[X] Close

இரண்டாயிரம் வகைகளில் இட்லி செய்யும் இனியவன்


idlis-unlimited

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Mar, 2018 16:29 pm
  • அ+ அ-

இன்று உலக இட்லி தினமாம். #WorldIdliDay என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானதை வைத்தே இதைத் தெரிந்து கொண்டேன். அப்போதுதான் இனியவன் குறித்த செய்தியும் கண்ணில் பட்டது.


இனியவனின் ஆரம்ப காலத்தை முதலில் பார்த்துவிடுவோம். கோயமுத்தூர்தான் இனியவனுக்கு சொந்த ஊர். 8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். அதன்பின்னர் ஹோட்டல்களில் மேசை துடைப்பது, டீக்கடைகளில் டம்ப்ளர் கழுவுவது எனப் பலவேலைகளைச் செய்து பிழைப்பை நகர்த்தியு பின்னர் ஆட்டோ ஓட்டுநராகியிருக்கிறார்.

ஒரு நாள் ஒரு பெண்ணை சவாரிக்காக ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அவர் ஒரு பெரிய அண்டாவை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அந்த அண்டா நிறைய இட்லி மாவு இருந்துள்ளது. அவரிடம் கேட்டபோது, தன் பெயர் சந்திரா என்றும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு இட்லி சுட்டு விற்பதற்காகவே அவ்வளவு மாவு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

சந்திரா பின்னர் இனியவனின் ஆட்டோ வாடிக்கையாளரானார். ஒருகட்டத்தில் சந்திரா சுட்டுத்தரும் இட்லிகளைக் கடைகளில் விநியோகித்தார். இட்லி மீது இப்படித்தான் இனியவனுக்கு இனிய அபிப்ராயம் ஏற்பட்டது.
முன் கதை முடிந்தது. இனியவன் கோவையில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்கிறார்.

 

சென்னை வந்த கதையும் சென்னையில் வளர்ந்த கதை குறித்தும் இனியனின் வெர்ஷன் வருமாறு:


நான் சென்னைக்கு 1997-ல் வந்தேன். என்னுடன் இட்லி வேகவைக்கும் இரண்டு பாத்திரங்களைக் கொண்டு வந்தேன். நேரே வட சென்னைக்குச் சென்றேன். ஒரு ஓலைத்தட்டி வேய்து அதன் கீழ் ஒரு சிறிய இட்லிக்கடை போட்டேன். முதல் நாள் அன்றே மழை கொட்டித் தீர்த்தது. இட்லிமாவு எல்லாம் வீணாகப்போனது.
மனம் தளரவில்லை.  அடுத்த நாள் என இட்லிக்கடை வியாபாரத்தைத் தொடர்ந்தேன். ஆயிராமாயிரம் இட்லிகளை இதுவரை விற்பனை செய்திருப்பேன். இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு காலகட்டத்தில், இட்லியை எனது க்ளையன்டுகளிடம் காட்ட அதை ஒரு சூட்கேஸில் வைத்து எடுத்துச் செல்வேன். அப்போதுதான் அதன் பதம் சரியாக இருக்கும் என்பதால் அவ்வாறு எடுத்துச் செல்வேன். 

ஒருகட்டத்தில் ஒரே மாதிரியான இட்லி லேசான சலிப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் விதவிதமான இட்லி குறித்த எண்ணம் வந்தது. முதலில் இளநீர் இட்லி செய்தேன். மாவில் தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்ப்பேன். அடுத்து தட்டு இட்லி, டம்ப்ளர் இட்லி, கப் இட்லி என விதவிதமாக செய்தேன். பின்னர் குழந்தைகளைக் கவரும் வகையில் மிக்கி மவுஸ் இட்லி, குங்ஃபூ பாண்டா இட்லி ஆகியனவற்றை தயார் செய்தேன். கீரை இட்லி, பீட்ரூட் இட்லி என 2000 விதமான இட்லிகளைச் செய்கிறேன். ஒரு நாள் என் குழந்தைகள் பீட்சா கேட்டார்கள். இட்லி மாவை எடுத்து வார்த்து அதன் மீது மதியம் செய்து காய்கறி பொறியலை வைத்து சமைத்துக் கொடுத்தேன். பீட்சா இட்லி உருவானது.

இட்லியா என்று வெறுப்புடன் முகத்தைக் காட்டுபவர்களும் ரசிக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தனை வகை இட்லிகளைச் செய்யத் தொடங்கினே. இன்று என்னிடம் சாக்லேட், பாதாம், ஆரஞ்சு, சோள இட்லி என விதவிதமான இட்லிகள் இருக்கின்றன.
இவ்வாறு இனியன் சொல்லிமுடித்தார்.


இதையெல்லாம் அவர் எங்கிருந்து பேசினார் தெரியுமா? அம்பாசிடர் பல்லவா என்ற சென்னையின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றில் நடந்த இட்லித் திருவிழாவில் நின்றுகொண்டு பேசினார்.
இட்லி தினத்தில் இனியவனை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

- அகிலா கண்ணதாசன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close