[X] Close

துப்பாக்கிச் சூடு, கருணாநிதி மறைவு, 'கஜா' பேரிடர்: விடைகொடுக்கும் 2018


tamilnadu-events

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 14:34 pm
  • அ+ அ-

நந்தினி வெள்ளைச்சாமி

மகிழ்ச்சி, சோகம், போராட்டங்கள், கைதுகள், இழப்பு என பல்வேறு கலவைகளுடன் 2018 ஆம் ஆண்டு நம்மிடம் இருந்து விடை பெறுகிறது இன்னும் சில நாட்களில்...

தமிழகத்தைப் பொறுத்தவரை 'கஜா' பேரிடர், கருணாநிதி மறைவு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை பெருஞ்சோக சம்பவங்களாக பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் என்றாலும், தமிழக மக்கள் தளர்வின்றி நம்பிக்கையுடன் இந்தாண்டும் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக மக்களின் மனதில் இந்தாண்டு மட்டுமல்லாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய சம்பவங்களை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்ப்போம்.

குரங்கணியிலிருந்து பாடம் கற்றோமா?

தமிழகத்தில் காட்டுத்தீயின் கோரத்தை பெருஞ்சோக சம்பவமாக உணர்த்தியது குரங்கணி காட்டுத்தீ விபத்து. மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றபோது அங்கு காட்டுத்தீ ஏற்பட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதியில் மலையேற்றம் போன்றவற்றை மேற்கொள்வது மனிதர்களுக்கும் அதே சமயத்தில் சூழலுக்கும் எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது குறித்த பல படிப்பினைகளை இச்சம்பவம் நமக்கு விட்டுச் சென்றது எனலாம். 

அதேபோல், வனத்துறை இம்மாதிரியான விஷயங்களில் வகுத்துள்ள விதிமுறைகளை கவனமாக கடைபிடிக்கிறார்களா என்ற கேள்வியையும் குரங்கணி தீ விபத்து எழுப்பியது. பல மாதங்கள் கழித்து குரங்கணியில் மலையேற்றம் செல்வதற்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இச்சம்பவத்திலிருந்து நாம் ஏதேனும் கற்றுக்கொண்டோமா என்ற சந்தேகத்தை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

'மோடியே திரும்பிப்போ' போராட்டம்:

 ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வு, 2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது எனலாம். இந்த ஆண்டை மிக முக்கியமான போராட்டங்களின் ஆண்டு என்றே கூறலாம். அதில் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீருக்காக நடந்த உரிமைப் போராட்டம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க  வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில் ராணுவ தளவாடம் குறித்த நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக 'Go Back Modi', 'மோடியே திரும்பிப் போ' என்ற போராட்டத்தை திமுக முன்னெடுத்தது. மோடி தமிழகம் வந்த நாளன்று, எங்கெங்கு பார்த்தாலும் கருப்புக் கொடிகள், கருப்பு பலூன்கள், கருப்பு உடையணிந்து எதிர்ப்பு என கருப்பாகவே தமிழகம் காட்சியளித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் கருப்பு உடை அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும், பிரதமர் மோடி சாலை மார்க்கமாகச் சென்றபோது ஐஐடி மாணவர்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு முழக்கமிட்டனர். திமுக அறிவித்த போராட்டமாக இருந்தாலும், மக்கள் ஈடுபாட்டின் காரணமாக, பிரதமர் மோடிக்கு எதிரான இந்தப் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இதைத் தவிர்த்து காவிரிக்காக ஐபிஎல் போட்டியின்போது ஸ்டேடியத்தில் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் இளைஞரும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு காட்டியது என பல வித்தியாசமான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

'டோல்கேட்' வேல்முருகன்:

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்களில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது முக்கியமான போராட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டம் மத்திய அரசை நேரடியாக கேள்வி கேட்பது போன்று அமைந்தது. இதனால், வேல்முருகன் உள்ளிட்டோர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இது வன்முறைச் சம்பவம் அல்ல எனவும், தமிழக வாழ்வுரிமைக்காக மத்திய அரசை நோக்கி எதிர்கேள்வி கேட்கும் வடிவம் எனவும் அச்சமயத்தில் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.

கல்வித்துறையில் கரும்புள்ளி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அம்மாணவிகளிடம் அவர் பேசிய ஆடியோ வெளியானது, இந்தாண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம். பேராசிரியர் ஒருவரே மாணவிகளைத் தவறான பாதைக்குத் தூண்டுவது கல்வித்துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாகவும், இந்த விவகாரம் நிர்மலா தேவியுடன் முடித்துவிட்டு உயர்நிலை அதிகாரிகளையும், அரசியல் அதிகாரம் கொண்டவர்களையும் தப்பிக்க வைக்க சூழ்ச்சி நடப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது சிறையில் உள்ள நிர்மலாதேவி, தன்னைக் கொலை செய்ய சூழ்ச்சி நடப்பதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து இந்த விவகாரம் புதிய திருப்பத்தை அடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டிலும் இந்த வழக்கில் பல திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக நீதியை நோக்கி...

கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். அதனால் தான், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது எனக் கூறினார்.

சட்டம் இயற்றிய பிறகும் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியாமல் சிக்கல்கள் நீண்டுகொண்டே இருந்தன. சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய  அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். சமய நம்பிக்கை கொண்டவரான மாரிச்சாமி என்பவர்தான் தள்ளாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.இது சமூக நீதிக்கான மிக முக்கியமான நகர்வு எனினும், ஆகமம் உள்ள பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் இன்னும் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலியான மனித உயிர்களும், மனித உரிமைகளும்:

தங்கள் வாழ்விடத்தின் சுற்றுச்சூழலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, யாரும் நினைத்திருக்க மாட்டர்கள், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் நிலைத்திருக்கக்கூடிய சம்பவம் ஒன்று அப்போது நிகழும் என்று. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றால் பள்ளி மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதனை மிகப்பெரும் அரச பயங்கரவாதம் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பிறகு அரசாணை இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடினாலும், இதுதொடர்பான வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் மாதத்தில் வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறந்தள்ளியதாலேயே, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

"நான்தான்பா ரஜினிகாந்த்":

2017, டிசம்பர் 31 ஆம் தேதி தான் அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததிலிருந்து அவர் ஊடகங்களிடம் பேசும் கருத்துகளும், ட்வீட்டுகளும் விவாதப் பொருளாகின. காவிரி போராட்டத்தின்போது, காவலர் ஒருவர் தாக்கப்படுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த அவர், காவலர்கள் மீதான இத்தகைய நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தார். இதற்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை சுட்டதும் காவலர்கள் தான் என்று நெட்டிசன்கள் பதிலடி தந்தனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை ரஜினி நேரில் சென்று பார்த்தபோது, அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் "யார் நீங்கள்?" என கேள்வி கேட்டதும், "நான்தான்பா ரஜினிகாந்த்" என அவர் பதில் சொன்னதும் கேலியானது. இதுதவிர ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை "எந்த ஏழு பேர்?" என கேட்டதும் விமர்சிக்கப்பட்டது.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு:

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அம்மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல விவசாயிகள் நில அளவீடு செய்ய வரும் அதிகாரிகளிடம் அழும் காட்சி, போராடுவது, தற்கொலை முயற்சி செய்வது, அதிகாரிகள் காலில் விழுந்து அழுவது என, தங்களின் நில உரிமைக்காக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர். திட்டத்திற்கு எதிராகப் பேசுபவர்களும், பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்திப்பவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கான அவசியம் என்ன என பல கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். அதன்பின்பு, இதுதொடர்பான வழக்கில் இத்திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

கருணாநிதி மறைவு

 திமுக தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி வயது மூப்பின் காரணமாக, தனது 94-வது வயதில் மறைவெய்தினார். 'என் பிறப்பே போராட்டம் தான்' என்று சொன்ன கருணாநிதி, இறந்த பின்பு அவருக்கான இடமான மெரினா கடற்கரையையும் சட்டப் போராட்டம் மூலமாகவே பெற்றார் என்பதற்கு தமிழகமே சாட்சி. தன் தலைவனான அண்ணாவின் நினைவிடம் அருகிலேயே கருணாநிதி இடம் பிடித்தது அவரைப் போன்றே தனி வரலாறாகியுள்ளது. திராவிடம், சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் குறித்து தமிழகத்தில் இளைஞர்களிடையே கருத்துப் பரிமாறல்களும், மீள் வாசிப்பும் கருணாநிதியின் மறைவை ஒட்டி இன்றளவும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பெரியார் சிலை அவமதிப்பு

பெரியார் குறித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என ட்வீட் செய்தது, பின்னர் அதனை தன்னுடைய 'அட்மின்' தான் பதிவிட்டார் என்று கூறி தன் கருத்திலிருந்து பின் வாங்கியது இணையத்தில் பேசுபொருளானது. எனினும், பெரியார் சிலையை அவமதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து கருத்துகள் கூறிவந்த நிலையில், பெரியாரின் பிறந்த நாளன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் பாஜக நிர்வாகி ஒருவர் காலணியை வீசியது தமிழகம் முழுவது எதிர்ப்பு அலைகளை வீசியது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

அமைதி இழந்த தமிழிசை சவுந்தரராஜன்:

தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோஃபியா என்பவர் 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என முழக்கமிட்டார். இதனால் கோபமடைந்த தமிழிசை, அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "நானும் சொல்கிறேன் பாசிச பாஜக ஒழிக" என ட்வீட் செய்தார். இதையடுத்து ட்விட்டரில் 'பாசிச பாஜக ஒழிக' என்பது டிரெண்ட் ஆனது. இச்சம்பவத்தால் தமிழிசையின் நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர்.

விடுதலைக்காகக் காத்திருக்கும் அந்த 7 பேர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என பலகட்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு தான் தீர்ப்பளித்தது. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி இதனை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால் அவர்களது விடுதலை தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. ஆளுநர் அரசியல் சட்டத்திற்கே எதிராக செயல்படுவதாக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன.

டெல்டாவை சிதைத்த 'கஜா' புயல்:
  
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் ஆண்டின் இறுதியில் ஏதேனும் ஒரு 'இயற்கை' பேரிடரில் சிக்கிக்கொள்கிறது. 2015 இல் சென்னை வெள்ளம், 2016 இல் வர்தா புயல் பாதித்த நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ’கஜா’ புயல் டெல்டாவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டது. வீடுகள் சேதம், தென்னை உள்ளிட்ட விவசாயம் நாசம், போக்குவரத்து தடை, மின் தடை என, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. அம்மக்களின் பல்லாண்டு கால உழைப்பையும், வருங்கால வாழ்வாதாரத்தையும் 'கஜா' புயல் அடியோடு எடுத்துக்கொண்டு போய்விட்டது.

தமிழக அரசு சரிவர நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை, பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை என குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த பேரிடரில் இருந்தும் மக்கள் மீள்வதில் தன்னார்வலர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

தொடரும் கைதுகள்:

அரசின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும், கருத்து சொல்பவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது எனலாம். தமிழக அரசு அடக்குமுறையை ஏவி மக்களின் குரலை நசுக்குகிறது என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேசியதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்தித்ததற்காக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, ஆளுநர் பன்வாரிலால் குறித்த கட்டுரைக்காக 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் என தமிழக காவல்துறையால் கைதானவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் ஒருநாள் முதல் மாதக்கணக்கில் சிறையில் இருந்தனர்.

தலைமை ஏற்ற ஸ்டாலின்:

கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். மாநில அரசையும் மத்திய அரசையும் அகற்ற வேண்டும் என, தான் தலைவரான சமயத்திலிருந்து குரல் எழுப்பி வருகிறார். கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷாவை அழைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அமித் ஷா கலந்துகொள்ளாத நிலையில், நிதின் கட்கரி கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியிலும் பாஜகவை எதிர்த்து ஸ்டாலின் பேசினார். அதுமட்டுமல்லாமல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் கூட்டணியை அமைக்கத் திட்டமிடும் மாநிலத் தலைவர்களில் ஸ்டாலின் முதன்மை வகிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில், ராகுல் காந்தியை தலைமையேற்க அழைப்பு விடுத்ததன் மூலம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முதன்முதலாக முன்மொழிந்தார்.

சர்ச்சைகளுக்கு குறை வைக்காத தமிழக பாஜக தலைவர்கள்:

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், தமிழிசை சவுந்தரராஜன் என தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பல சர்ச்சைகளில் சிக்கினர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த எஸ்.வி.சேகரின் ட்வீட்டுக்கு அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. ஹெச்.ராஜா பெரியார் குறித்த ட்வீட்டுகளுக்காகவும், தமிழிசை சவுந்தரராஜன் சோஃபியா விவகாரத்திற்காகவும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த ட்வீட்டுக்காகவும் சர்ச்சையைச் சந்தித்தனர். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து கேள்வியெழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாஜக நிர்வாகிகள் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின்னர் தமிழிசை அவரது வீட்டுக்கு சென்று 'நட்பு' பாராட்டினார். இந்த ஆண்டு பாஜகவினர் எழுப்பிய சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் குறைவே இல்லை.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close