[X] Close

மனசே மனசே குழப்பமென்ன?


manase-relax

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Mar, 2018 10:39 am
  • அ+ அ-

மனதை வைத்துக் கொண்டு, கவிஞர்களும் தத்துவஞானிகளும் விளையாடியிருக்கிறார்கள். ஆனால் நமக்குத்தான் மனதைக் கையாளத் தெரியவில்லையோ என்னவோ? பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பார்கள். இவை அனைத்துக்குமே மனம்தான் காரணம். நம்முடைய மனசுதான் இங்கே பிரதானம்!

 ‘‘மனசே பூரிச்சுப் போயிருச்சுப்பா’ என்று சொல்லாதவர்கள், இந்த உலகில் இருக்கிறார்களா என்ன? சந்தோஷத்திலும் வெற்றியிலும் நல்லதொரு சம்பவத்திலும் இந்த வார்த்தையை  எல்லோருமே உற்சாகமாகச் சொல்லியிருப்போம். அதேபோல் இன்னொரு வார்த்தையையும் எல்லோரும் பயன்படுத்தியிருப்போம். ‘என்னவோ தெரியலை. மனசே பாரமாகி போட்டு அழுத்துது’!

  உடலில் மனம் என்று எந்த இடத்திலும் இல்லை என்றாலும். மனம்தான் சிந்தனை. மனம்தான் எண்ணம். மனம்தான் செயல் என்பதெல்லாம் நாம் அறிந்து உணர்ந்த ஒன்றுதான்!

  மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. ஓரளவிலான மன அழுத்தம் என்பதே பலூன் மாதிரிதான். எப்போது வேண்டுமானாலும் பெரிதாகி வெடிக்கக் கூடிய மோசமானதொரு சூழல். அதனால்தான் மனோநிலை என்று சொல்லிவைத்தார்கள்.

  இந்த மன அழுத்தமானது அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

  நெல்லைக்கு அருகில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாடகலிங்கம், சென்னையில் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் டெபிட் கார்டு வழிய சம்பளம் வாங்குகிறார். 30ம் தேதி வந்து அக்கவுண்ட்டில் விழும் சம்பளத்தை, பத்து தேதிக்குப் பிறகு எடுக்கிற அளவுக்கு பணத்துக்குக் குறைவில்லை. ஆனால் ஏதோவொரு குழப்பமும் பயமுமாகவே மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கிறார்..

  ‘‘கிராமச் சூழலிலேயே வளந்தவன் நான். இங்கே எல்லாமே புதுசாவும் பிரமிப்பாவும் இருக்கு. என் சித்தப்பா தண்ணியடிச்சிட்டு வந்ததுக்காக, எங்க அப்பா மூங்கில் கழியால அடி விளாசினதை ஆறாவது படிக்கும் போது பாத்ததுலேருந்தே சிகரெட், தண்ணின்னாலே  மிகப்பெரிய பாவம்னு நினைச்சு வளர்ந்தவன் நான். ஆனா இங்கே, வேற விதமா இருக்கு. இந்தச் சூழல், ஒழுக்கமற்றதுன்னு சொல்ல வரலை. ஆனா நான் ஒழுக்கமாவே இருக்கணும்னு நினைக்கிறேன். அதான் குழப்பமா இருக்கு’’ என்று மருகித் தவிக்கிறார்.

   சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்றவற்றால் இளம் வயதில் பாதிக்கப்படுபவர்கள்  இந்த மன அழுத்த சிக்கல்பிக்கல்களுக்கு இரையாகிவிடுகிறார்கள்.

 காலப்போக்கிலான இத்தகைய அனுபவங்களின் கூட்டு விளைவு... மன அழுத்தம்!

   மன அழுத்தத்தை பலர் மன நோயுடன் ஒப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. மனநோய் என்பது வேறு. மன அழுத்தம் என்பது வேறு.  மேலும் இப்படியான ஒப்பீடு, கண்டிக்கத்தக்கதும் கூட. உடலின் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களை சர்க்கரை நோய் என்று சொல்லக்கூடாது. சர்க்கரைக் குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் இந்த மன அழுத்தப் பிரச்சினையையும் நோயாகப் பார்ப்பது கூடவே கூடாது.

   குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி, முழு ஈடுபாட்டுடனும்  அதிக ஆற்றலுடனும் அந்த வேலையைச் செய்கிறோம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

  இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம்.  இவை அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.

    தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடலானது உடனே அதிகபட்ச ஆற்றலை வள்ளலென வழங்கி, அந்தச் சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.

   இயல்பாகவே, பெரும்பான்மை மனிதர்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கிக் கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றைப் பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இந்த வகை வாழ்நிலைக்கு பழகியும் விடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை தாமே விரும்பி ஏற்கிறார்கள்.

 ஹைதராபாத்தைச் சேர்ந்த  சஹானா, சென்னையில் வேலைக்குச் சேர, திருச்சியைச் சேர்ந்த பிரவீண்குமாரை திருமணம் செய்துகொண்டாள். அன்பான கணவன். அருமையான வாழ்க்கை. அழகாய் குழந்தைகள். சென்னையின் புறநகர்ப் பகுதியில், பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய அபார்ட்மென்ட் வீடு. ஆனால் நாளடைவில், ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளானாள் சஹானா.  

  ‘‘கிட்டத்தட்ட 22 வீடுகள் கொண்ட் ப்ளாட்டில்தான் குடியிருக்கிறோம். ஆனால் என் எதிர்வீட்டுக்காரர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. பார்க்கும் போது, சம்பிரதாயத்துக்கு ஒரு மெல்லிய புன்னகை. அவ்வளவுதான். குழந்தைகளுக்காக வேலையை விட்டாச்சு. அவர்கள்தானே நம் உலகம். எல்லா வசதிகளும் இருந்தாலும் ஒரு தனிமை. வெறுமை. ஒரு குழப்பம். ஒருவித பயம்.

 திருச்சியில் உள்ள மாமியாரும் மாமனாரும் அவ்வளவு அன்பானவர்கள். ஆனால் அவர்கள் திருச்சியை விட்டு வர மறுக்கிறார்கள். சென்னையில் எங்களுடன் இருந்தால், கலகலவெனப் பேசி, அவர்களின் அனுபவங்களைக் கேட்டு பொழுதுபோகும். தாத்தாபாட்டிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளர்வதைப் பார்ப்பதே பூரிப்பு நமக்கு.

  என்னவோ தெரியலை. அவர் வேலைக்குப் போனதும் முகமே வாடிவிடும் எனக்கு. குழந்தை தூங்கியதும், இன்னும் சோகமாகிவிடுவேன். இந்தச் சோகம்... ஒருநாளின் 24 மணி நேரம் முழுக்கத் தொடர்கிறது. அனைத்தையும் விட்டேத்தியாகப் பார்க்கிற புத்தி வந்துவிட்டது’’ என்று தனிமையாலும் வெறுமையாலும் உழன்று மருகுகிறார் சஹானா.

   சத்தம், பேரமைதி, கூட்டம், தனிமை, வேலை அல்லது குடும்ப பளு போன்ற மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு, நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதுதான் முதல் வழி.

    ஒரு சிலருக்கு அதிக வேலைப்பளு, மன அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையைச் செய்வதாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டிய டார்கெட் வேலை ஆகியவற்றாலும் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் மன அழுத்தம் ஏற்படலாம் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.

 ‘‘மனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. சொல்லப் போனால் நோயே அல்ல. ஆனால் இதற்குள் பல வகையான நோய்கள் உள்ளடங்குகின்றன. இந்த மனநோய்க்கு வயது, பால், பொருளாதாரம், இனம் என்று எந்த வேறுபாடும் கிடையாது. எவரையும் எந்த நேரமும் இது தாக்கக் கூடும். சிந்தனையிலும், நடத்தையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சாதாரண வாழ்க்கையில் பெரும் குழப்பங்கள் உருவாகும்.

   மனநோய்க்கான காரணங்களையும் அதன் மூலத்தையும்  இதுவரை மிகச் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மூளையில் ஏற்படும் சமனின்மையே இந்த மனநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகின்ற அழுத்தங்கள், மரபணுக்கள் என்பன இந்த ரசாயன சமநிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.

  காரண காரியம் எதுவும் இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டே இருப்பது, தடதடவென ஒரு விஷயத்தை விட்டுவிட்டு, இன்னொரு விஷயத்துக்குத் தாவுவது, அதீத பயம், கவலை, விவரித்துச்  சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அன்றாட நடவடிக்கைகளில் செயல்பட முடியாத நிலை, உணவு உண்ணுதலிலும், தூக்கம் கொள்வதிலும் சிக்கல் என்பன மனநோய்க்கான சில அறிகுறிகள். இதையெல்லாம் அறிந்து உணர்ந்து கொள்வதும் அவர்களை சீக்கிரமே அழுத்தத்தில் இருந்து விடுவிப்பதும் ரொம்பவே சுலபம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  

    ‘‘தூக்கமின்மை, பசி இல்லாத நிலை, எதிலும் அதிக ஈடுபாடு காட்டாதது, ஞாபகமறதி, இயல்புக்கு மாறான சில தவறுகள்,  எப்போதும் எல்லா செயல்களிலும் தாமதம், எப்போதும் எவர் மீதேனும் கோபம், தாழ்வு மனப்பான்மை என மன அழுத்தக்காரர்களின் செயல்களைக் கொண்டு அவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் அளிக்கவேண்டும்.

    உரிய மருத்துவரைப் பார்ப்பதும், கவுன்சலிங் மூலமாக அவர்களுக்கு தெளிதலையும் புரிதலையும் ஏற்படுத்துவதும் மிக அவசியம்.   எல்லாவற்றுக்கும் மேலாக, இது முக்கியமான, எளிமையான வழி... வீட்டிலோ அலுவலகத்திலோ உறவு வட்டத்திலோ நண்பர்கள் மத்தியிலோ எவரேனும் மன அழுத்தத்தில் தவிப்பதை உணர்ந்தால், அவர்களிடம் கொஞ்சம் மனம் விட்டுப் பேசுங்கள். ஒரு குடும்பத்தில், அலுவலகத்தில், நட்பு வட்டத்தில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை மனமுவந்து பாராட்டுங்கள்.

  அடுத்தவரிடம் நீங்கள்  என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதையே அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக... அன்பு! உங்கள் கொடுக்கல்வாங்கல் என்பதை அன்பில் இருந்தே தொடங்குவோம்.

மன அழுத்தத்திற்கும் மனக் குழப்பத்திற்கும் முதல், முழு மருந்து அன்புதான்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close