[X] Close

சுள்ளுன்னு வெயில் வந்தாச்சு... ஜில்லுன்னு மண் பானை வாங்குங்க!


man-paanai-thanneer

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Mar, 2018 10:51 am
  • அ+ அ-

வருஷா வருஷம் வரும் வெயில், இந்த மாதம் தன் வலதுகாலை எடுத்துவைத்து வரத் தொடங்கிவிட்டது. இன்னும் நான்கைந்து மாதத்திற்கு, ‘உஷ்...’ அப்பாடா...’ ‘கடவுளே...’ என்கிற சொற்களை, மானேதேனே போட்டு, நடுநடுவே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

இந்த வெயிலைப் பற்றி சொல்லும்போது, டெம்ப்ளேட்டாக ஒருவார்த்தையை இந்த உலகத்தார் எப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது, எந்த ஆய்வாளர்களாலும் கண்டறிய முடியவில்லை என்பதுதான், ஆச்சரியம். அந்த வார்த்தை... ’போன வருஷத்தை விட இந்த வருஷம் செம வெயிலுப்பா!’ என்பதுதான் அது.

அதுசரி... வருடத்துக்கு வருடம், மரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. தார்ச்சாலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. காங்கிரீட் காடுகளாக, வீடுகள், பிளாட்டுகள், அபார்ட்மெண்டுகள் கைகால் முளைத்து உயர்ந்து நிற்பது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சென்னை மாதிரியான நகரங்களில், பகலிலேயே வீட்டில் லைட் போடுமளவுக்கு, நாலாபுறமும் வெளிச்சம் வரவே முடியாதபடி, வீடுகள் வந்துவிட்டன. வெளிச்சம் வராதபடி இருக்கும் நிலையில், காற்று மட்டும் வந்துவிடுமா என்ன?

வெயில் வந்தால் தாகமெடுக்கும். தாகம் வந்தால், பீரோவைத் திறந்து சட்டையை எடுப்பது மாதிரி, பிரிட்ஜைத் திறந்து, வியர்வை வழிய (அப்படியொரு ஜில்லு) இருக்கிற பாட்டிலைத் திறந்து, தண்ணீரைக் குடிக்கிறோம். குளிரக்குளிரக் குடிக்கிற இந்தத் தண்ணீரால், நம் தாகம் தணியாது என்பதே உண்மை.

இன்னும் சொல்லணுமா? அந்த பிரிட்ஜ் தண்ணீரால், தொண்டைப் பகுதி நாளடைவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிளாஸ்டிக் பாட்டில், பிரிட்ஜ் குளிர்ச்சி இவையெல்லாம் நம் குரலுக்கும் உடல் நலனுக்கும் எதிரிகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இருபது வருடங்களுக்கு முன்பு வரை, அதாவது தண்ணீரை பாட்டிலிலும் பாக்கெட்டிலும் கேன்களிலும் விற்பதற்கு முன்பு வரை, ஒவ்வொரு விட்டு வாசலிலும் வழியில் செல்வோருக்காக, தாகம் தணித்துக்கொள்வதற்காக, வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில், பானையில் தண்ணீர் வைத்திருப்பார்கள். ஒரு மணல் குவியல்... அதில் ஓர் மண்பானை, அதன் மேலே பிளாஸ்டிக் தட்டு. அந்தத் தட்டின் மேல் பிளாஸ்டிக் டம்ளர்.

யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். யாரேனும் வந்து குடிப்பார்கள். வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். கதவு தட்டி வாழ்த்து அல்ல. மனதார வாழ்த்து அது. ‘மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’ என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியது மாதிரி, இந்த நன்றியும் வாழ்த்தும் மனதாரச் சொல்லப்படும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு அது மனதுக்குள் போய்ச் சேரும்.

மண்ணும் மண்ணால் செய்யப்பட்ட பானையும் அத்தனை குளிர்ச்சியைத் தரக்கூடியவை என்பதை எவரும் மறப்பதற்கில்லை. மறுக்கவும் முடியாது. கலர்கலராக இருக்கிற குளிர்பானங்கள், மேலும் மேலும் உடலையும் குடலையும் பதம்பார்க்கிற வில்லன்கள்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஒரு பானை தண்ணீர், நம் மனதையும் வயிறையும் தாகத்தையும் தணிக்கவல்லது என்பதே உண்மை.

மண்ணுக்கு மகத்துவம் உண்டு. மண் பானைக்கும் மகத்துவம் உண்டு. இந்த மண்பானையில் வெட்டிவேர், நன்னாரி வேர் முதலான வேர்களையும் போட்டுவைத்தார், நீரின் ஜில்லிப்புடன் வேரின் குளுமையும் சேர்ந்து, நம் உடலை உஷ்ணத்திலிருந்து மீட்டெடுக்கும். தாகசாந்தி தந்து, வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும்.

பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். பானைத் தண்ணீர் குடித்தவர்களும் பாக்கியசாலிகள்தான்.

சுள்ளுன்னு அடிக்கும் வெயிலுக்கு... ஜில்லுன்னு குடிங்க பானைத்தண்ணீர்!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close