[X] Close

காவிரி போராட்டத்தை இப்படியும் செய்யலாம்.. ஸ்டாலினுக்கு 'சுயேட்சை வேட்பாளரின்' வித்தியாசமான யோசனை


kuppul-ji-devdoss

படம்: எல்.சீனிவாசன்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Apr, 2018 17:04 pm
  • அ+ அ-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் மயிலாப்பூரைச் சேர்ந்த குப்பல் ஜி தேவதாஸ், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு வித்தியாசமான யோசனையை முன்வைத்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 'வெள்ளை நிற காரில் காவிரிக்காக... மத்திய, மாநில அரசைக் கண்டித்து' எனப் பெரிய எழுத்துகளில் பேனர் வைத்திருந்தவரை நமது புகைப்பட நிருபர் எல்.சீனிவாசன் கேமராவில் அடைத்துக் கொண்டுவந்தார்.

அடடே கார் வித்தியாசமாக இருக்கிறதே என காருக்கு சொந்தக்காரரை தொடர்பு கொள்ள மறுமுனையில் அவர், "வணக்கம். என் பேரு குப்பல் ஜி தேவதாஸ். மந்தைவெளியில் டிராவல்ஸ் வைத்திருக்கிறேன். எனக்கு சமூக அக்கறை இருக்கிறது. அதனால், சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுப்பேன். அப்படித்தான் இந்த கார் போராட்டமும்" என்றார்.

அவர் அளித்த பேட்டி..

ஏன் இந்தப் போராட்டம்?
தமிழகத்துக்கு காவிரி நீர் அவசியம். அதேவேளையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடுவதும் அவசியம். தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பஸ், ரயிலை மறிக்கின்றனர். அதில் என்ன கன்னடர்களா பயணம் செய்கின்றனர். தமிழக மக்கள்தானே பயணம் செய்கின்றனர். கன்னடர்கள் கவனத்தையும் மத்திய அரசின் கவனத்தையும் ஈர்க்க ஏன் நம் சொந்த மக்களைக் கஷ்டப்படுத்த வேண்டும்.

காவிரி போராட்டம் இப்போது மிக அவசியமானது அல்லவா? எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினால்தானே அரசுகளின் கவனத்தை ஈர்க்க முடியும்? அதை குறை கூறுகிறீர்களா?
குறை கூறவில்லை. பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் போராடுங்கள் எனக் கூறுகிறேன். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இவர் காவிரி பிரச்சினைக்காக மொட்டை அடித்துக் கொள்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய தொண்டர்கள் லட்சக் கணக்கானோரும் மொட்டை அடித்துக் கொள்வார்கள். ஒட்டுமொத்த முடியையும் மூடைகளாகக் கட்டி மோடிக்கு அனுப்பிவைக்கலாம். இதுகூட கவன ஈர்ப்புப் போராட்டம்தான். இப்படி வித்தியாசமாக மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட வேண்டும். அதனால்தான் நான் எனது சொந்த செலவில் எனது சொந்த வாகனத்தில் இப்படி காவிரிக்காக குரல் கொடுத்து வாசகங்கள் எழுதி காருடன் நகர்வலம் செய்கிறேன்.

அடுத்த இலக்கு?
இப்போது சென்னையில் மட்டும் பயணம் செய்கிறேன். எனக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடுவதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். எனவே, அடுத்ததாக இந்த காரில் தமிழகம் முழுவதும் காவிரிக்காக குரல் கொடுத்து பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு எப்படி?
என் மனைவி அவ்வப்போது ஆதரவு தெரிவிப்பார். சில நேரங்களில் பொதுப் பிரச்சினைகளுக்காக அதிகமாக சொந்தப் பணத்தை செலவிடுவதாகக் குறை கூறுவார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் எனக்கு வருத்தமில்லை. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

- பாரதி ஆனந்த்

வாக்களிக்கலாம் வாங்க

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close