[X] Close

'அழியும் அபாயத்தில் கலை' - பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் பேட்டி!


bommalattam-puppet-show-kalaivanan

  • kamadenu
  • Posted: 21 Mar, 2018 18:36 pm
  • அ+ அ-

ஊர் திருவிழாக்களில் மக்களை மகிழ்வித்த அந்தக் கலை இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதது. இந்த அரியக் கலையை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். மு.கலைவாணன். 

சின்னச் சின்ன பொம்மைகளை தங்களுடைய கை விரல்களால் இயக்கிக்கொண்டே, அந்த பொம்மைகளுக்கு ஏற்ப தங்கள் ஜாலக் குரல் மொழியால் உயிரூட்டம் தருகிறார் கலைவாணன்.

’கலை அறப்பேரவை’ என்கிற அமைப்பின் மூலம் பொம்மலாட்டம் என்கிற இந்த பண்டைய கால அரிய கலை வடிவத்தை நடத்தி வரும் கலைவாணன். ’ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் / ஆதவன் மறைவதில்லை/ ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்/ அலைகடல் ஓய்வதில்லை... ஆடி வா... ஆடி வா... ஆடி வா.... ஆடப் பிறந்தவளே ஆடி வா’ என்று ‘அரசக்கட்டளை’ படத்தில் பாடல் எழுதியவர் முத்துக்கூத்தன். அவருடைய மகந்தான் இந்த பொம்மலாட்ட கலைஞர் மு.கலைவாணன்.

இந்த அரிய மரபுக் கலையை எந்தவிதமான வணிக நோக்கமும் இன்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்து வரும் கலைவாணனே, தனது நிகழ்ச்சியில் பலவிதமான கதாபாத்திரங்களுக்கும் அவர் ஒருவரே குரல் மாற்றி மாற்றி பேசி அசத்திவருகிறார்.

உலக பொம்மலாட்ட நாளான இன்று (21.3.2018) மு.கலைவாணனிடம் உரையாடினேன்.

’’இக்கலையில் உங்களுடைய அணுகுமுறை என்ன?’’ 

’’Folk media’ என்று அழைக்கப்படும் இந்த மக்கள் ஊடகக் கலையை எனக்கு முன்னால் இந்த அரியக் கலையை கையில் எடுத்துக்கொண்டிருந்த கலைஞர்கள் பலரும், பரவலாக பக்தி அல்லது புராண கதைகளின் அடிப்படையிலேயே இந்தக் கலையை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள். 

நான் இக்கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இக்கலையை மாணவ சமுதாயத்திடம் கொண்டுச் சென்று அவர்களுக்குப் புரியும் வகையில் சில நல்ல செய்திகளை சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். அப்படித்தான் எனது பொம்மலாட்ட கலையை நான் வடிவமைத்திருக்கிறேன்!’’

’’மற்றவர்களில் இருந்து மாறுபட்டு நீங்கள் இந்தக் கலையை எந்த வகையில் முன்னெடுத்து செல்கிறீர்கள்?’’

’’பாவைக் கூத்து என்றும் பொம்மலாட்டம் என்று அழைக்கப்படும் இக்கலை தமிழகத்தின் தொன்மையான கலைகளில் ஒன்றாகும். இதுவரையில் 6 ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். இந்தக் கலையை யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் நடத்தி வருகிறேன். என்னுடைய நிகழ்ச்சியின் மூலம் பழைய விஷயங்களைத் தூசித் தட்டி, அதற்கு நாசூக்காக நவீன பெயர் சூட்டி... வியாபாரம் செய்ய எனக்கு மனமில்லை. 

என்னுடைய நிகழ்ச்சியை நான் அறிவுபூர்வமாக நடத்த வேண்டுமென விரும்பினேன். அதனால்தான் எனது பொம்மலாட்ட நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கல்வியின் அவசியம், உடல் நலத்தை பாதுகாப்பது, குடும்ப நலத்தை நன்றாக பராமரிப்பது, மனித உரிமைகள், வேளாண்மையின் முக்கியத்துவமும் அதன் தேவையும், பகுத்தறிவு, சுயமரியாதை, குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், பெண் கல்வி, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளி, தமிழ் பண்பாடு, இலக்கியம், வரலாறு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தி வருகிறேன். இதற்கு நல்ல வரவேறுபு இருக்கிறது. நன்றாக ரசிக்கிறார்கள்!’’’’உங்கள் பொம்மலாட்ட கலையின் தன்மை என்ன? உங்கள் நிகழ்ச்சி வித்தியாசமாக உள்ளதே..?’’

‘‘ஆமாம்! நீங்கள் சொல்வது உண்மைதான். மற்ற பொம்மலாட்ட கலைஞர்கள் பொம்மையை விரல்களில் நூல் மூலம் கட்டிக்கொண்டு பொம்மைகளை அசைத்து நிகழ்ச்சி நடத்துவார்கள். இதற்கு மரப்பாவை கூத்து என்று பெயர். அடுத்து மிருகங்களின் தோலில் வெட்டுருவங்களை உருவாக்கி, அதனை வெள்ளைத் துணியின் பின்னால் வெளிச்சம் போட்டு குச்சிகளினால் அசைத்து காட்டப்படும் தோல் பாவை கூத்து, கம்பி அல்லது குச்சியால் தலை, கால்களை அசைத்து காட்டப்படும் கம்பி அல்லது குச்சி பொம்மலாட்டம் என சில வகைகள் உள்ளன. நான் பயன்படுத்துவது கையுறை பொம்மைகள்.

எனவே இதற்கு கையுறை பொம்மலாட்டம் என்று பெயர். இவ்வளவுசிறப்பு வாய்ந்த இந்த பொம்மலாட்டக் கலை அழியும் அபாயத்தில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய அங்கமாக வகித்த அற்புதமான த பொம்மலாட்ட கலையானது மின்னணு ஊடக (Electronic media) வளர்ச்சியின் காரணகாம மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்திருப்பது வேதனையளிக்கிறது!”

- என்று சொல்லும் கலைவாணன 40  ஆண்டுகளாக குழந்தைகளுக்காக வீதி வீதியாக, பள்ளிதோறும் சென்று பொம்மலாட்டம் நடத்தி வருகிறார். இவருடைய  ’அப்புசாமியும் அகல்விளக்கும்' என்ற  பொம்மலாட்டம்  குளோபல் வார்மிங் பிரச்சினையைப் பேசும் அற்புதமான நிகழ்ச்சியாகும். பல விருதுகளையும் இந்நிகழ்ச்சி பெற்றிருக்கிறது.

- சந்திப்பு: மானா பாஸ்கர்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close