[X] Close

பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: மார்ச் 8 மட்டும்தானா?


international-womens-day-article

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Mar, 2018 11:48 am
  • அ+ அ-

தீபாவளிப் பண்டிகையையொட்டி சம்பிரதாயத்துக்கு தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்வது போல், சர்வதேச பெண்கள் தினம் என்றும் அந்த நாளில், பெண்மையைப் போற்றுவோம் என்றும் சொல்லி ஸ்டேட்டஸ் போட்டு ஜே போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

முதல் நாள் ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ சொல்வது போல், பெண்களுக்கு இந்த நாளில் வாழ்த்துகள் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? சடங்கு சாங்கியங்களை அந்தந்த நாட்களில் கடைப்பிடிப்பது போல மார்ச் 8ம் தேதியை கடைப்பிடித்தால் மட்டும் பெண்களை உயர்வாக நடத்துவதாக அர்த்தமாகி விடுமா?   இதுகுறித்து ஆண்கள்தான் யோசிக்க வேண்டும்.

பெண்கள் தினத்தைப் பற்றி பேச்சு வந்தால், உடனே பெண்ணடிமைத் தனம் குறித்து பேசத் துவங்குகிறோம். அடிமைத்தனத்தை எடுத்துரைக்கும் போது பெண் சுதந்திரம் பேசி கொந்தளிப்போம். உண்மையில். அன்பு தருகிற வெற்றிக்கு இணையானதாக இங்கே எதுவுமில்லை.

பெண்களை அடிமைப்படுத்த வேண்டாம். அவர்களை ஆளவேண்டாம். காபந்து தரவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. 

‘உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா... சிதம்பரம் ஆட்சியா...’ என்று கேட்பது பன்னெடுங்கால வழக்கம். ‘மதுரை’ என்று சொன்னாலும் ‘சிதம்பரம்’ என்று சொன்னாலும் இங்கே விமர்சனங்களும் கெக்கலிப்புகளும் நடந்தேறும்.

எதற்கு இப்படிக் கேட்கவேண்டும். ஏன் கெக்கலிக்கவேண்டும்.

மதுரை என்று பதில் சொன்னால், பொண்டாட்டிதாசன் என்று சட்டென்று கேலி பேசுவார்கள். சிதம்பரம் என்று தெரிவித்தால், ஆணாதிக்கக்காரன் என்று முத்திரை குத்துவார்கள். முன்னே போனால் பிடித்து இழுப்பதும் பின்னே வந்தால் திட்டித் தீர்ப்பதும் என குற்றம் சுமத்துவதற்கு சுட்டுவிரல்கள் நீண்டபடியே இருக்கின்றன.

இங்கே இன்னொரு விஷயமும் காலங்காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. ஆணாதிக்கம், பெண்ணடிமை விஷயத்துக்குள் அம்மாவையும் மகனையும், அப்பாவையும் மகளையும் எவரும் குறிப்பிடுவதே இல்லை. மாறாக, கணவன் மனைவியைக் கொண்டும், அலுவலக, சமூகச் சூழல்களைக் கொண்டும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சிந்தனையின் ஆழங்கள் மாறுவதும் ஆரோக்கியமான சூழலைத் தரும்.

அன்பு எப்படி கொடுத்துப் பெறுகிற பண்டமாற்று இல்லையோ அப்படித்தான் சுதந்திரமும் விடுதலையும். இது உணர்வு சம்பந்தப்பட்டது. அந்த உணர்வின் அடர்த்தியைப் புரிந்து கொண்டதால்தானோ என்னவோ அன்புக்கு அடிமையாதல் என்கிற மனோநிலையும் இங்கே கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

அடுப்பு... பெண்கள்... படிப்பு என்று சொன்ன காலமெல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டது. ‘படிக்கிற புள்ளையை எதுக்கு அடுப்படில வேலை வாங்கறே’ என்று கேட்கிற காலம் இது. வருடம் தவறாமல், பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் முதலிடம் பிடிப்பது பெண்கள்தான். உடனே சில ஆண்கள் ‘நம்மளைப் பித்துப் பிடிக்க வைச்சிட்டு, அவங்க மட்டும் ஸ்கோர் பண்ணிடுறாங்கப்பா’ என்று ஆதங்கப்பட்டுப் பொருமுகிறார்கள். நாம் பித்தாகும் நிலைக்கு ஆளாகாமல் இருப்பது நம் கையில்தானே இருக்கிறது?

‘சீவி முடிச்சு சிங்காரிச்சு’ என்ற பாட்டுக்கெல்லாம் இப்போது எவர் செவிகளிலும் விழுவதே இல்லை. ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்பதெல்லாம் போய்விட்டது. ‘இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பள. இங்கிலீஷு படித்தாலும் இன்பத்தமிழ் நாட்டிலே’ என்று எம்.ஜி.ஆர். இப்போது இருந்து பாடியிருந்தால், வாட்ஸ் அப், டிவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரையும் என்று ஒருவழி ஆக்கியிருப்பார்கள்.

பொருளாதார சுதந்திரம் பெண்களுக்குக் கிடைக்கக் கிடைக்க, ஒருவித இறுக்கம் தளர்ந்துவிடுகிறது. ஆனால் அதேநேரம், ‘மகளிர்மட்டும்’ நாசர்களின் கழுகுப் பார்வை கொடுமைகள் ஆக்கிரமித்துவிடுகின்றன. வேலை நிமித்தமாகவும் வேலையில் உள்ளவர்களின் நிமித்தமாகவும் சங்கடக் கவலைகளால் மன அழுத்தங்களுக்கு ஆளாகும் பெண்களின் சதவிகிதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 & 15 வருடங்களுக்கு முன்பு, ஈவ் டீசிங் மூலம் வலியும் வேதனையும் பெண்களுக்கு அதிகம் இருந்தது. சரிகாக்கள் இறந்து போன அவலங்களும் நிகழ்ந்தன. இதனால் கடும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதேகாலகட்டத்தில், காதலை ஏற்க மறுத்த காரணத்துக்காக முகத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களின் அவலங்கள், இன்றும் நம் மனங்களில் தழும்பாய் பதிந்துவிட்ட சோகங்கள்!

இப்போது ஈவ்டீசிங்க் குறைந்துவிட்டது. ஆசிட் வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆனால் அப்பாடா என்றிருக்க விடாமல், காதலித்தவள், தன்னைக் காதலிக்கவில்லை என்று கொன்றுபோடுகிற அரக்கத்தனங்கள் மிரட்டியெடுக்கின்றன. ஒருபக்கம் ஆணவக் கொலைகளாலும் இன்னொரு பக்கம் காதலை ஏற்காத சுவாதிகளின் கொலைகளும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

வக்கிர மனங்கள் நந்தினிக்களையும் ஹாசினிக்களையும் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன. பாலியல் திருமணங்கள் நடந்ததையே தவறு என்று சொல்கிற நாம், இந்தப் பாலியல் வன்கொடுமைகளால் ரத்த அழுத்தம் எகிறி, குமுறிக்கொண்டிருக்கிறோம்.

கல்வியால் கிடைத்த அறிவும், அறிவால் கிடைத்த வேலையும், வேலையால் கிடைத்த உத்தியோகப் பெருமையும், பெண்ணுக்கு உரிய சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்கவில்லையெனில் இன்னும் கடக்கவேண்டிய தூரம் எவ்வளவு? வெற்றியை அடைய, நிம்மதியை அடைய எதுதான் வழி என்கிற கேள்விகள் எழுகின்றன.

ஒழுக்கம் என்பது வேறு. ஒழுங்கு என்பது வேறு. ஆனால் இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு செய்கிற எல்லாச் செயல்பாடுகளும் வெற்றியைத் தரும். நிம்மதியைக் கொடுக்கும். அமைதியை வழங்கும். பேரன்பைப் பெருக்கும்!

பெண்மையைக் கொண்டாடுவோம், எல்லாநாளும்! பெண்களைப் போற்றுவோம், எப்போதும்!  பெண் என்பவர்களை, எதிர்வீட்டு, அக்கம்பக்கத்தாராக மட்டுமே பார்க்கிறோம். நம் உறவுக்கூட்டங்களில் உள்ள பெண்ணையும் உலகின் பெண்களையும் பாகுபடுத்திப் பார்க்காமல், பரஸ்பரமாய் பார்ப்பதில்தான், நம் பரந்த மனத்தை, இன்னும் விசாலமானதாக நாமே உணரமுடியும்.

ஒழுக்கம் உயிருக்குச் சமமாகப் போற்றப்படுகிற நல்லுலகில், தன்னொழுக்கத்துடன் ஒவ்வொருவரும் வாழ்ந்தால் ஆணென்ன, பெண்ணென்ன? எல்லோரும் ஓரினம்தான்! எப்போதும் மார்ச் எட்டுதான்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close