விடைபெறும் 2018: தீர்வு தந்த தீர்ப்புகள்

மக்களுக்கு எதிராகவும் தனி மனித உரிமைகளுக்கு எதிராகவும் பிரச்சினைகள் தலைதூக்கும் போதெல்லாம் நீதி மன்றங்களே காக்கும் கரங்களாகத் திகழ்கின்றன. நமது சட்ட அமைப்பு சமத்துவத்தையும் சம நீதியையும் ஆதாரமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது. அவ்வப்போது இயற்றப்படும் சட்டங்களும் வழங்கப் படுகிற தீர்ப்புகளும் நீதித் துறையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. 2018-ல் வழங்கப்பட்ட அத்தகைய தீர்ப்புகள் சில:
சிறுமிகளுக்குப் பாதுகாப்பு
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற குற்றவியல் அவசரச் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கெனப் புதிய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும், பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனை, காவல் நிலையங்களுக்குச் சிறப்புப் பரிசோதனை சாதனங்கள் வழங்கவும் இந்தச் சிறப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
உட்கார ஒரு போராட்டம்
துணிக்கடைகளில் பல மணி நேரம் நின்றுகொண்டே பெண்கள் வேலைசெய்வதை எதிர்த்துக் கேரளத்தில் ‘பெண்கூட்டு’ தொழிலாளர் அமைப்பினர் நடத்திய ‘உட்காரும் போராட்டம்’ வெற்றிபெற்றுள்ளது. துணிக்கடைகளில் பெண்கள் நின்றுகொண்டே பல மணி நேரம் வேலைசெய்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றால்கூட அவர்கள் உட்கார அனுமதியில்லை.
இதனை எதிர்த்து ‘பெண்கூட்டு’ என்ற தொழிற்சங்கத்தினர் கடைகளில் ‘உட்காரும் போராட்டம்’ எனும் கோரிக்கையுடன் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் பணியாளர்களை உட்கார அனுமதிக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கேரள அரசு உத்தரவிட்டது. அதேபோல், ‘1960 கேரள கடைகள், நிறுவனங்கள் சட்ட’த்தில் பெண் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கு ஏற்றச் சூழல் ஏற்படுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
காதல் அடிப்படை உரிமை
திருமணத்துக்கு உரிய வயதில் இருக்கும் ஆணும் பெண்ணும் காதலித்து மணந்துகொண்டால் அதைத் தடுப்பதற்கோ, தலையிடுவதற்கோ, பிரித்துவைப்பதற்கோ கட்டப்பஞ்சாயத்து அல்லது சாதிப் பஞ்சாயத்துக்கு உரிமையில்லை; அது சட்டவிரோதமானது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
ஆறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் ‘சக்தி வாகினி’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சாதிப் பஞ்சாயத்துக்கள், கட்டப் பஞ்சாயத்துக்கள் போன்றவை காதலித்து மணந்துகொள்ளும் ஆணையும் பெண்ணையும் பிரித்துவிடுகின்றன. சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களை ஆணவக் கொலை செய்யும்போக்கும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, “திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் சாதி வேறுபாடு பார்க்காமல் காதலித்து மணந்துகொள்வது அவர்களின் அடிப்படை உரிமை. இத்திருமணத்தில் மூன்றாவது நபர் யாராக இருந்தாலும் தலையிடுதல், மிரட்டுதல், வன்முறையில் ஈடுபடுதல், பிரித்து வைக்க முற்படுதல் போன்றவை கூடாது.
அவ்வாறு அச்சுறுத்தல் இருப்பவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. காதலித்துத் திருமணம் செய்த தம்பதியைக் கேள்வி கேட்க சமூகத்துக்கோ கட்டப்பஞ்சாயத்துக்கோ சாதிப் பஞ்சாயத்துக்கோ உரிமை இல்லை” எனத் தீர்ப்பளித்தனர்.
காதலின் வெற்றி
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹாதியா, சேலத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார்.
அப்போது ஷஃபின் ஜஹான் என்பவரைக் காதலித்து மணந்துகொண்டார். இதற்கு ஹாதியாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் ஹாதியாவின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஹாதியா - ஷஃபின் திருமணம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஷஃபின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரனையின் முடிவில், “ஹாதியா தன்னுடைய திருமணத்தை முறைப்படி பதிவுசெய்துள்ளார். அவர்களுடைய திருமணம் செல்லும்” என்று சொன்னதுடன் இத்திருமணம் செல்லாது எனத் தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தன்பாலின உறவு குற்றமல்ல
தன்பாலின உறவில் ஈடுபடுதல் சட்டப்படி குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுயவிருப்பத்துடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவதைத் தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 வரையறுத்திருந்தது.
இதை எதிர்த்துப் பல்வேறு அமைப்பினரும் தனிநபர்களும் சமூக ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டப்பிரிவு 377-ல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தன்பாலின உறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல எனத் தீர்ப்பளித்தனர்.
மேலும், “சட்டப்படி வயது வந்த இருவர் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடல்ரீதியான உறவு வைத்துக்கொள்வதைத் தடுக்க முடியாது. அப்படித் தடுத்தால், அவர்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம உரிமையையும், கவுரவமாக வாழும் உரிமையையும் மீறும் செயலாகும். எனவே, இத்தகைய உறவைத் தடைசெய்யும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது” எனவும் குறிப்பிடப்பட்டது.
மனைவி கணவனின் சொத்தல்ல
திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. “திருமணமான ஆணோ, பெண்ணோ வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக்கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட பெண்ணின் கணவன்தான் வழக்கு தொடுக்கும் நிலை உள்ளது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவைப் பாலியல் வல்லுறவாகக் கருத முடியாது” என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு சுட்டிக்காட்டியது.