ஜிஎஸ்டி, எரிபொருள் விலை ஏற்றத்தால் நவராத்திரி கொலு பொம்மைகள் விலை உயர்வு

கோப்புப் படம்
ஜிஎஸ்டி வரி, எரிபொருள் விலை உயர்வால் நவராத்திரி கொலு பொம்மைகள் விலை உயர்ந்துள்ளதாக தயாரிப்பாளர் கள் தெரிவித்தனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடுகளில் கொலு பொம்மை வைத்து 9 நாட்கள் வழிபடுவார்கள். நவராத்திரியன்று, வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். நிகழாண்டில் நவராத்திரி விழா இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது.
நவராத்திரி விழாவிற்காக, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட திருநீலகண்டர் தெருவில் களிமண்ணால், கொலு பொம்மைகள் தயாரிப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள், பெங்களூரு, மைசூரு, குப்பம், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நிகழாண்டில், ஜிஎஸ்டி வரி, எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக கொலு பொம்மை விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரி வித்தனர். இதுதொடர்பாக விற்பனையாளர்கள் சிலர் கூறும்போது, கடந்த 3 மாதங்களாக கொலு பொம்மைகள் தயாரித்து, விற்பனை ஆந்திரா, கர்நாடக மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளோம்.
இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஒரு சிலர் மட்டும் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு, ராகவேந்திரர், அம்மன், ராமானுஜர், சரஸ்வதி, நரசிம்மர், ராதை அலங்காரம், விஸ்வரூப தரிசனம், கிருஷ்ணலீலை, இந்திரஜித், ஜோதிலிங்கம் உள்ளிட்ட பல வடிவங்களில் கொலு பொம்மைகளை விற்பனைக்காக உள்ளது. ஒரு செட்டுக்கு 5 முதல் 40 பொம்மைகள் உள்ளன. கொலு பொம்மைகள் ரூ.300 முதல் ரூ-.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜிஎஸ்டியால் மூலப்பொருட்கள் விலை, எரிபொருள் விலை உயர்வால், தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. இதனால் கொலு பொம்மைகள் விலையும் சற்று உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.