பைக்கில் பறக்கிறார்களா பசங்க?

சாகசம் என்றால் மலையேறுவது போன்ற செயல்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். டீன் ஏஜ் வயதில், பைக்கை வேகவேகமாக ஓட்டுவது, பஸ் படிக்கட்டில் தொங்குவது, கார் ரேஸ் போவது, கடலின் நடுப்பகுதிக்கு செல்வது, டைவ் அடிப்பது, இரண்டு கையையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுவது என சாகசங்கள் பல வகைகள் இருக்கின்றன.
இவை சில நேரங்களில் வேடிக்கை; ஆனால் பலநேரங்களில், ஆபத்து. பிள்ளைகளைப் பொறுத்தவரை அது சாகசம்.
இயற்கையாகவே மனிதர்களுக்கு சாகசம் செய்வது பிடிக்கும். அதுவும் துடிப்பான வளர் இளம் பருவத்தில் சாகச மனப்பான்மையை ஒரு வளர்ச்சியாகவே பார்க்கிறார்கள்.
விடலைப் பருவத்தினருக்கு சாகசம் மூலமாக கிடைக்கும் குதூகலமும், வெற்றியும் மட்டுமே முதன்மையாகத் தெரியும். அதில் உள்ள ஆபத்தை ஆராய்வதே இல்லை. அதனால் சில நேரங்களில் விளையாட்டு வினையாகி போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
சிலசமயம் சாகசங்கள், முட்டாள்தனமாகவும் மூர்க்க குணத்தின் வெளிப்பாடாகவும் கூட இருக்கும். கடந்த வருடத்தில் இளைஞர் ஒருவர், பத்து மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்தார். அவரிடம் கேட்டதற்கு’ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ‘நல்லா சொல்றாய்ங்கப்பா டீடெய்லு’ என்று வடிவேலு கணக்காக தலையிலடித்துக் கொண்டார்கள் பலரும்!
’ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று டீன் ஏஜ் பருவத்தைச் சொல்லுவார்கள். அதற்காக, பாம்பைத் தேடிப் பிடித்து, மிதிக்கவேண்டும் என்றில்லை. என்ன... இன்றைய இளைஞர்களுக்கு சாகசம் நிகழ்த்துவதற்கான சூழல்கள் வாய்த்திருக்கவில்லை.
கில்லித்தாண்டு தொடங்கி கபடி வரை சாகசங்களெல்லாம் இப்போது இல்லை. ஆகவே, சாகசங்களைத் தேடித் தேடி அலைகிறார்கள் இளைஞர்கள். சாகசங்களில் நேர்மறை, எதிர்மறை என்றெல்லாம் உண்டு. இதிலென்ன சோகம் தெரியுமா... நேர்மறை சாகசங்களை, இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதே இல்லை.
பத்து நண்பர்களுக்கு நடுவே, பெண்கள் கூட்டத்துக்கு மத்தியில், சாகசங்கள் நிகழ்த்துகிற இளைஞர்களே அதிகம். ‘எங்க புள்ளை ரொம்ப சாது’ என்று அம்பி முகம் காட்டுவார்கள். அவர்களே, சாலைகளில், ரெமோ ரேஞ்சுக்கு ரவுசு பண்ணுவார்கள்.
ஒரு ஆபத்தான செயலை எப்படி ஆரோக்கியமான, பாதுகாப்பான வழியில் செயல்படுத்துவது, எதைச் செய்ய வேண்டும், எது கூடாது என்பதான நெறிகளை கற்றுக் கொடுப்பதே பெற்றோரின் முக்கியக் கடமை. பொறுப்பு.
இளைஞர்கள் இந்த மாதிரி செயல்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இளம் வயதில் அவர்களுக்குள் இருக்கும் ஆர்வம், சவால், துணிச்சல், குதூகலம், உற்சாகம் என்பவையெல்லாம் இயல்பான விஷயங்கள்தான். இவை வரைமுறைக்குள் வரவேண்டும். நிராகரிக்க வேண்டியதில்லை என்பதை பெற்றோர்களும் உணரவேண்டும்.
சாலையில் விபத்து நடக்கின்றன என்பதால், வண்டியை எடுக்காமலா இருக்கிறோம். அப்படித்தான் இதுவும். என்ன... அவற்றுடன் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வும் அவசியம்.
டோபோமைன் என்பது நம் மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி டோபோமைன்தான். இந்த வேதிப்பொருள், உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. சாகச நடவடிக்கைகளுக்கு இந்த வேதிப்பொருளும் முக்கிய காரணி என்கிறது விஞ்ஞானம்.
சாகச விளையாட்டில் சிலருக்கு அதிக ஈடுபாடு இருக்கும். விடலைப் பருவத்தில் அவர்கள் பாராட்டுக்கு ஏங்குகிறார்கள். அதுசரி... இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன? நண்பர்கள் காதலன் அல்லது காதலியை ஈர்ப்பதற்காகவும் வீர தீரச் செயல்களை செய்கிறார்கள்.
‘இவன், மத்தவங்களை விட வேகமாக ஓடுவான்’, ‘இவன் அப்படியொரு வேகமாக வண்டியை ஓட்டுவான்’, ‘இவன் ஸ்விம் பண்ணும்போது, எவ்ளோ நேரம் தண்ணிக்குள்ளே இருப்பான் தெரியுமா?, ‘இவன், எவ்ளோபேர் இருந்தாலும் தைரியமா தட்டிக்கேப்பான்’... என்பதெல்லாம் சாகச எண்ணங்களும் செயல்களும் கொடுத்திருக்கிற வெகுமதிகள்!
எல்லோருக்கும் ஹீரோதான் டார்கெட். ஹீரோவாக இருக்க விரும்புகின்றனர். இதன் உந்தித்தள்ளுகிற எண்ணம்தான், சாகச ஆர்வங்கள். பைக். கார் வேகமாக ஓட்டுவது, சிகரெட், குடிப் பழக்கம் போன்ற செயல்களுக்கு அடிமை ஆவது போன்ற தவறான செயல்கள் புரியும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
ஊர்க்கதையெல்லாம் அத்துபடி நமக்கு. ஆனால் ஒரே வீட்டில் அடுத்த அறையில் இருக்கும் நம் மகனோ மகளோ செய்யும் சாகசங்களும் வீரதீரச் செயல்களும் நமக்குத் தெரிவதே இல்லை. அவற்றை நாம் உணருவதே இல்லை.
பெற்றோர் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். அப்படித் தெரிந்து கொண்டால், அவர்களின் சாகசங்களை, ஒரு கட்டுக்குள் கொண்டுவரலாம். ஓர் பாதுகாப்பு அரண் போட்டுத் தரலாம். நாமே முன்னின்று சாகசங்களை நிகழ்த்தச் செய்யலாம்.
‘இளங்கன்று பயமறியாது’ என்பது இளைஞர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... நமக்குத் தெரியும் என்பதுதான் நம்முடைய பயத்திற்குக் காரணம். பயமின்றி சாகசங்களைச் செய்யும் இளைஞர்களை, பயமின்றி வரவேற்போம். கொஞ்சம் டியூன் செய்தால் போதும்... பாதுகாப்புடன் அவர்கள் செய்யும் சாகசம்... பெரும் சாதனையாகவும் நிகழலாம்!