[X] Close

மீனாட்சி கோயிலில் நவராத்திரி விழா அக்.10-ல் ஆரம்பம்: கொலு பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு


meenakshi-amman-temple-golu-celebrations

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 15:31 pm
  • அ+ அ-

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பழங்காலத்தில் பாணாசுரன் என்னும் மஹிசாசூரன் என்பவன் தனக்கு பெண் வயிற்றில் பிறந்த குழந்தைகளால் அழிவு இல்லை எனும் வகையில் சிவ பெருமானிடம் வரம் பெற்றான். இதனால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி 9 நாட்கள் தவமிருந்து பாணாசுரனை வதம் செய்தார்.

மஹிசம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் எனும் பொருள்படும். இவ்வுலகில் அறியாமை எனும் இருள் நீங்கி அறிவு என்னும் ஒளி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரி.

இந்த பாரம்பரியப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி கலை விழா வரும் 10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறும். கலை விழாவில் மீனாட்சி அம்மன் தினமும் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து அருள் பாலிப்பார். திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா தொடங்க 3 நாட்களே உள்ளதால், கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது. பூம்புகார், காதிபவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமானோர் பலவிதமான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close