[X] Close

'நீங்க நல்லவரா, கெட்டவரா?’ உங்கள் செல்போன் சொல்லிவிடும்!


nallavara-kettavara-cellphone

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Mar, 2018 14:41 pm
  • அ+ அ-

அம்புலிமாமா கதைகள் படித்திருக்கிறீர்களா. ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் பறவையின் வலது றெக்கையில், அரக்கனின் உயிர் இருக்கும் என்று எப்போதோ படித்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக் கதைகள் இப்போது எழுதப்பட்டால், அந்த உயிர் இருக்கும் இடம்... செல்போன் என்பதாகத்தான் எழுதுவார்களோ என்னவோ?!

ஒரு சிலரிடம் தடக்கென்று டயல் டோனுக்கும் ரிங் டோனுக்கும் உள்ள வித்தியாசம் கேட்டாலே தெரியாது. ஆனால் செல்போன் கண்டுபிடித்த கம்பெனிக்குக் கூட தெரியாத பல விஷயங்களை, இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

செல்லும் இடத்துக்கெல்லாம் எடுத்துச் செல்லும் பாக்கெட்டில் வைத்துச் செல்லும் செல்போன்களையும் அந்தக் காலத்து லேண்ட்லைன் போன்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அப்போது லேண்ட் லைனே கதி என்று யாரும் அதன் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கவில்லை. செல்லும் இடமெல்லாம்  லேண்ட்லைன் போனை கழுத்தில் கட்டிக் கொண்டு எடுத்துப் போகவில்லை. ஆனால் இன்றைக்கு?

ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறையும் செல்போனை எடுத்து, ஏதேனும் போன், மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.  டாய்லெட்டுக்கு பேப்பரும் வாரப்பத்திரிகையுமாகச் சென்ற காலமெல்லாம் போய்விட்டது. செல்போனுடன்  செல்பவர்களே அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

முன்பெல்லாம் ஏடிஎம்  இல்லை. கார்டும் கிடையாது. பணத்தை பீரோவில் வைத்திருப்பார்கள். அதைப் பூட்டி சாவியைப் பத்திரமாக வைத்திருப்பார்கள். இப்போதும் அப்படியான பூட்டு அதாவது லாக் பயன்படுத்துகிறார்கள். எங்கே என்கிறீர்களா? செல்போனில்தான்.

அப்பாவோ தாத்தாவோ ஒரு டைரியிலோ நோட்டுப்புத்தகத்திலோ சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என விலாசங்களையும் தொலைபேசி எண்களையும் எழுதிவைத்திருப்பார். எத்தனை வீடு மாறினாலும் கூட, நம்பர்களும் முகவரிகளும் கொண்ட நோட்டுப் புத்தகம் மிக மிக பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆறுமாதத்துக்கு ஒருமுறை  செல்போன்கள் புதிய புதிய மாடல்களாக உதித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படி புதிய மாடல் போனை வாங்காதவர்கள், அப்டேட்டில் இல்லாதவர்கள் என்று இளக்காரமாகப் பார்க்கப்படுகிற சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பிறகென்ன... புது மாடல்... புது செல்போன்.  விளைவு... ‘மாப்ளே. போன மாசம் போன் மாத்தும்போது உன் நம்பர் மிஸ்ஸாயிருச்சுடா’ என்று சர்வசாதாரணமாக தோள் குலுக்கிச் சொல்கிறோம்.

செல்போன் என்பது நவீன சாதனம். ஆமாம்... நவீனம்தான். செல்போன் புழக்கத்துக்கு வந்து பல வருடங்கள் ஓடிவிட்டாலும் இன்றைக்கும் நவீனம்தான். நாளொரு மாடலும் பொழுதொரு gbக்களுமாக  அப்டேட்டிக்கொண்டே இருக்கிறார்கள். 

எல்லா நல்லதுகளும் இருக்கின்ற அதேநேரத்தில் எல்லாக் கெட்டதுகளும் குவிந்து கிடக்கின்றன.  நம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, நம் குணாதிசயங்களைச் சொல்லும் ஜோதிடர்கள் போல, நம் செல்போன்களைக் கொண்டே நம் குணங்களை, எண்ணங்களை, செயல்களைச் சொல்லிவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சில கேள்விகளையும் அந்த ஆய்வு முன்வைக்கிறது.

1. உங்கள் செல்போனில் அதிகம் மெசேஜ் அனுப்புகிறீர்களா?

2.இரவு நேரங்களில் செல்போனில் அதிகம் பேசுகிறீர்களா?

3. உங்கள் செல்போன் லாக் ஓபன் பாஸ்வேர்டு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியுமா?

4. பாத்ரூமில் குளிக்கும் போது, உங்கள் செல்போன் அடித்தாலோ, மெசேஜ் சவுண்ட் கேட்டாலோ பதட்டமாகிவிடுவீர்களா?

5. அடிக்கடி செல்போன் லாக் ஓபன் பாஸ்வேர்டு மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?

6. குழந்தைகளோ மனைவியோ (கணவரோ)  உங்கள் செல்போனை எடுத்து ஓபன் செய்துவிட்டால், கலவரமாகி, காச்மூச்சென்று கத்துவீர்களா?

7.  வீட்டு ஹாலில் அமர்ந்திருக்கும் போது, எவரேனும் போனில் அழைத்தால், சட்டென்று பீதியுடன்  பால்கனிக்கோ வாசலுக்கோ சென்று, குரல் தாழ்த்தி ரகசியமாகப் பேசுகிறீர்களா?

இப்படியான ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டுவிட்டு, பதில்களை எங்களுக்குச் சொல்லவே வேண்டாம். நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதை உங்கள் செல்போனே சொல்லிவிடும் என்று   செல்போனில் அடித்து சத்தியம் செய்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நீங்க நல்லவரா கெட்டவரா?  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close