[X] Close

நீங்கள் ஃபேஸ்புக் பார்க்கும்போது இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க..


a-hunger-to-help

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Apr, 2018 09:44 am
  • அ+ அ-

காலை எழுந்தவுடன் ஃபேஸ்புக், பின் ட்விட்டர், கூகுள், இஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்று நம்மில் பலரது வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றாடம் நாம் ஃபேஸ்புக்கில் சராசரியாக ஒரு மணி நேரமாவது செலவழிக்கிறோம். அதில் எந்நேரமும் நம்மையும் நம் நட்பு வட்டாரத்தையும் பற்றி சிந்திப்பதைக் காட்டிலும் சில நேரங்களில் நல்ல விஷயங்களிலும் கவனம் செலுத்தலாமே.

அப்படி நீங்கள் ஆசைப்பட்டால் https://www.facebook.com/rotigharofficial இந்த ஃபேஸ்புக் பக்கத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
மும்பையில் உள்ள தானே நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது ஹரி ஓம் நகர். ஒரு பக்க மாட மாளிகைகள், மறுபுறம் குப்பையும் குடிசைகளும். அப்படியே இருவேறு உலகங்களை நம் கண் முன் நிறுத்தும் பகுதி.

அங்குதான் சினு க்வார்தா தினமும் மாலை மயங்கும் வேளையில் சென்றுவிடுவார். சினு ஒரு தன்னார்வ் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர். ஒருமுறை தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக ஹரி ஓம் நகருக்குச் சென்றவர் அப்பகுதியின் பரிதாப நிலையைக் கண்டு வெகுவாக கவலையுற்று இருக்கிறார். நம்மில் பலரும் இப்படி தினமும் எதையாவதுப் பார்த்து பரிதாபப்பட்டு உச்.. உச் கொட்டிவிட்டு கடந்து செல்வது உண்டு.

ஆனால், அவர் அப்படிச் செல்லவில்லை. அந்தப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நேரமாவது சத்தான முதலில் சுத்தமான உணவு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார்.

டிசம்பர் 2017-ல் ரோட்டி கர் என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார். அதன்படி ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் சாதம், பருப்பு, ஊறுகாய் வழங்கத் தொடங்கினார். சில நாட்கள் பாலும் சேர்ந்து வழங்குவார். இன்னும் சில நாட்கள் சில சாக்கலேட்டுகளும் கேக்குகளும் மெனுவில் சேர்ந்து கொள்ளும். வாரம் ஒருமுறையேனும் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவார். சில நாட்கள் பாவ் பாஜியும் சப்ஜி ரொட்டியும் கூட வழங்குவார். தினமும் 100 பேருக்கு உணவு. இதுவே இவருடைய டார்கெட்.

சினுவின் தந்தை ஒரு தாபா நடத்தி வருகிறார். அங்குதான் உணவு தயாராகிறது. இந்தத் திட்டத்துக்கு கல்லூரி மாணவர்கள் பணம் அளித்து உதவுகின்றனர். சில நல்ல உள்ளம் கொண்டவர்களும் பங்களிப்பு செய்கின்றனர். சாதாரணமான உணவு வழங்கவே நாள் ஒன்றுக்கு ரூ.2500 செலவாகிறது.

இப்போது ரோட்டி கர் ஃபேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தின் வாயிலாக ஒரு நபருக்கான உணவுக்குச் செலவாகும் ரூ.35 கூட நீங்கள் பங்களிப்பாகத் தர முடியும்.

சினுவுக்கு உதவியாக சில தன்னார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் தினமும் மாலை வேளையில் சமைத்த உணவுடன் ஹரி ஓம் நகருக்குச் செல்கின்றனர். அவர்களை பைய்யா, திதி (அக்கா) என்று அன்புடன் அழைக்கும் குழந்தைகள் ஒருவேளையாவது கிடைக்கும் சுத்தமான சுகாதாரமான உணவை ரசித்து புசிக்கின்றனர்.
ஃபேஸ்புக்கில் இப்படியான நல்ல விஷயங்களையும் நாம் செய்யலாம் என்பதற்கு ரோட்டி கர் ஓர் உதாரணம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close