[X] Close

எழுதுவது ஒரு வேலையல்ல; அது பொறுப்புணர்வு: நம்பிக்கையூட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்


s-ramakrishnan-speech

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 12:36 pm
  • அ+ அ-

இந்த ஆண்டின் `சாகித்ய அகாடமி` விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.  அவரது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 6-ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார் எஸ்.ராமகிருஷ்ணன்:

"தொழில் துறையில் மட்டுமின்றி, கல்வி, விவசாயம், தமிழ் வளர்ப்பிலும் முன்னிலை வகிக்கிறது கொங்கு மண்டலம். எல்லா புத்தகங்களும் வாசகர்களின் கவனத்துக்காகத்தான் எழுதப்படுகின்றன. அவர்கள் அங்கீகரித்த எந்த ஒரு நூலையும், அமைப்புகளோ, அரசுகளோ அங்கீகரிக்காவிட்டால் கோபப்படுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல; வாசகர்கள்தான். எனவே, வாசகர்களுக்காக எழுதுவதே முக்கியம்.

ஈராயிரம் வருடமாக கற்று வந்த, பேசி வந்த தமிழ் மொழி, தற்போது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்தாலும், தமிழை இழக்கக் கூடாது.  தமிழ் இலக்கணங்களை, இலக்கியங்களை, இனத்தை இழக்கக் கூடாது. எந்த மொழியையும் படியுங்கள், பேசுங்கள்.

ஆனால், பாரம்பரியம்மிக்க, இணையில்லா நம் மொழியை நேசியுங்கள். இத்தகு மொழியில் எழுத்தாளனாக இருப்பதே எனக்குப் பெருமை.  நான் சரியாக எழுதினால்,  எனது முன்னோடி எழுத்தாளர்கள் மகிழ்ச்சியடைவர்; இன்னும் சிறப்பாக எழுது என முதுகில் தட்டிக் கொடுப்பர். நம் மொழியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல, மாணவர்கள் முன்வர வேண்டும். தமிழ் மொழியை, இலக்கியத்தை நேசிக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய மேன்மை உலகம் போற்றக்கூடியது. நவீன இலக்கியத்திலிருந்து,  சங்க இலக்கியத்தை நோக்கிச் செல்லுங்கள். ஆழத்துக்குச் சென்றால் வைரம் கிடைக்கும். வாழ்க்கை முழுவதும் இலக்கியத்தைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு நூல்கள் உள்ளன. இதில், சந்தோஷத்துக்கான பட்டியல் குறைவு. வருத்தம், கவலைகளின் பட்டியல் முடிவில்லாமல் இருக்கும். துயரத்தை மறப்பதே இல்லை. மகிழ்ச்சியை மறந்து விடுகிறார்கள்.

இலக்கியம் திரும்பத் திரும்ப நினைவுகளைத்தான் மீட்டெடுக்கிறது. நினைவுகளைத்தான் பாதுகாக்க விரும்புகிறது. வாழ்நாளெல்லாம் தேடிப் பெற்ற அனுபவம் என்னவாகும்? எல்லா நினைவுகளும் அவரது காலத்துடன் முடிந்துவிடும். நினைவைப் போற்ற புகைப்படம் வைப்பார்கள். நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தால், ஊர் கொண்டாடும், இன்னும் கொஞ்சம் நல்லது செய்திருந்தால், நாடே கொண்டாடும். எழுதுவது என்பது ஒரு வேலை அல்ல. அது ஒரு பொறுப்புணர்வு.

பலருக்கும் தமிழகத்தின் வரலாறு தெரியவில்லை. சென்னை ராஜதானிக்கு 1947-ல் முதல்வர் ஓமந்தூரார். எளிமையின் அடையாளம். திருவில்லிப்புத்தூர் கோபுரம், காந்தி மண்டபம் உருவாக்கியவர். படிக்க வேண்டியதும், படிக்க மறந்ததும் இந்தக்  கல்வியைத்தான்.

ரூ.35 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்த ரெட்கிளிப், இந்தியா-பாகிஸ்தானை பிரித்துவிட்டுச் சென்றார். அப்போது 25 லட்சம் பேர் இடமாற்றமடைந்தனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அது, இந்தியாவின் இருட்டான முகம்.  இதுபோன்ற துயர வரலாற்றை மறக்கக் கூடாது. பிரிவுத் துயரத்தைதான் தமிழன் அதிகம் பாடியிருக்கிறான். சந்திக்கும் மனிதர்களை, புத்தகங்களைப் பரிசு கொடுத்து சந்திக்க வேண்டும். அதுவே அவருக்கு செய்யும் பேருதவி. அவருடன், தமிழும், இலக்கியமும் வளரும்" என்று அவர் பேசிமுடித்தபோது, பார்வையாளர்களின் மனம் கனத்துப்போனது.

செம்மொழியை பாதுகாப்போம்

அடுத்துப் பேசிய, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையோ, தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டுமென வலியுறுத்தினார்.

"இயல், இசை, நாடகம் தாண்டி நான்குகால் பாய்ச்சலில் செல்ல வேண்டும் என்றால், முத்தமிழ், நற்றமிழாக மாற வேண்டும். எட்டுத் திக்கும் மட்டுமல்ல,  ஒன்பதாவது திசையாக விண்ணையும் அளக்கின்றனர் தமிழர்கள். தமிழ் அடுத்த கட்டத்துக்குச் செல்ல பழங்கதை பேசுவதை விட்டுவிட்டு, எல்லோரும் அங்கம் வகிக்கும்படியாக செயல்பட வேண்டும்.

எழுத்தாளர்கள் பாராட்டப்படும்போது,  அடுத்தடுத்த படைப்பாளிகள் உருவாகின்றனர். தாய்ப்பால் குடித்த குழந்தை சோடை போகாது.  அதேபோல, தமிழில் படித்தவர்களும் சோடை போகமாட்டார்கள். வீடுகளில் இருந்து மம்மி, டாடியை வெளியேற்றிவிட்டு, `அம்மா,  அப்பா` என அழைப்போம். லத்தீன், சம்ஸ்கிருதம், ஹீப்ரு போன்ற செம்மொழிகள் காணாமல் போய்விட்டன. அந்த நிலை தமிழுக்கு உருவாகாமல் காப்பது நம் கடமை.

எனவே, வழக்கு மொழியாக, படைப்பு மொழியாக, அறிவு சார் மொழியாக தமிழ் இருக்க வேண்டும்"  என்றார் நம்பிக்கையுடன்.
இந்த விழாவுக்கு தலைமை வகித்த கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளைத் தலைவர்  டாக்டர் நல்ல பழனிசாமி, "தேவை கருதி பல மொழிகளைக் கற்றாலும், தாய் மொழியில் தேர்ச்சி பெறுதல் அவசியம்" என்றார்.

இதில், முனைவர் ம.பெ.சீனிவாசனுக்கு `உ.வே.சா. தமிழறிஞர்' விருது, கு.சின்னப்பபாரதிக்கு `பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர்` விருது, முதுமுனைவர் கி.முத்துச்செழியனுக்கு `டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர்' விருதும் வழங்கப்பட்டது.

பேராசிரியர் சிற்பி பாலசுப்பிர மணியம் உள்ளிட்ட தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த விழாவில், டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்  எழுதிய `சாமானியனும் சர்க்கரை நோயும்` என்ற நூல் வெளியிடப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close