல நல்ல வருமானமும் கிடைக்குது. ஆரம்பத்துல, பழைய மாடல் டெலிபோன், லாந்தர் விளக்கு, கேரள மாடல் குத்து விளக்கு, ஆங்கிலேயர் காலத்து பீரங்கி, சுவர் கடிகாரம் உள்ளிட்டவைகளை மரத்துல செஞ்சுட்டு இருந்தேன். ஜல்லிக்கட்டு, ரேக்ளாவுக்கு ஆதரவாக தமிழக மக்களிடையே எழுந்த எழுச்சியைப் பார்த்த பிறகு, விவசாயத்துக்கும் அது சார்ந்த கால்நடை வளர்ப்புக்கும் நமது முன்னோர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை உணர்ந்தேன்.

அடிப்படையில், தச்சுத் தொழிலும் விவசாயம் சார்ந்த ஒரு தொழில் என்பதால், ஜல்லிக்கட்டுப் போராட்டங் களுக்குப் பிறகு, விவசாயம் சம்பந்தப்பட்ட ‘மினியேச் சர்’களை அதிகமாக உருவாக்கினேன். என்னவோ தெரியவில்லை கலப்பை, ரேக்ளா வண்டி, கட்டை வண்டி, கூண்டு வண்டி இவைகளை உருவாக்கும் போது மட்டும் என்னையும் அறியாமல் நெகிழ்ந்து போகிறேன்.” என்று சொன்ன குருபிரசாத், நிறைவாக, ”இரண்டு மாதங்களாக தினமும் 8 மணி நேரம் உழைத்து, தேக்கு மரத்தினாலான இந்த ராஜ்தூத் மாடல் ‘பைக்’கை உருவாக்கினேன். கோவையில் பைக் ரேஸ் நடத்துபவர்கள் இதைப் பார்த்துப் பாராட்டியதுடன், கண்காட்சியில் வைப்பதாகச் சொல்லி, 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் சென்றுவிட்டனர்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close