[X] Close

மாநிலம் 2018


state-2018

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 14:38 pm
  • அ+ அ-

நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்திலேயே 2018-ம் ஆண்டைத் தமிழத்தின் பெருவாரியான மக்கள் கடந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மாநில அளவில் நிகழ்ந்த முக்கியச் சம்பங்களின் தொகுப்பு:

காவிரிக்கான முற்றுகைப் போராட்டம்

காவிரி நீர் பகிர்வு பிரச்சினைக்குத் தீர்வு காணக் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காததால் ஏப். 10 அன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் முன்பு திரைத் துறையினர் உட்பட அரசியல் கட்சியினர் பலர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதை அடுத்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஜூன் 1 அன்று அமைத்தது.

தமிழகம் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பகுதிநேர உறுப்பினராகப் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகத் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோரை ஜூன் 2 அன்று தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்தது.

முதல் முறை

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்  மார்ச் 29 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. 5 கோடி மதிப்பில் உருவான இந்த அருங்காட்சியகம் 6,691 சதுரடி பரப்பளவில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பூச்சிகளின் காட்சிகளைக் கொண்டுள்ளது.

உலுக்கிய துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தின் 100-வது நாளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக மே 22 அன்று சென்றனர். ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்களைத் தடுக்க போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாயினர். ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு மே 28 அன்று பிறப்பித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் 15 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 21 அன்று அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை ஆலையைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்பட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்தது. தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும் ஓர் இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் கிடைத்தன. இந்த மூன்று இடங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பகுதிகள் ஆகும். இதற்கான ஒப்பந்தம் அக்.1 அன்று கையெழுத்தானது.

பசுமை என்ற பெயரில்…

சென்னை- சேலம் இடையேயான போக்குவரத்தில் 2 மணி நேரத்தைக் குறைக்க ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பசுமைவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மாநில அரசு ஜூன் 26 அன்று தொடங்கியது. இத்திட்டமானது சுற்றுச்சூழலையும் மக்கள் வாழ்வாதாரத் தையும் பாதிப்பதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், திட்டப் பணிகளுக்கு நிலம் கொடுக்க விரும்பாத அல்லது ஆட்சேபணை கூறும் பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் சா. 20 அன்று உத்தரவிட்டது.

சூரியனின் அஸ்தமனம்

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றியுள்ள திமுகவின் முன்னாள் தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவால் ஆக. 7 அன்று காலமானார். அவருடைய உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்தது.

அடுத்த தலைவர்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 அதிமுக எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் ஏப் 27 அன்று உத்தரவிட்டது.

திமுக தலைவர் கருணாநிதி 2018 ஆகஸ்ட்  7 அன்று காலமானார். அதன் பிறகு அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. ஆகஸ்ட் 28 அன்று திமுகவின் புதிய தலைவராகச் செயல் தலைவர் பதவி வகித்துவந்த மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

‘கஜா’வின் கோரத் தாண்டவம்

வங்கக் கடலில் நவம்பர் 16 அன்று உருவான கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மரங்கள், வேளாண் மற்றும் தோட்டப் பயிர்கள்  சேதமடைந்தன, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 63 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி நவம்பர் 22 அன்று தெரிவித்தார்.

நிவாரண நிதியாக ரூ. 15,000 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது. இந்நிலையில் நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத்தொகையில் ரூ.1,277.62 கோடியைப் பயன்படுத்தலாம் என்று டிசம்பர் 21 அன்று மதுரை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்…

தமிழகத்தில் 1.8 கோடி ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி 2017-லேயே தொடங்கிவிட்டது. புதிய ஸ்மார்ட் கார்டுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்கும் முறை மார்ச் 1 அன்று அமலுக்குவந்தது.

கல்வி, சுகாதாரம், குடிநீர், மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட பல தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசு தீனதயாள் உபாத்யாய கிராம விருது வழங்குகிறது. தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த புதுமடம் கிராமம் இந்த விருதுக்குப் பிப். 8  அன்று தேர்வானது.

குடையும் நியூட்ரினோ

தேனி பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்துக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்ற  சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரையில் மார்ச் 27 அன்று நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.  இந்நிலையில் தேசிய வனவிலங்கு வாரிய அனுமதியைப் பெறும்வரை தேனியில் நியூட்ரினோ திட் டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நவ. 3 அன்று தடை விதித்து உத்தரவிட்டது.

கட்சிகளின் புறப்பாடு

# நடிகர் கமலஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை மதுரையில்  பிப். 21 அன்று தொடங்கினார்.

# ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்பதைத் தனது கட்சியின் பெயராக மார்ச் 15 அன்று அறிவித்தார்.

# தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த 154 கட்சிகளில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சிகள் எனத் தலைமை தேர்தல் ஆணையம்  ஏப். 26 அன்று அறிவித்தது.

புதிய நியமனம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குப் பி.மணிசங்கர், பெரியார் பல்கலைக்கழகத்துக்குப் பி.குழந்தைவேல் ஆகியோர் புதிய துணைவேந்தர்களாக ஜனவரி 7 அன்று நியமிக்கப்பட்டனர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூவை நியமிக்கத் தலைமைத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 22 அன்று உத்தரவிட்டது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் புதிய துணை வேந்தராகச் சூரிய நாராயண சாஸ்திரி மார்ச் 12 அன்று நியமிக்கப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக ஏப்ரல் 12 அன்று எம்.கே.சூரப்பா பொறுப்பேற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் செப்டம்பர்  29 அன்று நியமிக்கப்பட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close