[X] Close

விசில் அடிப்பது பொறுக்கித்தனம் அல்ல: சாதனையாளர் நிசாருதீன் 


whistler-nizarudeen

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Mar, 2018 14:12 pm
  • அ+ அ-

"தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் இது பழமொழி" நான் பாடாவிட்டாலும் என் விசில் பாடும் இது என் மொழி" இப்படித்தான் இளம் சாதனையாளர் நிசாருதீன் தன்னை ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தியுள்ளார். 


நம் உச்சபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உற்சாகத்தைக் காட்டவும் நாம் விசிலிடிக்கிறோம். திரையில் நம் அபிமான ஹீரோவைப் பார்த்து விசிலடிப்பவர்களும் உண்டு. 


சாலையோரத்தில் நடக்கும்போது பொழுதுபோக்குக்காக விசில் அடிப்பவர்களும் உண்டு. 


ஆனால், நிசாருதீனுக்கு விசில் தான் உயிர் நாதம். அவரது அடையாளம் என்னவென்பதை அவரே நம்மிடம் விவரித்தார். 
நான் பிறந்தது புதுக்கோட்டை மாவட்டம். பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாமே அங்குதான். சிறுவயதிலிருந்தே எனக்கு இசை மீது நாட்டம் அதிகம். ஆனால், இசையில் நான் என்ன செய்யப்போகிறேன். எனது இசை ஆர்வத்தை எப்படி ஆக்கபூர்வமாக பயன்படுத்தப் போகிறேன் என எந்தவித புரிதலும் இல்லாமலேயேதான் இருந்தேன். 


கல்லூரியில் சேர்ந்தவுடன் என் கலை ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கவிதை, பாட்டு, பேச்சு என பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பெரும்பாலும் முதல் பரிசுடனேயே திரும்புவேன். 


திடீரென்று எனக்கு விசில் மீது ஆர்வம் அதிகரித்தது. விசில் அடித்தால் பொறுக்கி என்றுதான் நம்மைச் சமுதாயம் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், விசிலடிப்பது பொறுக்கிதனம் அல்ல அதுவும் ஒரு கலை என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதற்காகவே விசில் அடிப்பது மீதான நாட்டத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டேன். 
விசிலடிப்பது என்பதில் இருவகைகள் உண்டு. பொதுவாக ப்ளோ அவுட் என்ற உதட்டைக் குவித்து விசில் அடிக்கும் முறையையே பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். 


ஆனால், நானோ டீத் விசிலிங் முறையைப் பின்பற்றுகிறேன். அதாவது நான் இந்த முறையில் விசிலடிக்கும்போது என்னை உற்றுப் பார்த்தால் சிரிப்பதுபோல் மட்டுமே இருக்கும். ஆனால், எனது பற்களின் இடைவெளியில் இருந்து காற்று விசிலாக வெளியேறும். 


இது வித்தியாசமாக இருப்பதால் என் நண்பர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டு கிடைத்தது. ஒரு சில டிவி சேனல்கள் மூலமே எனது விசில் திறமை வெளியுலகிற்குத் தெரியவந்தது. 


டீத் விசிலிங் குறித்து நான் சில ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போதுதான் ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் விசிலிங்குக்காக தனியாக இன்ஸ்டிட்யூட்களே இருப்பதைத் தெரிந்து கொண்டேன். 


விசில் அடிப்பதில் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எனது வேலையை ராஜினாமா செய்தேன். இதற்காக என் குடும்பத்தினரின் அதிருப்தியையும் சம்பாதித்தேன். 


இந்த ஒரு வருடத்தில் 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகியிருக்கிறது. அதுதவிர மேடை நிகழ்ச்சிகளும் செய்கிறேன். விசில் அடிப்பது மட்டுமே இருந்தாலும் அது மாறுதலே இல்லாத சலிப்பூட்டும் நிகழ்வாகிவிடும் என்பதால் பீட் பாக்ஸ் அதாவது வாயிலேயே தாள வாத்தியங்களை இசைக்கும் கலைஞர் ஒருவரை என்னுடன் சேர்த்துக் கொண்டேன். ஃபேஸ்புக் வாயிலாகவே அவர் எனக்கு அறிமுகமானார். 


இதேபோல் ஃபேஸ்புக் மூலமே 6 இசைக்கலைஞர்களைத் தேர்வு செய்தேன். அவர்களுடன் நானும் சேர்ந்து இப்போது வாத்தியக் கருவி இல்லாத இசைக்குழுவை நடத்தி வருகிறோம். 


விசில் அடிப்பதில் இந்தியா புக் ஆ ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், பெஸ்ட் ஆஃப் இந்தியா ரெக்கார்ட்ஸ் விருதுகளைப் பெற்றுள்ளேன். 


எனது அடுத்த இலக்கு கின்னஸ் ரெக்கார்ட் என்று உற்சாகமும் தன்னம்பிக்கையும் சற்று குறையாமல் அயன் படத்தில் இடம்பெறும் விழி மூடி ரசித்தால் பாட்டை விசில் அடித்து முடித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close