[X] Close

இந்தியாவில் வசிக்கும் ஆப்ரிக்க மக்கள்: அடிமைகளாக வந்து ஒன்றாக கலந்த ‘சித்திக்கள்’


siddis

  • நெல்லை ஜெனா
  • Posted: 24 Mar, 2018 18:02 pm
  • அ+ அ-

பார்ஸிகள், அரேபியர்கள் என பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டினர் ஏராளாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா வந்த அவர்கள் இங்கேயே தங்கி விட்டனர். அதுமட்டுமின்றி இந்தியர்களில் ஒருவராகவும் மாறி விட்டனர்.

உலகின் பழமையான இனங்களில் ஒன்று பார்ஸி. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன், ஈரானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பார்ஸிகள் புலம் பெயர்ந்தனர்.  அப்படி அவர்கள் புலம் பெயர்ந்து வந்த பார்ஸிகளுக்கு நேசக்கரம் நீட்டியது இந்தியா.

அதுபோலவே தமிழக மற்றும் கேரள பகுதிக்கு பல நூற்றாண்டுக்கு முன் வந்த அரேபியர்கள் இங்கேயே தங்கி விட்டனர். இதுபோலவே இந்தியா வந்த வெளிநாட்டவர்களில் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நீக்ரோ இன மக்களும் ஒருவர்.

குஜராத், கர்நாடகா, மகாரஷ்டிரா மாநிலங்களில் வசிக்கும் இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் முதன்முறையாக எத்தியோப்பியாவில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆப்ரிக்க நாட்டில் அரேபிய படையெடுப்பு நடந்தபோது அங்கிருந்த மக்கள் பல நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

அவ்வாறு தப்பிச் வந்தவர்களில் முதல் குழுவினர் குஜராத் வந்து சேர்ந்துள்ளனர். அதன் பின் பல சமயங்களில் ஆப்ரிக்க நாட்டினர் இந்தியா வந்துள்ளனர். போர்ச்சுகீசியர்கள் இந்தியாவுடன் வணிக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டபோது, ஆப்ரிக்க மக்களை, அடிமைகளாக இங்கு அழைத்து வந்துள்ளனர். இவர்கள் 17ம் நூற்றாண்டில் இந்தியா வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் இறுதியாக வந்த குழுவினர் என தெரிகிறது. இவ்வாறு பல்வேறு கட்டங்களில் இந்தியா வந்த இவர்கள் இந்தியாவில் ‘சித்தி’ என பெயருடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் இவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாகவும் வேறு சிலர் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களாகவும், உள்ளனர்.  18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதும், மீண்டும் யாரும் தங்களை அடிமைப்படுத்திவிடாமல் இருக்க, இந்த சமுதாயத்தினர் காடுகளுக்குள் சென்று வாழத் தொடங்கிவிட்டனர். இன்றும் இந்த சமுதாயத்தினர் காடுகளிலேயே வசிக்கின்றனர்.

இந்த மக்களைப் பார்த்தால், ஆப்ரிக்க வம்சா வளியினர் என்று சொல்ல முடியாது. ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் அவர்களது சுருள்முடியின் மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மற்றபடி, ஆடை, அணிகலன், உணவு, பழக்க வழக்கம், கலாச்சாரம் என அனைத்திலும் இந்தியர்களாகவே சித்தி மக்கள் விளங்குகின்றனர். கன்னடம், கொங்கணி போன்ற மொழிகளையே பேசுகின்றனர்.

அவர்களது பெயர்களும் மகாராஷ்டிர, வடக்கு கர்நாடக பகுதிகளில் வசிக்கும் மற்ற மக்களின் பெயர்களை போலவே உள்ளது. அந்த பகுதி மக்கள் தங்கள் பெயர்களுடன் குடும்ப பெயர்களை சேர்த்து வைத்துக் கொள்வது போலவே இவர்களும் வைத்துக் கொள்கின்றனர்.

கர்மாகர், ஹனோட்கர்  போன்ற குடும்ப பெயர்கள் சித்தி மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களாக இருக்கும் சித்தி மக்கள், உடல் உழைப்பு சார்ந்த பணிகளிலேயே பெரிதும் ஈடுபடுகின்றனர். அதேபோல் வனப்பகுதியையொட்டிய கிராமங்களிலேயே வசிக்கின்றனர். ஆப்ரிக்க காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்த பழக்கம் அவர்களிடம் இன்னமும் தொடர்கிறது. இதனால் பெருமளவு சித்தி மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ஆப்ரிக்க நாட்டு மக்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது போலவே, சித்தி மக்களிடமும் அந்த ஆர்வம் உள்ளது. சித்தி மக்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க 1980ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் நிர்வாக சிக்கலில் இந்த திட்டங்கள் வெற்றி பெறவில்லை. கால்பந்து, ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் சிறப்புடன் விளங்கும் இவர்களுக்கு அதற்கான பயிற்சி அளித்து அவர்களை விளையாட்டு துறையில் சாதிக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

விளையாட்டு துறையில் சித்தி மக்களை மேம்படுத்துவதற்காக, இந்திய விளையாட்டு ஆணையம், மேற்கொண்ட முயற்சியால், ஜாக்கி ஹனோட்கர் தடை தாண்டும் ஓட்டத்தில் பயிற்சி பெற்றார்.

தற்போது  அவர், சித்தி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களை 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கச் செய்யும் லட்சியத்துடன் பணியாற்றி வருகிறார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close