[X] Close

ஆர்.ரோஹிணி.. கும்பகோணம் புல்லட் ராணி 


a-woman-mechanics-tale-from-the-temple-town-of-kumbakonam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Mar, 2018 13:47 pm
  • அ+ அ-

புல்லட் வண்டிகள் என்றாலே அது ஆண்களுக்கானது, ஆண்களின் மிடுக்கை மிளிரச் செய்வது என்றே அறியப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி கும்பகோணத்தில் இருக்கும் ஆர்.ரோஹினி என்ற பெண் ஒருவர் புல்லட் ராணி என அறியப்படுகிறார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
ஆர்.ரோஹினி. வயது 24. புல்லட் வண்டியின் அருகில் நிற்கும்போது இவரைவிட வாகனம்தான் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. ஆனால், அந்த சிறுபெண் புல்லட் வண்டியை மிக அசாதாரணமாக சீர் செய்கிறார். கைதேர்ந்த மெக்கானிக் போல் ஒரு மரப்பலகை மீது புல்லட் வண்டியை நிறுத்தி அதை அவர் சீர் செய்யும் அழகு காண்போரை பிரம்மிக்க வைக்கிறது. 
சில தினங்களுக்கு முன் ரோஹினி புல்லட்டை சீர் செய்யும் காட்சிகள் செய்தியாக வெளியானது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனையடுத்து அப்பகுதியில் இன்னமும் பிரபலமாகிவிட்டார் ரோஹினி. 
ரோஹினி நம்மிடம் பேசும்போது, "என்னால் புல்லட் மட்டுமல்ல எல்லா வகையான இருச்சக்கர வாகனங்களையும் ரிப்பேர் செய்ய முடியும். அப்புறம் இந்த புல்லட் ராணி அடைமொழி எல்லாம் வேணாங்க. என்னை ரோஹினி என அழைப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. 2008-ம் ஆண்டு முதல் என் அப்பா ஜெ.ரவியுடன் இந்தக் கடையில் அவருக்குத் துணையாக மெக்கானிக் வேலை செய்கிறேன்" என்றார். 


இது ஆண்களுக்கான வேலை மட்டுமல்ல.. 
சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறார் ரோஹினி. நானும் அப்பாவும் காலை 10 மணிக்கே கடைக்கு வந்துவிடுவோம். இரவு 9 மணி வரை வேலை. ஒரு வண்டி ஒர்க்‌ஷாப்புக்கு வந்தால் முதலில் நான்தான் அதைச் சோதிப்பேன். அதன் பின்னர் அப்பாவும் நானும் கலந்தாலோசித்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். 
நான் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போயிருக்கலாம். ஆனால், என்னால் எல்லாவிதமான இருசக்கர வாகனங்களையும் சீர் செய்ய முடியும். இது பெண்களுக்கு ஏற்ற வேலையே. அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள இல்லத்தரசிகள் இந்த வேலையைச் செய்யலாம். இன்றெல்லாம் விவசாய களத்தில் வேலைக் கிடைப்பது அரிதாகிவிட்ட சூழலில் பெண்களுக்கு இந்த வேலை உகந்தது. எனக்குத் தெரிந்த இந்தப் பணியை நான் பிற பெண்களுக்கும் கற்றுத்தர தயாராக இருக்கிறேன். ஆனால், இந்தத் தொழிலை செய்யப் பெண்களிடம் இன்னும் தயக்கம் இருக்கிறது. இது ஆண்களுக்கான வேலை என அவர்கள் கருதுகின்றனர். 
கனவுகளுக்கு எல்லை இல்லை.. 
ரோஹினி மெக்கானிக்காக மட்டுமில்லை ஒரு பலசரக்குக் கடையில் டெலிவரி கேர்ளாகவும் பணியாற்றியிருக்கிறார். அப்போதுதான் அந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. 2008 ஜூலை 7-ம் தேதி பொருட்களை டெலிவரி செய்துவிட்டு திரும்பும்போது பஸ் மோதி விபத்துக்குள்ளானார். 20 நாட்கள் மருத்துவமனையில் கழிந்தன. அதனால், 12-ம் வகுப்புத் தேர்வு எழுத முடியாமல் போனது. இப்போதும் கூட ரோஹினிக்கு சில நாட்களில் திடீர் தலைவலி உடல்வலி ஏற்படுகிறது. அதன் பின்னர் பள்ளிப் படிப்பை அவர் தொடராமல் விட்டுவிட்டார். பல்வேறு சமூக அமைப்புகளும் ரோஹினியை கவுரவித்துள்ளது. ஆனால், இன்றும் அவர் மனதை நெருடிக் கொண்டிருப்பது, பள்ளிப் படிப்பை முடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும்தான். ஆனால், என் பகுதியில் உள்ள மற்ற பெண்களுக்கு நான் முன்னுதாரணமாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. கடின உழைப்பினால் எதுவும் சாத்தியமே. கனவுகளுக்கு எல்லை இல்லை எனக் கூறுகிறார் ரோஹினி. 
தந்தையைப் பாராட்டுவோம்.. 
ரோஹினி இன்று புல்லட் வண்டியைக்கூடச் சீர்செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது தந்தை ரவி. இது குறித்து ரவி கூறும்போது "எனது மெக்கானிக் கடை இருக்கும் பகுதியில் மகளிர் கல்லூரி இருக்கிறது. பெண்கள் இந்தக் கடை வழியாகத்தான் சென்று வருவர். எனது கடையில் ஆண்களைப் பணியமர்த்தினால் அநாவசியமாகச் சர்ச்சைகள் ஏற்படக்கூடும் என்பதால் எனது குடும்பப் பெண்களுக்கே இத்தொழிலை சொல்லிக் கொடுத்தேன். பகல் நேரங்களில் எனது மனைவி எனக்கு உதவியாக இருப்பார். எனது மூத்த மகளுக்கும் இந்த வேலை தெரியும். ஆனால், திருமணத்துக்குப் பின் அவர் இந்த வேலையைச் செய்வதை நிறுத்திவிட்டார். மற்ற மூன்று பெண் குழந்தைகளுமே இதில் கைதேர்ந்தவர்கள்தான். 
எனது மெக்கானிக் கடையை தனியாக நடத்தக்கூடிய அளவுக்கு எனது மகள் ரோஹினிக்கு திறமை இருக்கிறது" என்றார். 
முயற்சி செய்.. தந்தை சொன்ன மந்திரம்: 
எல்லாவற்றிலும் முயற்சி தேவை. அது வண்டி உதிரிப் பாகங்களை உடைப்பதாகக்கூட இருக்கலாம். ஒழுங்காக முயன்றால் எல்லாம் சாத்தியம் என்பதே அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தது. இப்போதெல்லாம் வண்டியின் ஒரிஜினல் உதிர்ப் பாகங்களில் எவ்வித சேதமும் ஏற்படுத்திவிடாமல் அதை சீர் செய்ய நான் கற்றுக்கொண்டேன் எனப் புன்னகைத்தார் ரோஹினி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close