[X] Close

பெண்கள் வளர்ச்சிக்கு ஆண்கள் மட்டும்தான் தடையா? - பெண்கள் தின சிறப்புப் பகிர்வு


fully-video-on-womens-day

  • Team
  • Posted: 08 Mar, 2018 14:36 pm
  • அ+ அ-

பலரிடமிருந்து அன்பான வாழ்த்துகள், சிலரிடமிருந்து சம்பிரதாயமான வாழ்த்துகள் என இன்றைய தினத்தை தொடங்கி இருப்போம் அல்லாவா? இன்னும் பல பெண்களுக்கு இது வழக்கமான நாளாக இருந்திருக்கும். அதே உற்சாகம், அதே சோர்வு, அதே வேலை, அதே சலிப்பு, அதே திட்டு, அதே பாராட்டு. 

ஆம் இன்று உலக மகளிர் தினம். 

மகப்பேறு விடுமுறை, ஊதிய பாகுபாடு, பணிபுரியும் வயது விகிதம், வேலைவாய்ப்பு விகிதம், சர்வதேச அளவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு என ஆண்களுடன் சமவுரிமைகளுக்காக போராடி வருகிறோம்.
தினமும் எங்கோ ஓர் மூலையில் இச்சமூகத்தில் கொண்டாடப்படுகிறோம், அறிவுரைக்கு உள்ளாக்கப்படுகிறோம், மட்டப்படுத்தப்படுகிறோம், வன்முறைக்கு உள்ளாகிறோம், கொல்லப்படுகிறோம், ஏளனப்படுத்தப்படுகிறோம்.

உண்மையில் நமது உரிமைகளுக்கும், சமவுரிமைக்காக ஆண்கள் மட்டும்தான் முட்டுகட்டைகளாக இருக்கிறார்களா? அதில் பெண்களுக்கு பங்கு இல்லையா? இதைப் பற்றிதான் பேசியிருக்கிறது ரஞ்சித் பாபு சுகுமாறன் இயக்கத்தில் லஷ்மிப்ரியா நடிப்பில் வெளிவந்துள்ள மகளின் தின சிறப்பு வீடியோ.

Unhappy Women's Day என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மகளிர் தினத்தில் பல கேள்விகளை பெண்களிடமே முன் வைக்கிறார் லஷ்மிப்ரியா, ஒரு அம்மாவாக, சக பணியாளராக, தோழியாக, மருமகளாக, மாமியாராக மற்றொரு பெண்ணை நாம் எவ்வாறு நடத்துகிறோம், எவ்வளவு காயப்படுத்துகிறோம்,  நமக்கான மாற்றத்தை நம்மிலிருந்தே தொடங்காமல் இன்னும் எவ்வளவு காலத்திற்கு மற்றவர்களை விமர்சிக்கப் போகிறோம் என்ற கேள்வியுடன் துவங்கும் இந்த வீடியோ, அன்றாடம் நமது குடும்பத்தில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளும் வளர்ப்பில் பெற்றோர் காட்டும் வேறுபாட்டில் துவங்குகிறது பாலின சமத்துவப் பிரச்சினை, பெண் ஆடை சுதந்திரத்தை விமர்சிக்கும் சக பெண்களின் விமர்சனங்கள், அலுவலகங்களில் பெண்களுக்கிடையே நடக்கும் அரசியல் என அனைத்தையும் யதார்த்தமாக நம்முன் வைக்கிறது.
சரி நமக்கான நட்பையாவது நாம் தக்கவைத்து கொண்டிருக்கிறோமா? பள்ளி, கல்லூரி நாட்களில் நம்முடைய உயிர் தோழியாக நமது அரை வாழ்நாளில் அனைவரிடமும் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்ணை எத்தனை பேர் திருமணத்துக்கு பிறகு தக்க வைத்து கொண்டிருக்கிறோம்? குடும்பத்துக்கான கடமைகள், முன்னுரிமைகளில் எத்தனை பேர் நட்பை இழந்திருப்போம் என்ற நமது தவறுகள் நீள்கின்றன.  

நாம் மற்ற பெண்களைப் பார்த்து பொறமைப்படாமல், அவர்களைத் தீர்மானிக்காமல், அவர்களை விமர்சிக்காமல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று முடிந்து அதற்கான தொடக்கத்தை நம்மிடையே கொடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோவில் கூறியிருக்கும் கருத்தைப் பற்றி நீங்கள் நினைப்பதென்ன? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் 
அனைவருக்கு மகளிர் தின வாழ்த்துகள்...

- இந்து குணசேகர்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close