[X] Close

ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை உயிருக்கு போராட்டம்: ரத்த மாற்று சிகிச்சையால் காப்பாற்றிய கால்நடை மருத்துவர்


jallikattu-kaalai-dc

ஜல்லிக்கட்டு காளை கருப்புக்கு மற்றொரு காளையிடம் சேகரித்த ரத்தத்தை ஏற்றும் கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்.

  • நாகப்பன்
  • Posted: 25 Mar, 2018 15:50 pm
  • அ+ அ-

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ரத்தசோகையால் உயிருக்குப் போராடிய ஜல்லிக்கட்டு விளையாட்டில் கலக்கிய காளையை ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டு கால்நடை மருத்துவர் காப்பாற்றினார்.

மதுரை மாவட்டம் அருகே உள்ளது அ.புதுப்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரிடம் உள்ள 7 வயதான ‘கருப்பு’ என்ற காளை தமிழகத்தில் நடந்த பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளது. ஜல்லிக்கட்டில் இந்த காளையை இதுவரை வீரர்கள் அடக்கியதே இல்லை. இந்த ஆண்டும் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் இக்காளை பரிசுகளை வென்றது.

இந்நிலையில், இந்த காளைக்கு கடந்த 10 நாட்களாக உன்னி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உயிருக்கு போராடியது. இக் காளையை அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் பரிசோதித்தார். அவர் கடந்த ஒரு வாரமாக இந்தக் காளைக்கு தீவிர சிகிச்சை அளித்தார். இந்த காளையின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தார். அப்போது, ‘அனாபிளாஸ்மா’ கிருமி காளையின் ரத்தத்தில் கலந்து இருப்பதை கண்டறிந்தார்.

இந்தக் கிருமியால் காளைக்கு ரத்த சோகை ஏற்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார். இதையடுத்து காளைக்கு ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக மனிதர்களுக்குத்தான் ரத்தம் பற்றாக்குறை, அசுத்த ரத்தம் ஏற்பட்டால் அதற்கு பதிலாக மற்றொரு நபரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்றப்படும். அதுபோல, இந்தக் காளைக்கும் மருத்துவர் மெரில்ராஜ் ரத்த மாற்று சிகிச்சை அளித்தார். மற்றொரு காளையிடம் இருந்து 2.5 லிட்டர் ரத்தம் எடுத்து ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட இந்த கருப்பு காளைக்கு ஏற்றினார். மருத்துவரின் இம்முயற்சியால் இந்த காளை காப்பாற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் மெரில்ராஜ் கூறுகையில், ‘‘மாடுகளுக்கு 11 வகையான ரத்த மாதிரிகள் உள்ளன. ஒரு மாட்டின் எடையில் 7 முதல் 8 சதவீதம் ரத்தம் இருக்கும். கோடை காலத்தில் மாடுகளுக்கு ரத்த சோகை, ரத்த உன்னிகள் அதிகம் காணப்படும். இவை அதிக எண்ணிக்கையில் பரவி மாட்டின் ரத்தத்தை உறிஞ்சிவிடும்.

இதில் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. அதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மாடுகளில் ரத்த உன்னிகள் பாதிப்பு ஏற்பட்டால் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தண்ணீரில் கலந்து மாடுகளுக்கு தொடர்ந்து அளிக்க வேண்டும், ’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close