[X] Close

மனைவிக்கு உண்டா 'சண்டே ஹாலிடே!’


wifekku-sunday-holiday

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Mar, 2018 15:39 pm
  • அ+ அ-

சனிக்கிழமை  மதியத்தில் இருந்தே  தொடங்கிவிடுகிறது ஞாயிறு விடுமுறைக்கான  குதூகல மனசு. வேலை, வேலையில் தொல்லை, டிராவலிங், கம்ப்யூட்டர், ஃபைல்கள், மீட்டிங், இன்னபிற டென்ஷன் இல்லாத ரிலாக்ஸ் மோடுக்கு மனித மூளை இயங்கத் தொடங்கி  பல்லாயிரம் சண்டேக்கள் ஆகிவிட்டன.

சண்டே ஹாலிடே  என்பது, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின்  லாலிபாப் மனசுக்கு இணையானதுதான்!

சரி... ஞாயிறில் என்னவெல்லாம் செய்வோம்?

ம்ஹூம்... எதுவுமே செய்யமாட்டோம் என்கிறார்கள் பலரும்.

1. அலாரச் சத்தத்தின் போதே லப்டப் சத்தம் எகிறாது.

2. பொலபொலவென விடிந்த பிறகும் தூக்கம்.

3. இன்றைக்குத்தான் ப.மு. ப.பி. , அதாவது பல்தேய்ப்பதற்கு முன் காபி, பின் காபி. பேப்பரெல்லாம் படித்து முடிப்பதற்கே உச்சிவெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்திருக்கும்.  நடுவே ஒருகுட்டித் தூக்கம் போட்டது, கனவு மாதிரி மங்கலாகத் தெரியும்.

‘’நேத்திக்கி செம ரெஸ்ட்டுப்பா. தூங்கி எழுந்து, தூங்கி எழுந்துன்னு நல்லா ரெஸ்ட் எடுத்தேன்’’ என்று மறுநாள் ரெஸ்ட் எடுத்த சந்தோஷத்தில், குதூகலத்தில், மனநிறைவில் ஓடிப்போய்விடும்.

நல்லது. மிக நல்லது. சிறப்பு. மிகச் சிறப்பு.

அதேசமயம், கணவன்மார்கள் இன்னொரு உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். வேலைக்குச் செல்வதற்காக, நீங்கள் தினமும்  காலையில் ஆறு மணிக்கு எழுந்திருக்கிறீர்களா. ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறீர்களா. உங்களுக்கும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே மனைவி எனும் ஜீவன் எழுந்து , காலுக்குச் சக்கரம் கட்டிக் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதல் நாள் பாத்திரங்கள், ஸிங்க்கில் பல் காட்டிக் கொண்டு நிற்கும். அதையெல்லாம் கழுவி அடுக்கிவைத்தால்தான், அடுத்த வேலையே ஓடும் அவர்களுக்கு. பல்லைத் தேய்த்து, பாத்திரங்களைத் தேய்த்து, வீடு பெருக்கி, வாசல் பெருக்கி, சமையல் மேடையைக் கழுவிச் சுத்தம் செய்து, உணவு தயாரிப்பதற்கு முந்தைய வேலைகள் எக்கச்சக்கம். குளித்துவிட்டு, உங்களுக்கான பருப்பு உசிலியும் குழந்தைகளுக்கான பீட்ரூட் கறியும் கொஞ்சம் உப்பு குறைவாக உங்களுக்கும் அதிகம் நெய் சேர்த்து குழந்தைகளுக்கும் என வீட்டில், சமையலறையில் கபடியாடும் பெண்களை, ஒரு பத்துநிமிடம் பார்த்துக் கொண்டே இருங்கள். அவர்களை, சுள்ளென்று திட்டமாட்டீர்கள். கடிந்துகொள்ள மனம் வராது உங்களுக்கு.

‘ஏங்க... அவங்க திட்டாம இருந்தா போதாதா’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் பேசுவதாக வெளிப்படையாகப் பேசுவது என் காதிலும் விழுகிறது.

அதெல்லாம் உங்கள் பாடு. அவர்கள் பாடு.

ஒரு மாதம் செய்து பாருங்கள். ஒரு மாதம் என்பது நான்கு ஞாயிற்றுக்கிழமைகள். இந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில், நீங்கள் எப்படியோ மனைவியும் அப்படியே. அதாவது நீங்கள் லேட்டாக எழுந்திருப்பதால், ஆபீஸ் லீவு என்பதால், அவர்கள் எழுந்திருக்காமல் இருக்கப் போவதில்லை. லீவு உங்களுக்கு மட்டும்தானே. அவர்களுக்கு லீவு வேண்டாமா.

ஆமாம். ஞாயிற்றுக்கிழமை காலை உணவுத் தயாரிப்பில் இருந்து மனைவிக்கு லீவு கொடுங்கள்.  ஒருவாரம்... சட்டையை மாட்டிக்கொண்டு, அருகில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று பார்சல் வாங்கி வந்து சாப்பிடுங்கள். இன்னொரு முறை குடும்பமாகச் சென்று சாப்பிடுங்கள். கூடுமானவரை, பார்சல் வாங்கிவந்து, வீட்டில் ரவுண்டுகட்டி, ஒருரவுண்டு கட்டுவதே சாலச் சிறந்தது. அப்படி சாப்பிடும் போது இன்னொரு முக்கியமான விஷயம்... அந்தப் பேக்கிங்கிலேயே சாப்பிட்டுவிடுங்கள். தட்டு எடுத்துச் சாப்பிட, அந்தத் தட்டுக் கழுவும் வேலையும் கூடுதல் சுமையாகிப் போகும் என்பதை தட்டிலடித்து சத்தியம் செய்கிறேன்.

வாரத்தில், ஞாயிறு மட்டும் காலை உணவுக்கு மட்டும் மனைவிக்கு லீவு கொடுத்துப் பாருங்கள்.  அந்த அன்பால் அழகாகிவிடும் வீடு.

‘ஏங்க காசுக்குப் பிடிச்ச கேடுங்க இது. வாராவாரம் கடைல வாங்கினா, தேவையில்லாத செலவுதானே. தவிர, இந்த ஒருநாள்தான் வீட்ல உக்கார்ந்து அவசரமில்லாம, நிதானமா  சாப்பிடுவீங்க. நானே பண்ணிடுறேங்க’ என்று உங்கள் மனைவி சொல்வது அவர்களீன் பெருந்தன்மை. அதையெல்லாம் கடந்து மனைவிக்கு லீவு கொடுப்பதே உங்களின் பெருந்தன்மை; கெத்து; ஆகச்சிறந்த சந்தோஷம்!

என்ன... உங்க மனைவிக்கு, சண்டே ஹாலிடேதானே!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close