[X] Close

கிராமம் மேம்பட அக்கறை காட்டும் இளைஞர்: சத்தமின்றி ஓர் சாதனை முயற்சி


mission-2020-youth-volunteer-volunteer-work-youth-revolution

அரியலூர் மாவட்டம் கல்லேரி கிராமத்தில் ‘மிஷன்- 2100’ அமைப்பால் தொடங்கப்பட்டுள்ள இலவச கணினி மையம்.

  • kamadenu
  • Posted: 22 Mar, 2018 16:26 pm
  • அ+ அ-

கிராமத்தை மேம்படுத்தினால் நகரம் தானாக மேம்படும் என்ற சமூக நோக்கத்துடன் சத்தமின்றி ஒரு சாதனை முயற்சியைத் தொடங்கி உள்ளார் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் எஸ்.எட்வின் மரியஜோசப் (40).

ஆம், கிராமத்திலிருந்துதான் மாற்றங்கள் உருவாகும் என்பதை உண்மையாக்க சத்தமின்றி, பல செயல்களை நடைமுறைப்படுத்தி வருகிறார் இவர். அதற்காக ‘மிஷன்- 2100’ என ஒரு பெயரையும் வைத்து பல நல்ல திட்டங்களை கிராம மக்களோடு இணைந்து செய்து வருகிறார்.

அரியலூர் மாவட்டத்தின் ஒரு சிறுகிராமம் தான் கல்லேரி. நிறைவான சாலை வசதி, தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதிகூட இல்லாத இந்த சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்தான் எஸ்.எட்வின் மரியஜோசப்.

தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் இவர், தான் பிறந்த கிராமத்தை மேம்படுத்த வேண் டும் என எண்ணி, வாரம் ஒரு முறை தனது ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

முன்பொரு காலத்தில் நெல், கடலை என செழிப்பான விவசாயம் நடந்து வந்த நிலைமை மாறி தற்போது கிராமம் முழுவதும் யூகலிப்டஸ் மரங்களாகக் காட்சியளிக்க, மனம் வருந்தினார் எட்வின். இதையடுத்து கிராமத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கவும் ‘மிஷன்- 2100’ என்ற ஒரு அமைப்பை கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கினார். தொடக்கத்தில் இவரது செயல்களுக்கு கல்லேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ராபர்ட், தர்மராஜ், பியூலாசீலா, மேரி, செல்வி என சிலர் ஆதரவு கொடுத்தனர். தற்போது, கிராமத்தைச் சேர்ந்த எல்லோரும் இவரது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

முதல் நடவடிக்கையாக சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசவும், கம்ப்யூட்டரை அவசியம் கற்றுக்கொள்ளவும், விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்தவும் தனது பணிகளை மேற்கொண்டார்.


கல்லேரி கிராமத்தில் நடைபெற்ற ‘மிஷன்- 2100’ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்களுடன், அரியலூர் மாவட்ட ஆட்சியராக முன்பு பணியாற்றிய க.லட்சுமிபிரியா

அப்போது, மதுரையை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி 10 கணினிகளை இலவசமாக வழங்கியது. இதனையடுத்து, அதே ஊரைச் சேர்ந்த, தற்போது திருச்சியில் வசித்து வரும் ஒருவர் கல்லேரி கிராமத்தில் உள்ள தன் வீட்டில் கம்யூட்டர்களை வைத்து குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வாடகை எதுவும் பெறாமல் அனுமதி கொடுத்துள்ளார். இலவச கணினி வகுப்பை, ஊரில் படித்துள்ள இளைஞர்களைக் கொண்டு நடத்திவருகிறார். 

தொடர்ந்து, கிராமத்தில் ஒவ்வொருவரையும் சந்தித்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த எட்வின், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ‘புரா’ திட்டங்களில் உள்ள அம்சங்களை கல்லேரி மக்களுக்கு புரியவைத்ததோடு விஐபி-க்கள் பலரையும் அவ்வபோது அழைத்து வந்து மரக்கன்றுகள் நடுவது, கருத்தரங்குகள், கலந்துரையாடல் நடத்துவது என பல செயல்களைச் செய்து வருகிறார். இவரது அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் முன்பு ஆட்சியர்களாக இருந்த எ.சரவணவேல்ராஜ், க.லட்சுமிபிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

இதில், கம்ப்யூட்டர் வகுப்பறையை நடிகர் ரமேஷ்கண்ணா மற்றும் மதுரை தனியார் கல்லூரி நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். அதுபோல, தனது கிராமத்துக்கு வேளாண் விஞ்ஞானி ரேவதி, தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் ஆகியோரை அழைத்து வந்து விவசாயத்தை எளிமையாக மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

மேலும், யூகலிப்டஸ் மரங்களை அகற்றி, நல்ல பயிர்களை உருவாக்க வேளாண் துறை நிபுணர்கள் பலருடன் கலந்து பேசி, கல்லேரி கிராமத்தில் விவசாய மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளார். இதன் பயனாக, தைல மரங்களை வெட்ட வைத்ததுடன் தோட்டப் பயிர் மற்றும் நெல், வாழை, கடலை என விவசாயத்தை பழைய நிலைக்கு திருப்பிவிட்டுள்ளார்.

‘மிஷன்- 2100’ அமைப்பை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் எட்வின்.


எஸ்.எட்வின் மரியஜோசப் 

இந்த அமைப்பு, தற்போது கல்லேரி கிராமத்தின் அருகேயுள்ள விழப்பள்ளம் கிராமத்திலும் செயல்பட தொடங்கியுள்ளது.
இதுகுறித்து எட்வின் கூறியபோது, “அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச கணினி பயிற்சியை வழங்கி வருகிறோம். அதுமட்டுமன்றி நடனம், கராத்தே, பாட்டு என பல வகுப்புகளையும் இலவசமாக நடத்தி வருகிறோம். கிராமத்துக்கு குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக பெற்றிட அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களை தொடர்ந்து நாடி வருகிறோம். தற்போது கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர் வார நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

- பெ.பாரதி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close