[X] Close

சிலிர்ப்பூட்டும் மினி சினி களஞ்சியம்


mini-cine-treasure

  • Team
  • Posted: 01 Mar, 2018 07:33 am
  • அ+ அ-

சிலரைப் பார்த்து, ‘உன்னைய யாரோ தப்பா இந்த வேலைக்கு எடுத்துருக்காங்க’ என்று கேலி செய்வோம். இன்னும் சிலரைப் பார்த்தால், ‘அண்ணே.. நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல..’ என்று வியந்து போவோம். இதில், இரண்டாவது ரகம் கு.கணேசன்.

சினி களஞ்சியம்

தமிழில் 1947-ல் ஆரம்பித்து 1980 வரையில் வெளியான சினிமாப் படங்கள் பற்றியும் அதுபற்றிய தகவல்களும் இவருக்கு அத்துப்படி. படம் வெளியான நாள், நடித்தவர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், ஓடிய நாட்கள், கதைச்சுருக்கம், பாடல்கள், சென்சார் சர்ச்சைகள் என்று எதைக்கேட்டாலும் சொடக்கிடும் நேரத்தில் கொட்டுவார் மனிதர். கூடவே, அந்தப் படங்களைப் பற்றிய சிறப்புத் தகவல்களையும் தட்டிவிடுவார். ‘தமிழில் வெளிவந்த முதல் ஈஸ்ட்மென் கலர் படம் அது.., கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் இது.., தமிழ் சினிமா நடிகர்களில் முதன் முதலில் பஞ்ச் டயலாக் பேசிய நடிகர் - இப்படி மினி சினி களஞ்சியமாக சிலிர்க்க வைக்கிறார் கணேசன்.

தமிழகத்தில் அந்தக் காலத்தில் வெற்றிகரமாக ஓடிய பிறமொழிப்படங்களைப் பற்றியும் விரல் நுனியில் பேசுகிறார். ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ நடிகர்கள் வரிசையில், முதல் நாயகரான சீன் கேனரிக்கு மதுரை கரிமேட்டில் ரசிகர் மன்றம் இருந்த தகவல், ‘அமெரிக்கா நைட்’ போன்ற ‘நைட் சீரிஸ்’ படங்கள் மதுரையில் எந்தெந்த தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடின என்பதையெல்லாம்கூட சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார் கணேசன்.

நூலகங்களுக்குப் போவேன்

“ஃபிலிம் நியூஸ் ஆனந்தனையே மிஞ்சிடுவீங்க போலயே சார்.. எப்படி இப்படி?” என்று அவரைக் கேட்டால், ‘ஃப்ளாஷ் பேக்’கிற்கு போய்விடுகிறார் மனிதர். “அந்தக் காலத்துல இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாதானே.. எனக்கு 10 வயசிருக்கும் போது மதுரைக்கு குடிபெயர்ந்தோம். அப்ப மதுரைக்குள்ள 14 தியேட்டர்கள் தான் இருந்துச்சு. அப் பெல்லாம், சினிமா பாக்குறதும், சினிமா போஸ்டர்களை வெறிக்கப் பார்ப்பதுமே வேலையாத் திரிஞ்சிருக்கேன். சினிமா செய்திகளைப் படிக்கிறதுக்கும் பார்ப்பதுக்குமே நூலகங்களுக்குப் போவேன்.

அந்தக்காலத்தில், ஞாயிறுதோறும் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்கள் சார்பில் ரசிகர்களுக்காகவே தனித்தனி படிப்பகங்களைப் போடுவார்கள். அதில், சினிமா இதழ்கள் அனைத்தும் கிடைக்கும். அதேபோல, தினமும் மாலையில் ஜான்ஸிராணி பூங்காவில் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், மீனாட்சி பூங்காவில் சிவாஜி ரசிகர்களும் கூடுவார்கள். புதிதாய் வெளிவந்த படம், ஓடிய பழைய படம், வரப்போகிற படத்தைப் பற்றிய தகவல்களை எல்லாம் அங்கே உட்கார்ந்து சுவாரசியமாகப் பேசுவார்கள். அதையெல்லாம் கேட்டுக் கேட்டு சினிமா பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்” என்கிறார் கணேசன்.

‘அலேக்’ ஓட்டல்

சினிமாவுடன் தொடர்பில்லாத வித்தியாசமான தகவல்களும் கணேசன் வசம் ஏராளம் இருக்கின்றன. “மதுரை நேதாஜி ரோட்டில் அப்ப ‘அலேக்’ என்றொரு ஓட்டல் இருந்தது. 1968-ல் வெளியான ‘பணமா பாசமா’ படத்தில் இடம்பெற்ற, ‘வாழைத் தண்டு போல உடம்பு... அலேக்’ என்ற பாடலின் தாக்கமே நேதாஜி ரோடு ஓட்டலுக்கு அந்தப் பெயர் ஒட்டிக் கொண்டது” என்கிறார் கணேசன்.

இப்படியெல்லாம் பேசுவதால் இவர், வெறும் சினிமா பித்தர் என்று நினைத்துவிட வேண்டாம். ஐயா, நிறைய படித்தவர். 1976-ல், சமூக நலத்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்து, 2002-ல், மாவட்ட மறுவாழ்வு அலுவலராக விருப்ப ஓய்வுபெற்றவர். இப்போதிருக்கும் திரைக்களம் பற்றியும் நிறையப் பேசுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close