[X] Close

இவங்கதான் ஷின்சானோட அம்மா!- 'மிட்ஸி' ஜெய்வித்யா


jaividhya-shinchan-voiceover-artiste

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Apr, 2018 16:04 pm
  • அ+ அ-

"ஷின்சான் எதுக்கு இப்ப வீடு ஃபுல்லா பொம்மையா போட்டு வச்சிருக்க? இத எல்லாத்தையும் எடுத்து வை.. இத எடுத்து வச்சாத்தான் இன்னிக்கு ஒனக்கு சாப்பாடு. இந்த ஹேரி வரட்டும் இன்னிக்கு ஒன்ன என்ன பண்றேன் பாரு..." எந்த வீட்டுக்கு நாம் சென்றாலும் ஷின்சான் கார்ட்டூனிலிருந்து ஏதாவது ஒரு டயலாக் இப்படி ஒலித்துக் கொண்டிருக்கும். 

ஷின்சானில் அதிகம் பேசும் அந்த டாக்கடிவ் கேரக்டர் மிட்ஸியைப் பிடிக்காத குழந்தைகளும் இருக்க மாட்டாங்க. எப்பப்பார்த்தாலும் ஷின்சான் தான்னு திட்டிக்கிட்டே கூடவே உட்கார்ந்து பெரியவங்களும் இல்லாம இல்ல.


சம்மர் லீவு வேற வரப்போற இந்த வேளையில ஷின்சான் கார்ட்டூனின் உலகப் புகழ் மிட்ஸியின் குரலுக்குச் சொந்தக்காரரான ஜெய்வித்யாவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியே.

நீங்கள் எத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் இருக்கிறீர்கள்?
எனக்கு இப்ப வயது 38. நான் இத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு 8 வயது இருக்கும், அகில இந்திய வானொலியில் என் குரல் முதலில் ஒலித்தது அப்போதுதான்.

இத்துறைக்கு நீங்கள் வரக்காரணம் யார்?
எனது அம்மா. அவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றி வந்தார். 'அன்பின் அலைகள்' என்று வாரம் ஒருமுறை இலங்கையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிறுகதை வாசிப்பது போன்ற பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை விழாக்காலத்தின்போது நான் எனது தாயுடன் அகில இந்திய வானொலிக்குச் சென்றிருந்தேன். அப்போது குழந்தை ஏசு குறித்த ஒரு கவிதையை வாசிக்க வேண்டியிருந்தது. எனது அம்மாவின் தோழி, இதை ஒரு குழந்தையே வாசித்தால் நன்றாக இருக்கும் எனக்கூறி என்னிடம் அந்தக் கவிதை இருந்த தாளைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். நான் யதார்த்தமாக வாசித்தேன். அது சிறப்பாக இருந்ததாகக் கூறி டேக்கில் வாசிக்கச் செய்தார்.
அப்படித்தான், எனது வாய்ஸ் ஓவர் பயணம் ஆரம்பித்தது.

டப்பிங், வாய்ஸ் ஓவர் இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
டப்பிங் என்பது ஏற்கெனவே வழங்கப்பட்ட ஸ்க்ரிப்டை அப்படியே அந்த கதாபாத்திரத்தின் வாய் அசைவுக்கு ஏற்பப் பேசுவது. அது இமிடேட் செய்வது. டப்பிங் செய்யும்போது
சிறுசிறு நுணுக்கங்களைப் புகுத்தமுடியுமே தவிர புதுமைகள் படைக்க முடியாது. என்னைப் பொருத்தவரை டப்பிங் செய்வது இமிடேட் செய்தல்; வாய்ஸ் ஓவர் வழங்குபவர் க்ரியேட்டர். 
டப்பிங் பேசுவது மிகக்கடினமானதும் கூட. டப்பிங் பேசும்போது அந்த பாத்திரத்தின் உணர்வுகளை நான் உள்வாங்கிப் பேசவேண்டியிருக்கும். அழுகை, சிரிப்பு, கோபம், ஆவேசம் என மாறி மாறி உணர்வுகளை உள்வாங்கிப் பேசும்போது எனது அடையாளம் எந்த இடத்திலும் வெளியாகிவிடக்கூடாது. திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு அங்கே அந்த நடிகைதான் தெரிய வேண்டும். எங்கேயாவது ஜெய்வித்யா தெரிந்துவிட்டால் அது தோல்விக்கு சமம்.

 

ஷின்சான் கார்ட்டூனில் உங்கள் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்களேன்..

ஷின்சான் ஒரு ஜப்பானிய கார்ட்டூன். ஜப்பான் மக்களின் வாழ்வியல் முறை குடும்ப முறை இந்திய வாழ்வியல் முறையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகும். அதன் காரணமாகவே மிட்ஸியின் குரல் இவ்வளவு பிரபலமாகிவிட்டது எனக் கருதுகிறேன். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நடக்கும் கதை என்பது ஷின்சான் ஹிட் ஆவதற்கு இன்னொரு காரணம். 
நான் செல்லுமிடமெல்லாம் என்னைப் பலரும் எப்படி அறிமுகப்படுத்துகிறார்கள் தெரியுமா? "யார் இந்த ஆன்ட்டி தெரியுமா? இவர்தான் ஷின்சானில் மிட்ஸிக்கு குரல் கொடுப்பவர்" என்றே அறிமுகப்படுத்துகிறார்கள்.
சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளில் இருந்துகூட என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுபவர்களும் இருக்கிறார்கள். டப்பிங், வாய்ஸ் ஓவர்களுக்கு எனக்கு எத்தனையோ விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், மிட்ஸியின் குரல் எனக்குப் பெற்றுத்தந்த அங்கீகாரமும் பெயரும் புகழும் அளப்பரியது.
10 வருடங்களாக ஷின்சான் கார்ட்டூனுக்கு வாய்ஸ் ஓவர் தருகிறேன். முதலில் இந்தியில் ஸ்க்ரிப்ட் வரும் அதை அப்படியே தமிழாக்கம் செய்து பேசுவோம். 1000 அத்தியாயங்களைக் கடந்து மிட்ஸியின் குரல் ஒலித்துக் கொண்டிருப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியோ அவ்வளவு மகிழ்ச்சி குழந்தைகள் ரசிக்கும் குரலாக இருப்பதில் உள்ளது.

உங்கள் குரலுக்கு இப்போது கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. நீங்கள் ரசிக்கும் குரல்?
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனுராதா மேடத்தின் குரல். அவருடைய குரலுடன் எனது குரல் வெகுவாக ஒத்துப்போகும். நிறையபேர் என்னிடம் அனுராதா மேடத்துக்கு நான் உறவா எனக் கேட்டிருக்கிறார்கள். எனக்கு முதன்முதலில் டப்பிங் வாய்ப்பு கிடைத்ததே அவரால்தான். கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற நாடகத்தில் அனுராதா மேடம் முக்கிய கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்துகொண்டிருந்தார். அவரால், ஒருநாள் அவரால் டப்பிங்குக்கு வரமுடியவில்லை எனது குரல் அவரது குரல்போல் இருந்ததால் அன்றைய தினம் அவருக்கு ரீப்ளேஸ்மென்டாக நான் பேசினேன். அப்படித்தான் எனது குரல் டப்பிங் துறையில் ஒலிக்கத் தொடங்கியது.

டப்பிங், வாய்ஸ் ஓவர் கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அட்வைஸ்..

இதில் அட்வைஸ் சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஏனென்றால் இந்த ஒரு பேசன் (அழுத்தமான உணர்வு). ஆர்வத்துடன் இதில் ஈடுபட வேண்டும். டப்பிங், வாய்ஸ் ஓவர் செய்வதை நீங்கள் ஏதாவது இன்ஸ்டிட்டியூட்டில் கற்றுக்கொள்ள முடியாது. அது பயிற்சியில் கைவசப்பட வேண்டும். எனது 30 வருட அனுபவமே என்னை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய நுணுக்கத்தைக் கற்றுக்கொள்வீர்கள். ஆர்வம் இருந்தால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகுங்கள். நாம் டப்பிங் பேசும்போது அந்த நடிகர் / நடிகைக்கு ஈடு கொடுக்கும் வகையில் நம் குரலும் நடிக்க வேண்டும். இல்லையேல் இரண்டும் வெவ்வேறு டிராக்கில் சென்றுகொண்டிருக்கும். செய்யும் தொழிலை ரசித்து உணர்வுபூர்வமாக செய்தால் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

-பாரதி ஆனந்த்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close