[X] Close

திரும்பிப் பார்க்கிறோம் 2018 : தமிழக அரசியல் நிகழ்வுகள்: ஒரு மீள் பார்வை


political-events-2018

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 14:20 pm
  • அ+ அ-

 

மு.அப்துல் முத்தலீஃப்

தமிழக அரசியல் களத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க இந்தப்  பதிவு. 

2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு என 2017 ஆம் ஆண்டு அரசியல் களம் பல மாற்றங்களைக் கண்டது. அந்த மாற்றங்கள் 2018-ல் தொடர்ந்தது. கருணாநிதியின் மறைவும் முக்கியக் கட்சியான திமுகவுக்கு ஸ்டாலினின் தலைமை ஏற்பு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

திமுக 

கடந்த 2017-ம் ஆண்டுமுதல் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஓய்வில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் மாதம் மறைந்தார். செயல் தலைவராக பொறுப்பேற்றிருந்த மு. க.ஸ்டாலின் அவரது மறைவுக்குப் பிறகு   திமுக தலைவர் ஆனார். மு.க.அழகிரியால் திமுகவிற்கு பெரிய பாதிப்பு வரும் என்ற நிலையில் எந்தவித எதிர்ப்புமின்றி 100 சதவீத ஆதரவுடன் ஸ்டாலின் தலைவரானார்.

இதன்மூலம் திமுக தனது வலுவான கட்சி ஸ்தாபன அமைப்பில் உறுதியோடு நின்றது.  திமுகவிற்கு கடந்த ஆண்டு சோதனையான காலம் என்றாலும் இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் திமுக தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. திமுக தலைவரின் சிலை திறப்பு விழா தேசியத் தலைவர்களின் ஒருங்கிணைப்பு விழாவாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அளவில் பாஜக ஆட்சியை அகற்ற அறைகூவல் விடுத்தது திமுக தேசிய அரசியலில் பெரிய பங்கை வகிக்கப் போவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பலமான எதிர்க்கட்சியாக குட்கா வழக்கு, முதல்வருக்கு எதிரான வழக்கு என பல்வேறு பிரச்சினைகளில் நீதிமன்றத்தை நாடியது வரவேற்பைப் பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்தது மேற்கு மாவட்டத்தில் திமுக பலம் பெறுவதால் வரவேற்பு இருந்தாலும், ஊழலுக்கு எதிராகப் பேசிவிட்டு செந்தில் பாலாஜியை திமுகவிற்குள் கொண்டுவந்தது விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோன்று ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது தேசிய அளவில் இடதுசாரிகள், திரிணாமுல், சமாஜ்வாதி, பிஎஸ்பி போன்ற கட்சிகள் எதிர்த்துள்ளது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பாஜக எதிர்ப்பை வைத்து ஒன்றிணையும் மாநிலக் கட்சிகளின் ஒற்றுமை இதனால் சிதறும் என தேசிய அளவில் கருத்து எழுந்துள்ளது.

கடந்த ஆண்டில் அரசியல் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த ஆண்டு அரசியல் நிகழ்வுகளில் திமுக தலைவர் கருணாநிதி முற்றிலுமாக ஓய்வு பெற்ற நிலையில் அவரது மறைவு உள்ளிட்ட அனைத்தையும் கடந்து  அதிமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி  வரும் நாடாளுமன்றத் தேர்தல், 20 தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்தையும் சந்திக்க ஆயத்தமான நிலையில் தன்னம்பிக்கையுடன் உள்ளது திமுக.

அதிமுக

இதோ கவிழும், அதோ கவிழும் என  ஸ்டாலின் முதல் பல அரசியல் தலைவர்களும் சொல்லி வந்த நிலையில் அதிமுக ஆட்சி நிலைத்து நின்று மூன்றாவது ஆண்டை நோக்கி வெற்றிகரமாக நகர்கிறது. ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த பாஜக பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரையும் இணைத்து அவர்களுக்கு ஆதரவளிக்க அந்த ஆதரவுடன் ஆட்சியை நகர்த்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் அதிமுகவிற்கு இடையூறு இல்லாமல் ஆட்சியை நகர்த்திச் செல்ல பெரிய வாய்ப்பாக அமைந்தது.

தகுதி நீக்க வழக்கு ஓராண்டாக நடக்க அதன்மூலம் அறுதிப் பெரும்பான்மை என்ற பிரச்சினை இல்லாமல் ஆட்சியும் நகர்ந்தது. இதற்கு அதிமுக கொடுத்த விலை மாநில உரிமைகள் எனலாம். ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை தமிழகத்திற்கு எதிரான விஷயங்கள் என்று எதிர்த்தாரோ அத்தனையும் தமிழகத்திற்கு வர அனுமதித்தது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதில் உண்மை இல்லாமல் இல்லை.

நீட் விவகாரத்தில் தமிழக அரசு ஜெயலலிதா அளவுக்கு எதிர்க்காததன் காரணமாக அது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதேபோன்று உணவு பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழக அரசு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்மறை நிலைப்பாட்டை எடுத்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதன்மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஆட்சியை நகர்த்தி வருகிறது  என்கிற விமர்சனமும் உண்டு. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய பல உரிமைகளை கேட்டுப் பெற முடியாத நிலையில் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக அரசு கடந்த ஆண்டில் பல சிக்கல்களைச் சந்தித்தாலும் இவற்றைக் கடந்து வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது என்றே சொல்லலாம்.

உட்கட்சிப்பூசல், குட்கா உள்ளிட்ட ஊழல் வழக்குகள், அடுக்கடுக்கான ரெய்டுகள், எட்டுவழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் எதிர்ப்பு, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு என கடந்த ஆண்டு பலவற்றையும் சமாளித்து ஒருவாறாக மூன்றாம் ஆண்டை நோக்கி அதிமுக அரசு பயணிக்கிறது.

2018- ம் ஆண்டு ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தைக் கொடுத்துள்ள நிலையில் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தனது ஆட்சியின் மதிப்பீட்டை அளக்கும் அளவுகோலாக 20 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் அதிமுக அரசு உள்ளது.

 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நடக்கும் என்கிற நிலையில் கட்டாயம் 8 தொகுதிகளில் வென்றாக வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. அதேபோன்று நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்பதா அல்லது பாஜகவுடன் கூட்டணியா? என்பது குறித்த குழப்பமும் ஆளும் கட்சிக்குள் உள்ளது
 
திமுக கூட்டணிக்கட்சிகள் 

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனையாக இருந்த தேர்தல் களம் அதிமுக ஆட்சிக்குப் பின்னர் மாறிப்போனது. மக்கள் நலக் கூட்டணி கரைந்து போனது. திமுகவை ஆதரிக்க மாட்டோம் என்று முடிவெடுத்த இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் திமுக உடன் இணைந்து ஓர் அணியாக நிற்கும் நிலை ஏற்பட்டது. தேமுதிக அதன் தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் காரணமாக அவர் செயல்பாடு குறைந்துள்ளது. அது தேமுதிகவிலும் எதிரொலிக்கிறது.

பாமக அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் தற்போதும் தனியாக இயங்கி வருகிறது. அதிமுக எதிர்ப்பு என்கிற அஸ்திரம் மூலம் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது எதிரணியில் நின்ற கட்சிகளை அரவணைத்து ஓரணியாக திரட்டி வலுவாக நிற்கிறது. அதிலும் மக்கள் நலக்கூட்டணியின் முக்கிய அங்கமான மதிமுக, திமுகவுக்கு தனது வலுவான ஆதரவைக் கொடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவது தனது லட்சியம் என அறிவித்தது முக்கிய நிகழ்வாகும்.
  
பாஜக 

வழக்கம்போல் பாஜக தனித்து நிற்கிறது, தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழிசை பேசிவருவது மீம்ஸ் கிரியேட்டர்களால் கேலியாக சித்தரிப்பதைத் தாண்டி பாஜகவுக்கு கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் இல்லை எனலாம். தமிழக நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதும், அதை பாஜக தலைவர்கள் ஆதரித்துப் பேசுவதும், மக்களைப் பாதிக்கும் மாநிலப் பிரச்சினைகளில் தமிழக அரசை விமர்சிக்காமல் அரசியல் நடத்துவதும் பாஜகவிற்கு பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் மாநில விரோதப் போக்குகள் மாநிலத்தில் உள்ள தேசியக் கட்சியின் தலைமையைப் பாதிக்கும். இதனால் தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. அவர்களுடைய வளர்ச்சி மத்திய அரசின் செயல்பாட்டை ஒட்டியே அமையும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு, மேகேதாட்டு அணை விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் விவகாரம், எட்டு வழிச்சாலை, ஒக்கி புயல் பாதிப்பு, கஜா புயல் பாதிப்பு என பல பாதிப்புகளில் மத்திய அரசின் மாநில நலனைக் கண்டுகொள்ளாத போக்கு காரணமாகவும், எரிபொருள் விலை ஏற்றம் ஜிஎஸ்டி பிரச்சினை போன்ற விவகாரங்கள் காரணமாகவும் இயல்பாகவே மத்திய அரசின் மீது ஏற்பட்டுள்ள மக்களின் கசப்புணர்ச்சி மாநில பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

இதுபோன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் தேசிய நலன் என்கிற பெயரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பாஜக தலைவர்கள்  பேசுவதும், பேட்டி அளிப்பதும்  பொதுமக்களிடையே மாநில அளவில் பாஜக மீது  ஏற்பட்டுள்ள வெறுப்பலை காரணமாக கடந்த ஓராண்டில் தமிழகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ் திமுக கூட்டணியில் குழுவாக இணைந்து இருப்பதன் மூலம் இந்த ஆண்டு அதற்கு ஒரு முன்னேற்றமான ஆண்டு என்றே சொல்லலாம். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பலத்தை விருத்தி செய்து கொள்ளும் ஒரு அரசியல் நிகழ்வாகவே கடந்தது எனலாம்.
 
அமமுக (டிடிவி தினகரன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றதும் பின்னர் அவர் நீக்கப்பட்டு சசிகலா சிறை சென்றதும், எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், ஓபிஎஸ் வெளியேறியதும், டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் பின்னர் டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டு ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்தது அதிமுகவிலிருந்து சசிகலாவையும் வெளியேற்றியதும் கடந்த ஆண்டு நிகழ்வு.

அத்தோடு ஓய்ந்துவிடுவார் என்று நினைத்த டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றது, திமுக டெபாசிட் இழந்தது அனைவரையும் டிடிவி தினகரனை நோக்கி திரும்ப வைத்தது. தெளிவான அரசியல் பேச்சு, ஊடகங்களைச் சமாளித்து பதில் சொல்வது, அனைத்து விவகாரங்களிலும் பதில் சொல்வது என டிடிவி தினகரன் அதிமுகவினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார்.

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் பதவி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது தினகரனுக்குப் பின்னடைவாகத் தோன்றினாலும் 18 தொகுதிகளில் தேர்தலை அறிவிக்காமல் தள்ளிப்போடுவது, அவரைப்பற்றிய ஆளும் தரப்பின் பயத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. டிடிவி வெல்லாவிட்டாலும், ஆளும்கட்சிக்கு அவரால் சேதம் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். மற்றொருபுறம் தினகரன் பணம் செலவழிப்பது இல்லை. ஆதரவாளர்களைப்  பணம் செலவழிக்க வைக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அவரது தீவிர ஆதரவாளரான செந்தில் பாலாஜி கட்சி தாவி திமுகவிற்கு சென்றது டிடிவி தினகரன் அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு அரசியலின் கடைக்கோடி மூலைக்குத் தள்ளப்பட்ட தினகரன் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது போல் இந்த விவகாரத்திலும் விஸ்வரூபம் எடுப்பார் அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஜினி (ரஜினி மக்கள் மன்றம்)

நீண்டகாலமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி  ரஜினியின் அரசியல் அறிவிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தனது கட்சி எப்படி இருக்கும், கொள்கை என்ன என்பது பற்றியெல்லாம் கடந்த ஒரு வருடங்களில் ரஜினி எங்கும் தெளிவாகப் பேசவில்லை. ஆன்மிக அரசியல் என அறிவித்தது அவரது ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டாலும், அது விமர்சிக்கப்பட்டும் வந்துள்ளது.

தனது கட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து ரஜினி தெரிவிக்கும்போது, தனது கட்சி நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும். அதுவரை அரசியல் கருத்துக்களை விமர்சனங்களை வைக்க மாட்டோம் என முதலில் ரஜினி பேட்டி அளித்தார். பின்னர் தனியார் பல்கலைக்கழக எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தமிழகத்தில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நான் ஆட்சியைப் பிடித்து எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுப்பேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் அவ்வப்போது அரசியல் களத்தில் ரஜினி அரசியல் கருத்துகளைக் கூறுவதும் பின்னர் காணாமல் போவதும் தொடர்கதையானது.  ஐபிஎல் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ரஜினியின் கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முதலில் அரசை விமர்சித்த ரஜினி பின்னர் ஆரவாரத்துடன் தூத்துக்குடிக்கு கிளம்பிச் சென்றார்.

போகும் முன்னர் மக்களுடைய பாதிப்புகளைப் பற்றி பேசிவிட்டு சென்றவர் திரும்பி வரும்பொழுது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் வகையில் போராட்டம்  குறித்த ஆட்சேபகரமான கருத்து தெரிவித்தது விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னர்  அரசியல் நிகழ்வுகளில் வாய் திறக்காமல் இருந்த ரஜினி 7 பேர் விடுதலையில்  தெரிவித்த கருத்தும் விமர்சனத்துக்குள்ளானது.

அதேபோன்று பாஜக 5 மாநிலங்களில் தோல்வி அடைந்தது குறித்து முதலில் பலமான கட்சி என தெரிவித்த ரஜினி பின்னர் பாஜக செல்வாக்கு இழந்து வருகிறது என தெரிவித்த அவரது கருத்து அவரது நிலைப்பாடு குறித்த தொடர் சறுக்கலை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவார் என ரஜினியைப் பலரும் தூக்கி பிடித்தாலும், அவரது மக்கள் மன்றம் கிராமம் தோறும் வார்டு தோறும் அமைப்பை விருத்தி செய்து வருகிறது என்று கூறப்பட்டாலும், அனைத்தும் வெறும் பேச்சளவிலேயே உள்ளது. அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பட நிறுவன தலைமை அதிகாரியை தனது மக்கள் மன்ற பொதுச்செயலாளர் ஆக்கியதன் மூலம் ரஜினியின் அரசியல் நகர்வு முதிர்ச்சியின்மையாகப் பார்க்கப்பட்டது.

அதன் வெளிப்பாடு சில நாட்களில் அவர் நீக்கப்பட்டு இன்னொருவர் நியமிக்கப்பட்டதும், பின்னர் அவரும் ஒதுக்கப்பட்டு மற்றொருவர் நியமிக்கப்பட்டதும் என ரஜினி மக்கள் மன்றம் தடுமாறி வருகிறது  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் ரஜினியும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் சினிமாவில் ஆர்வம் காட்டுவதும், அவ்வப்போது தனது படம் வரும் நேரத்தில் மட்டும் அரசியல் பேசுவது மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறது.

கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர் நேரங்களில் என்னதான் ரஜினி மக்கள் மன்றம் உதவி செய்தாலும், ரஜினி நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறாதது விமர்சிக்கப்படுகிறது. தமிழகத்தில் தனது அரசியல் நிகழ்வு என்ன? தனது கொள்கை என்ன என்பது குறித்து தெளிவான முடிவை இதுவரை ரஜினி அறிவிக்கவில்லை. கட்சியும் ஆரம்பிக்கப்படவில்லை, ஆனால் வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்கிற ஆர்வம் மட்டும் அவ்வப்போது மற்றவர்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினி அறிவித்தபடி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் என்கிற நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த ஆண்டைக் கடக்க உள்ளார்.
  
கமல் (மக்கள் நீதி மய்யம்)

 அரசியல் அறிவிப்பு வெளியிட்ட நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிக்கொண்டிருந்த நடிகர் கமலஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மக்கள் நீதி மய்யம் எனும் அமைப்பை ஆரம்பித்ததாக அறிவிப்பு வெளியிட்டு கட்சிக்கொடி சின்னத்தை அறிமுகப்படுத்தினார். அவரது கட்சியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

 ஆரம்பத்தில் டாப் கியரில் வேகமெடுத்த மக்கள் நீதி மய்யம் பின்னர் கட்சி நிர்வாகிகள் சிலரை நீக்குவது, சிலர் விலகுவது என சற்று மந்த நிலையை அடைந்தது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வீரியமாக கருத்துகளை எடுத்து வைக்காததும் கமல்ஹாசனுக்கு  ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

ஆனாலும் மக்கள் பிரச்சினைகளில் மக்கள் மத்தியில் தனது பங்களிப்பு எப்போதும் இருப்பது போல் கமல் பார்த்துக் கொள்கிறார். திமுக போன்ற பெரிய கட்சிகள் மக்கள் நீதி மய்யத்தை அருகில் சேர்க்காமல் இருப்பது மக்கள் நீதி மய்யத்திற்கு சற்று பின்னடைவான ஒன்று என அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
  
தமாகா

மக்கள் நீதி மய்யம் போன்றே தனித்து இயங்குகிறது தமாகா. நல்ல கொள்கை, தமிழக மக்கள் மீது அக்கறை, போராட்டத்தை முன்னெடுப்பது என ஜி.கே.வாசன் ஒரு தலைவராக சிறப்பாக செயல்பட்டாலும் விழலுக்கு இறைத்த நீராய் அவரது உழைப்பு உள்ளது. காங்கிரஸ் திமுகவுடன் இருப்பதால் திமுக கூட்டணியில் தமாகா இணைவதில் சிக்கல் வருமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
  
தேமுதிக

மக்கள் நலக்கூட்டணியின் சக்திவாய்ந்த தேமுதிக மற்ற கட்சிகள் விலகியதால் தனித்து விடப்பட்டது. ஆக்டிவான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும், கட்சியின் முன்னணியினர் விலகிச் சென்றதாலும் கட்சி செயல்படுவதில் பழைய வேகமில்லை. கடந்த ஆண்டு வழக்கமான முன்னேற்றமில்லாத ஆண்டாகத்தான் தேமுதிகவுக்கு உள்ளது.

பாமக

பாமக கடந்த தேர்தல்முதல் தனித்துப்போட்டி என்று அறிவித்து தனியாக களம் காண்கிறது. தமிழகத்தில் அரசியலைத்தாண்டி சமூக அவலங்கள், சுற்றுச்சூழல் விஷயங்களில் அக்கறை காட்டும் இயக்கமாக உள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், அரசின் திட்டங்களை விமர்சிப்பதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முந்தி நிற்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டு பாமகவுக்கு முன்னேற்றமும் இல்லை, பின்னடைவும் இல்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close