[X] Close

காதலன்/காதலி ‘நோ’ சொன்னால் என்ன செய்ய வேண்டும்?


relationship-advice-love-failure-advice

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 10 Mar, 2018 17:39 pm
  • அ+ அ-

முன்னாள் காதலன் அழகேசனால் கல்லூரி வாசலிலேயே மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்ளப் பழகிவரும் இன்றைய நவீன தலைமுறையில், இதுபோன்ற சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. உங்கள் காதலனோ/காதலியோ உங்களுக்கு ‘நோ’ சொன்னால் என்ன செய்ய வேண்டும்..?

#  காதல் மட்டுமே வாழ்க்கையல்ல என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். காதலைத் தாண்டியும் இந்த உலகத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அதில், உங்களுக்குப் பிடித்தது எதுவோ, அதன்மீது உங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் திருப்புங்கள்.

# ஒருவர் மீது மட்டுமே கொண்டிருப்பதுதான் உண்மையான காதல் என்ற கதையெல்லாம் மலையேறிப்போய் பல ஆண்டுகளாகி விட்டன. ஒரு காதல் தோல்விக்குப் பிறகும் காதல் தோன்றும் என்பதை உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் பார்த்திருக்கலாம். எனவே, உங்களுக்கு ஏற்ற துணையைக் கவனமுடன் தேர்ந்தெடுங்கள்.

# மது அருந்துவது, சிகரெட்டால் சூடுவைத்துக் கொள்வது, தற்கொலைக்கு முயல்வது, தாடி வளர்த்துத் திரிவதெல்லாம் தேவதாஸ் காலத்திலேயே பார்த்தாகிவிட்டது. முன்பைவிட உங்கள் தோற்றத்திலும், உடையிலும் கவனம் செலுத்துங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு அழகாக மாறிவிடுவீர்கள்.

# எந்நேரமும் அழுது வடியாமல், முகத்தை மலர்ச்சியுடன் வைத்திருக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்ல மாற்றத்தைத் தரும்.

# காதலிக்கும் காலகட்டத்தில், நேரமின்மை காரணமாக உங்களுக்குப் பிடித்த சில விஷயங்களைச் செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். அந்த விஷயங்களைச் செய்ய இப்போது நேரம் கிடைத்திருக்கிறது என நினைத்துக்கொண்டு, அதில் முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்.

# உங்களைப் பிடிக்கவில்லை என ஒருவர் ‘நோ’ சொன்னால், ‘நஷ்டம் உங்களுக்கல்ல, அவர்களுக்குத்தான்’ என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். காரணம், நீங்கள் அவர்களை எந்த அளவுக்கு நேசித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அதனால், ‘நோ’ சொன்னவர்தான் ‘அன்லக்கி’ என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

# தனிமையில் இருப்பதைத் தவிர்த்து விடுங்கள். தனிமை என்பது எப்போதுமே சோக நினைவுகளை சொரிந்துவிட்டு வேடிக்கை பார்ப்பவை. அதனால், கூடுமானவரை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

# ஒருவர் உங்களுக்கு ‘நோ’ சொல்லும்பட்சத்தில், ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையோ அல்லது பெண் சமூகத்தையோ தவறாக எண்ணாதீர்கள். அப்படி நீங்கள் நினைத்தால், அந்த சமூகத்தின் மீதே உங்களுக்கு வெறுப்பு வந்துவிடும். பிறகு, எல்லோரிடமும் வெறுப்பைக் காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

# ஒருவர் ‘நோ’ சொல்லிவிட்டார் என்பதற்காக, ‘அவரைப் பழிவாங்குகிறேன்’ என்று உடனடியாக இன்னொருவரிடம் கமிட்டாக வேண்டாம். சரியான புரிதல் இல்லாமல் அவசரத்தில் கமிட்டாகும்போது, அவரையும் சில நாட்களிலேயே பிடிக்காமல் போய்விடலாம். எனவே, அடுத்த கமிட்மெண்டை நிதானமாகத் தேர்ந்தெடுங்கள்.

# ஒருவர் ஏன் ‘நோ’ சொல்கிறார் என்பதற்கு, அவரிடமும் காரணங்கள் இருக்கும். எனவே, அவர் நிலையில் இருந்து அந்தக் காரணங்களை யோசியுங்கள். ஒருவேளை அவர் ‘நோ’ சொன்னது சரியாகக்கூட இருக்கலாம்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close