[X] Close

''ஹால் டிக்கெட் தொலைத்த மாணவர் எங்கிருந்தாலும் பள்ளி அலுவலகம் வரவும்'' - மனசைக் கிளறிவிடும் பப்ளிக் எக்ஸாம் நினைவுகள்


hall-ticket-memories-exam-memories-10th-public-exam

  • kamadenu
  • Posted: 15 Mar, 2018 16:18 pm
  • அ+ அ-

''ஹால் டிக்கெட் தொலைத்த மாணவர் எங்கிருந்தாலும் பள்ளி அலுவலகம் வரவும்'' - மனசைக் கிளறிவிடும் பப்ளிக் எக்ஸாம் நினைவுகள்


நாளை பொதுத் தேர்வு தொடங்கப்படுவது குறித்து செய்தியை படித்ததுமே எனக்கு பழைய நினைவுகள் மெல்ல கிளறத் தொடங்கின.. சிறு கூட்டிலிருந்து வெளியேறி சின்னஞ்சிறு சிறகுகளை விரித்து உலகை அளக்க முயற்சித்த பருவம் அது.

பொதுத் தேர்வு எழுதப்போகிறேன் என்றதுமே, சின்ன அண்ணன் பெரிய அண்ணன், அக்கா என ஆளாளுக்கு அவரவர்கள் பங்குக்கு அறிவுரைகள் வேறு... அதில் ஒன்று... அக்கம்பக்கம் திரும்பிப் பார்க்காதே... பிட் அடிக்கற எண்ணம் இருந்தா அடியோட விட்ரு. பறக்கும் படை வந்தா கதக் கந்தல் ஆகிவிடும் என்பார்கள்... அவர்கள் பயமுறுத்தியதைப் பார்த்தால் பறக்கும் படை என்றால் ஏதோ ஹெலிகாப்டரில் வருவார்கள் போலிருக்கிறது என்றெல்லாம் நினைத்தேன்.

பொதுத் தேர்வு எழுதப் போகிறேன் என்றதுமே வீட்டில் தனி மரியாதை. காலையில் டிபன் உரிய நேரத்திற்கு முன்னதாக தயாரிப்பது உள்ளிட்ட பிரத்யோக வேலைகள் மும்முரப்படுவது நடக்கும். ஒவ்வொருநாளும் தேர்வு முடிந்து வந்ததும் வீட்டில் எனக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக யார் சந்திக்க வந்தாலும் அவர்களை வெளியே அழைத்துச்சென்று திண்ணையில் உட்கார வைத்து பேசவேண்டிய நிலை அனைவருக்கும். உள்ளே தூண்கள் நிறைந்த கூடத்தை எனக்கு மட்டுமே ஒழித்து தந்து, படிப்பதற்கு இவ்வளவு கௌரவம் தருவார்கள் என்று நான் நினைக்கவேயில்லை. இவ்வளவு தூரம் வீட்டில் கௌரவப்படுத்தப்படும்போது அந்தவகையில் தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு என்றுமட்டும் தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். 

உண்மையை சொல்ல வேண்டுமானால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதே விளையாட்டு நேரம்போக படித்ததுதான். அதுகூட பள்ளியில் படித்ததுதான். வீட்டில் படிப்பதுபோல பாவலா செய்ததோடு சரி. உறவினர்கள் பலரும் சதா யாராவது வருவதும்போவதும் பேசிக்கொண்டிருந்தால் எப்படி படிப்பதாம்?

அதேபோல பேருந்தில் போகும்போது பப்ளிக் எக்ஸாம் எழுதப் போய்ட்டிருக்காங்க என்று முன் இருக்கையில் அமர்ந்துகொண்டிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் எங்களைப் பார்த்துப் பேசிக்கொள்வது போன்றவை பத்தாம் வகுப்பு தேர்வின் முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. அதுமட்டுமில்லாமல் இவ்வளவு முக்கியமான தேர்வுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ சரி போகட்டும்... கிடைத்தவரை லாபம் என்று சென்றது வேறுகதை.

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் அப்போதெல்லாம் பள்ளிகளில் வரலாறு புவியியலுக்கெல்லாம் ஆசிரியர்களே கிடையாது. அறிவியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியரும் இல்லாததால் வேறு பிரிவுக்கான ஆசிரியர் எங்களை அவர்களோடு இணைத்துச் சொல்லிக்கொடுப்பார்கள். எங்களுக்கு ஆங்கில ஆசிரியரும் இல்லை என்பதுதான் கொடுமை. இதற்காக பலமுறை பள்ளியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தினோம்.

ஆங்கிலம் கிராமர் பொறுத்தவரை எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரே சொந்தஆர்வத்தில் எங்களுக்காக பொறுப்பெடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு மணிநேரம் எங்களுக்கு வந்து ஆங்கிலம் கற்றுத் தருவார். அந்தக் காலத்து மேஜர் சுந்தர்ராஜன் போல இருப்பார். இவ்வளவு நாள் ஒரு தலைமைஆசிரியர் என்ற வகையில் அவருக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. மாலையில் ஆங்கில வகுப்பு தொடங்கிய பிறகு அவருடன் ஒரு அற்புதமான நெருக்கத்தை உணர்ந்தோம். 

மிகச்சிறந்த நகைச்சுவையாளர் என்பதையும் அறிந்தோம்... head master teaching the lession இது என்ன காலம் என்று எங்களைப் பார்த்து கேட்டுவிட்டு அவரே சொல்வார்... ''போதாத காலம்''னு 

''அந்த கடைசிபெஞ்சி பிரகஸ்பதிகள் நெனைக்கறது நல்லா தெரியுது.... அப்படித்தானே.. பள்ளிக்கூட எப்பவிடுவாங்க... எப்போ போயி திருவிழாக் கடைகளைப் பார்க்கலாம். சர்க்கஸ் பாக்கலாம் இவரு வேற நம்பள பிடிச்சிவச்சிகிட்டு இம்சை பண்றாரே அதானே நெனைக்கறீங்க...  இங்க பாருங்க தம்பிங்களா இந்தப் பாடம்னு இல்ல.. எந்தப் பாடமும் நடத்தும்போது கவனிக்கலனா வாழ்நாள் முழுவதும் இதை நெனைச்சி பாக்கவேண்டியதாயிடும்.

அன்னைக்கே வாசுதேவன் சார் சொன்னாரே அன்னைக்கு அவர் சொன்னதை கேக்கலையே அப்படின்னு... சரி ஒரு கதை சொல்றேன்... அப்புறம் கிளாஸ்ஸுக்குப் போகலாம்...'' என்று அதன்பிறகு ஒரு நகைச்சுவை கதை சொல்வார். தினம்தினம் அவரது கதைகளைக்கேட்டு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். 

கடுகடு என்ற அதிகார தோணை அறவே இன்றி ''சிரிசிரி என்று எங்களை அன்போடு சொல்லிக்கொடுத்தவர் அவர்.

இவ்வளவு நடத்தியும் நான் ஆங்கிலத்தில் பாஸ் மார்க்கான 35 தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? உண்மையில் நான் கூட நம்பவில்லை. இயல்பாக படிக்கும் சில மாணவர்கள் தவிர, நிறைய மாணவர்கள் ஆங்கிலத்தில் பெயிலாகியிருந்தபோது நான் மட்டும் எப்படி 35 எடுத்து பார்டரில் பாஸ்செய்தேன் என்று இந்தநிமிடம் வரை நம்பமுடியவில்லை. அப்படியெனில் அந்த தலைமைஆசிரியர் புண்ணியத்தில் ஆங்கிலம் இரண்டாம்தாள்தான் காப்பாற்றியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

ஒருநாள் தேர்வுக்கூடத்தில் நுழையும்போது ஹால்டிக்கெட் எனது பரீட்சை அட்டை கிளிப்பிளிலிருந்து ஹால்டிக்கெட் எங்கோ தொலைந்துவிட்டிருந்தது தெரிந்தது. வயிற்றில் சற்றே புளியைக் கரைக்க என்ன செய்வதென தெரியாமல் விழித்தேன். வெளியே ஓடினேன்... பேருந்துநிலையம் வரை சென்று திரும்பினேன்... மீண்டும் பள்ளி வளாகத்தில் நுழையும்போது எனது எண்ணை மைக்கில் அறிவித்தார்கள் ஹால் டிக்கெட் மைதானத்திலிருந்து கீழே கண்டெடுக்கப்பட்டுள்ளது... ஹால்டிக்கெட் தொலைத்த மாணவர் எங்கிருந்தாலும் அலுவலக அறைக்கு வரவும் என அழைத்தார்கள். ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஒருவழியாய் நிம்மதி பெருமூச்சோடு தேர்வுஅறையை நோக்கி ஓடினேன்.

இவ்வளவு நடந்தபிறகும் இப்பொழுதும்கூட ஒரு கனவு வந்து ஓயாத தொல்லை தருகிறது. அது வேறொன்றுமில்லை... தேர்வுக்கூடத்தில் நுழையும்போதுதான் தெரிகிறது... ஹால்டிக்கெட் மறந்துவிட்டு வந்தது. அடடே என்ன ஒரு தொல்லை... பேருந்து நிலையம் வந்தால் மதியம்தான் எங்கள் ஊருக்கு பேருந்து என்கிறார்கள்... என்ன செய்வது... அப்போதுதான் எனக்கே ஞாபகம் வருகிறது.. எனக்குப் பறக்கத் தெரியும் என்பது... சிறு உற்சாகம்மேலிட உடனே வானில் தாவுகிறேன்... மெல்ல மெல்ல வானத்தில் எனது கைகள் அலைகிறது... ஒரு அழகிய பயணம்... 

வானில் பறக்கும்போது தேர்வு தொடங்குவதற்குள் ஹால்டிக்கெட் எடுத்துவந்துவிடவேண்டும் என்று பறக்கிறேன் பறந்துகொண்டேயிருக்கிறேன். வானில் ஏற்கெனவே பறந்துகொண்டிருக்கும் சில பறவைகள் என்னிடம் பேசுகின்றன... என்ன தம்பி இந்தப் பக்கம்... ''ஹால்டிக்கெட் எடுத்துவரப்போறேன்... தப்பா நெனைச்சுக்காதீங்க... உங்க ரூட்ல வந்ததுக்கு... இனிமே ஒவ்வொரு கவனமா ஹால்டிக்கெட் எடுத்துட்டுப் போவேன்.... '' எனது பதிலை அப்பறவைகள் கேட்டனவா தெரியவில்லை... தூக்கத்தில் எழுந்து இன்று ஹால்டிக்கெட் இல்லாமல் எப்படி தேர்வுக்கூடத்திற்கு போகப் போகிறோம் என்று பல நாள் நினைத்ததுண்டு.. அப்புறமாய் எக்ஸாம்தான் முடிஞ்சிடிச்சி இல்ல.. ச்சே என்ன கனவு இது என்று ஒருகனம் சிரித்துக்கொள்வேன்.

அதன் பிறகு எவ்வளவோ தேர்வுகள் என்னால் எழுதப்பட்டுவிட்டன... ஆனால் இந்தக் கனவு மட்டும் இன்னமும் வந்துகொண்டேயிருக்கிறது... தேர்வுகுறித்த அச்சம் இவ்வளவு வலிமையானதாக இருக்குமென்று எனது பதின்பருவத்தில் நான் நினைத்ததேயில்லை. அதன்பிறகு தேர்வுக்கூட மேற்பார்வையாளராகவும் (hall supervisor) தேர்வு மைய கண்காணிப்பாளர் (exam centre invigilator) ஆகவும் கூட பிற்காலத்தில் பணியாற்றிவிட்டேன். ஆனால் துரத்தும் ஹால்டிக்கெட் கனவிலிருந்து விடுபடும் வழிதான் தெரியவில்லை.

- பால்நிலவன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close