[X] Close

பணம் சம்பாதிப்பது குறிக்கோள் அல்ல: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் பெண் மருத்துவர்


sana-sheik-story-doctor-social-service

சனா ஷேக்

  • kamadenu
  • Posted: 30 Apr, 2018 17:45 pm
  • அ+ அ-

நாட்டில் நடக்கும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறைகள் என இன்னபிற குற்றங்களை அன்றாடம் ஊடகங்களில் படிக்கும்போது, இன்னும் மனிதம் இருக்கிறதா? அல்லது செத்துவிட்டதா? என கேட்கத் தோன்றும் அளவுக்கு வன்மம் புரையோடியிருக்கிறது. இந்தக் கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், உலகம் முழுவதும் மனிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், செழித்தோங்கவும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் யாருக்காகவோ நேசக் கரங்களை நீட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் போது அந்த நாளுக்கான அர்த்தம் இன்னும் கூடத்தான் செய்கிறது.

அப்படி மற்றவர்களுக்காக நேசக்கரங்களை நீட்டும் மருத்துவர் சனா ஷேக் என்பவரின் பயணத்தை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். தொழில் ரீதியாக மருத்துவர் என்ற போதிலும், தன் சக்தியை மீறி, யுனிசெஃப், என்ஜிஓ அமைப்புகளுடன் இணைந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மறுவாழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எப்படி தனக்கு இந்த எண்ணம் தோன்றியது? என்பதை சனா ஷேக் ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ (Humans of Bombay) எனும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சனா ஷேக் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அமைப்பு ஒன்றுடன் இணைந்து பணியாற்றினார். அப்போது, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு மீட்கப்பட்ட 11 வயது சிறுமியிடம் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

“அந்த சிறுமி  யாரிடமும் பேச மாட்டாள். சாப்பிட மறுத்துவிடுவாள். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டிருப்பாள். அவளை அதிலிருந்து மீட்க நான் அவளின் அருகில் மணிக்கணக்கில் அமைதியாக அமர்ந்திருந்தேன்.  என்னுடைய உணவை பகிர்ந்து கொள்கிறாயா என்று மட்டுமே அவளிடம் கேட்டேன். கொஞ்ச நேரம் கழித்து அவளே சாப்பிட்டாள். அதன்பிறகு நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். அந்த சிறுமி பற்றி விசாரித்தபோது அவளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால், அவளுக்காக அக்கறை எடுத்துக் கொண்டேன். இப்போது அவள் எனக்கு மகள் போன்றவள். அவளுக்கும் எல்லாமும் நான் தான்” என்று கூறுகிறார் சனா ஷேக்.

அதன்பிறகு சனா ஷேக் மருத்துவர் ஆனார். எல்லோரைப் போலவும் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். ஆனால், வேலைக்கு சேர்ந்த 10 நாட்களிலேயே தன்னுடைய பணி இதுவல்ல என்பதை உணர்ந்தார். தான் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட 70 சதவீதம் குறைவாக வழங்கும் எய்ட்ஸ் நோயாளிகளிடையே பணியாற்றும் தன்னார்வ அமைப்பிடம் இணைந்து பணியாற்றினார்.

இந்த காலத்தில் இந்தியா முழுவதும் பயணித்து எய்ட்ஸ் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். யுனிசெஃப் அமைப்புடனும் இணைந்து செயல்பட்டார். இந்த செயல்பாடுகள் மூலம் சனா ஷேக்குக்கு ஒன்று புரிந்தது. அதனை அவரே கூறுகிறார், “இம்மாதிரியான பணிகளுக்கு தன்னார்வத்துடன் வருவது நல்லது தான். ஆனால், இதற்கான நிதி திரட்டல் என்பது அதைவிட முக்கியமான ஒன்று. அதற்காக, இந்த பணிகளை விடவும் நான் நிறைய வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன். நிதி ஆதாரத்துக்காக அதிகம் சம்பாதிக்க வேண்டும்” என்கிறார் சனா ஷேக்.

அதன்பிறகு சனா ஷேக் என்ன செய்தார் தெரியுமா? மார்கெட்டிங் துறையில் எம்பிஏ படித்தார். இப்போது அவருக்கு 25 வயது தான். இந்த வயதில் குடும்பம் மற்றும் உறவினர்களிடம் இருந்து வரும் திருமணம் குறித்த நெருக்கடிகளைக் கடந்து மருத்துவம் தவிர்த்து இன்னொரு பட்டத்தையும் பெற்றார்.

“இதுதான் என்னுடைய வேலை. வாய்ப்புகள் நிறைய உள்ளன. இப்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் நான் துணை இயக்குநர். எனக்கு 30 வயது கூட ஆகவில்லை. மருத்துவராக இருந்து மார்கெட்டிங்கிலும் கால் பதித்து வெற்றி கண்டுள்ளேன். உங்களுடைய பாதையை மாற்றுவதென்பது முழு வாழ்க்கையையும் அதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது” என்கிறார்.

மருத்துவராகவும், அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மறுவாழ்வுக்காக நிதி திரட்ட மார்கெட்டிங் துறையிலும் சாதித்திருக்கும் சனா ஷேக் நமக்கு கூறும் பாடம் ஒன்று தான். “வெற்றி என்பதற்கான அர்த்தம் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆனால், என்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது இதுதான். நாம் பயணிக்கும் பாதையில் மற்றவர்களுக்கு உதவிட மறந்துவிடக் கூடாது. மற்றவர்களுக்கு உதவுவதைவிட நிறைவான ஒன்று வேறு ஏதும் கிடையாது. இதைத்தான் நான் வெற்றியாக கருதுகிறேன்”.

- நந்தினி வெள்ளைச்சாமி

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close