[X] Close

எடை குறைப்பு சமையலறையில் தான் தொடங்குகிறது


weight-loss-starts-in-the-kitchen

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 Aug, 2018 12:31 pm
  • அ+ அ-

26 வயதான, டெல்லியைச் சேர்ந்த தாமினி மிஷ்ரா மக்கள்தொடர்புத் துறையில் வேலை செய்பவர். குழந்தையாக தான் எப்படி அதிக பருமனோடு இருந்தேன் என நினைவுகூர்கிறார். வீட்டில் செய்த உணவு, வெளி உணவு என நாள் முழுவதும் உணவுக்குப் பின்னால் ஓடிய உணவு விரும்பி அவர். 

"சாப்பிடும் அளவைப் பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. எனது உலகம் உணவில் ஆரம்பித்து, உணவில் முடிந்தது". பருவத்தில், இன்னும் கூடுதலாக எடை கூட ஆரம்பித்தார் தாமினி. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே 100 கிலோ எடையைத் தொட்டார். 5 அடி 6 அங்குலம் உயரத்தில் அது இன்னும் கூடுதலாகவே தெரியும். 

தாமினி தனது உடல் குறித்து எவ்வளவு வருத்தப்பட்டிருக்கிறார் என்பதை இன்னும் நினைவில் வைத்துள்ளார். "எனக்கான உடைகள் ஆண்கள் பகுதியில் மட்டுமே கிடைக்கும். டபுள் எக்ஸ் எல் அளவு உடையே எனக்குப் பொருந்தும்". இந்த நிலையை இப்படியே விடக்கூடாது என்று நினைத்த தாமினி, ஜிம்மில் இணைந்தார். எடை குறைப்பு என்பது சரியான உணவுடன், சரியான உடற்பயிற்சி சேர்ந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பதை தாமினியின் பயிற்சியாளர் அவருக்கு புரிய வைத்தார்.

எவ்வளவு கடும் பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாடு இல்லாமல் எடை குறைப்பு சாத்தியமில்லை என்பது புரிந்தது. 
மெதுவாக அவரது உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. அது தாமினிக்கு  நல்ல ஊக்கமாக இருந்தது. "நான் ஒரு இலக்கை நிர்ணயிப்பேன். சரியாக அந்த எடைக்கு நான் குறையும் முன்பு, அதை விட ஒரு இன்ச் குறைவான அளவில் ஜீன்ஸ் வாங்கி வைப்பேன். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்பட என்னை நானே ஊக்குவித்துக் கொண்டேன்" என்கிறார். 

சமூக வலைதளங்களிலும் தனது உருமாற்றம் தொடர்பான புகைப்படங்களை தாமினி பகிர ஆரம்பித்தார். "எனது நண்பர்கள் அதைப் பார்த்து, இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது அது இன்னும் என்னை ஊக்குவித்தது. மற்றவர்களும் ஆரோக்கியமாக இருக்க நான் உந்துதலாக இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

நான் எனது எடை குறைப்புக்கான பயணத்தைத் தொடங்கிய போது, அப்படி எடை குறைத்த அனுபவங்கள் பற்றிய எண்ணற்ற பதிவுகளை படித்தேன். இது எனக்கு உதவியது. மெய்நிகர் உலகிலும் எனக்கென ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்கியது போல இருந்தது".

ஆரம்பத்தில் தாமினி ஒரு நாளைக்கு ஒரு முறை, அதிகாலையில் உடற்பயிற்சியை ஆரம்பித்தார். தனது உடற்பயிற்சியின் பலனை பார்த்தபிறகு, நாளைக்கு இரண்டு முறை என மாற்றினார். 

ஆனால் கடைசியில், சரிவிகித உணவும், சரியான உணவுத் தேர்வுமே, நிர்ணயித்த எடைக்கு தன்னை எடுத்துச் என்றாதக் கூறுகிறார்.

"முதல் மாசத்திலேயே நான் 6.5 கிலோ எடை வரை குறைத்தேன். எனது நாளை ப்ளாக் காஃபியுடன் தொடங்கி, ஜிம்முக்கு சென்றுவிடுவேன். பின் புரதச் சத்து அதிகமிருக்கும் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என சாப்பிடுவேன். 7.30 மணிக்குள் இரவு உணவை முடித்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன். இன்று வரை அது தொடர்கிறது.

நான் பருமனாக இருந்தபோதும் தொடர்ந்து நீச்சல் பயிற்சி, நடன பயிற்சி செய்து வந்தேன். ஆனால் ஒழுங்காக சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் எனது உடலில் மாற்றத்தைக் கண்டேன். இப்போது என் உணவில் புரதம் அதிகமாக சேர்க்கிறேன். வார இறுதிகளில் வெளியில் சாப்பிடும்போது கூட நான் சரியான உணவையே தேர்வு செய்கிறேன்" என்கிறார் ஒன்றரை வருடத்தில் 111 கிலோவிலிருந்து 62 கிலோவாக உருமாறிய தாமினி. 

- லச்மி தெப் ராய், தி இந்து ஆங்கிலம் | தமிழில் கார்த்திக் கிருஷ்ணா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close